You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா மறைந்த பிறகு அமைச்சர்களுக்கு சுதந்திர வெளி கிடைத்திருக்கிறது - மாஃபா பாண்டியராஜன்
- எழுதியவர், மஃபா பாண்டியராஜன்
- பதவி, தமிழ் ஆட்சி மொழி, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
ஜுன் 12, 2013. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்றுதான் முதன் முதலாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தேன். என்னுடைய விருதுநகர் தொகுதியின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக சந்தித்தேன். ஆனால், அன்று முதலே கட்சி வேஷ்டியைக் கட்ட ஆரம்பித்துவிட்டேன் (அப்போது பாண்டியராஜன் அதிகாரபூர்வமாக தே.மு.தி.கவில் இருந்தார்).
ஒரு நிமிடம்தான் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் 15 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்தார்.
அதற்குப் பிறகு, நான் உடனடியாக அ.தி.மு.கவில் சேரவில்லையென்றாலும் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்க ஜெயலலிதா என்னை அனுமதித்தார். நான் ஊடகங்களில் பேசிய பிறகு, அடுத்த நாள் நான் பேசிய விஷயங்களைப் பற்றிய கருத்துகளைச் சொல்வார். வேறு யாருக்கும் இந்த வாய்ப்பை அவர் கொடுக்கவில்லை. அது என் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாய்ப்புத் தர அவரால் முடியவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நான் நேரில் சந்தித்தபோது, "நாடாளுமன்றத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா அல்லது இங்கே என்னோடு பணிபுரிகிறீர்களா?" என்று கேட்டார். நான் அவரோடு பணிபுரியவே விரும்புவதாகவே சொன்னேன். பிறகு விருதுநகரிலிருந்து மாற்றி, ஆவடியில் போட்டியிட வாய்ப்பளித்தார்.
2016 தேர்தலில் வென்ற பிறகு, என்னை அமைச்சரவையில் இணைத்து பள்ளிக்கல்வி, விளையாட்டு, அருங்காட்சியகம், தொல்லியல்துறை என பல துறைகளை எனக்குத் தந்தார். அதுபோல ஜிஎஸ்டி கவுன்சிலிலும் நியமித்தார். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராக நியமித்தார்.
முதன்முதலில் நான் சட்டமன்றத்தில் பேசும்போது, அது கன்னிப் பேச்சாக இருந்தாலும் அதற்கு அவர் பதில் சொன்னார். இரண்டாவதாக, பட்ஜெட் குறித்து நான் பேசியதற்கு ஆறு முறை குறிக்கிட்டு பதிலளித்தார்.
டைட்டன் நிறுவனத்தில் தமிழக அரசு முதலீடு செய்திருந்ததைத் திரும்பப் பெற வேண்டுமென்று கூறினேன். அதனை அவர் மறுத்துப் பேசினார். சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு தருவதாகச் சொன்ன 200 கோடி ரூபாய் கடனை முதலீடாக வழங்க வேண்டும் என்று சொன்னதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். என்னைப் போன்ற ஒரு இளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அவர் பதிலளித்தது எனக்குக் கிடைத்த கௌரவம்.
கட்சியில் நான் சேர்ந்த பிறகும் எனக்கு சட்டமன்றத்தில் பல வாய்ப்புகளை அவர் கொடுத்தார். ஜிஎஸ்டி குறித்து முதன் முதலில் பேச வாய்ப்பளித்தார். அதேபோல நான் எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் பேச வாய்ப்பளித்தார். அப்போதும் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதா எனக்காகப் பேசினார்.
ஜெயலலிதா இறந்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையில் மூன்று மாதங்கள் இருந்தேன். அதன் பிறகு தர்மயுத்தத்தில் இறங்கியதேகூட, ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றிவிட்டு, ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்லக்கூடாது என்பதற்காகத்தான். அவருடைய நினைவுக்கு செய்யக்கூடிய சரியான அஞ்சலி அதுதான் என நினைத்தேன்.
ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால், கட்சியிலிருந்து யாரும் இப்படி பிரிந்து போயிருக்க வாய்ப்பில்லை. அதேபோல, மத்தியில் இருக்கும் ஆட்சி நம்மை எப்படிப் பார்க்கிறது என்பதும் மாறியிருக்கிறது. ஜெயலலிதா இருக்கும்போது மோடியே போயஸ் கார்டன் வந்து பார்த்து, ஆசி பெற்றுச் சென்றார். அப்படி ஒரு நிலை இப்போது இல்லை என்பது நிச்சயம் வருத்தம்தான். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்,இந்திய அளவில் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்திருப்பார். அந்த நிலையை அடைய எடப்பாடி பழனிச்சாமி முயன்றுகொண்டிருக்கிறார். அவர் அந்த இடத்திற்குச் செல்ல இன்னும் சிறிது காலம் பிடிக்குமென நினைக்கிறேன்.
மேலும் பல சந்தர்ப்பங்களில் அவருடைய இன்மையை உணர்ந்திருக்கிறேன். இந்தியா டுடே, ஹைதராபாதில் உள்ள பப்ளிக் அஃபையர்ஸ் கவுன்சில் போன்றவை தமிழகத்திற்கு விருதளிப்பதை பார்க்க அவர் இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. 2014ல் இந்தியா டுடே தமிழகத்தை சில பிரிவுகளில் முதன்மை மாநிலமாகத் தேர்வுசெய்தபோது அவர் எவ்வளவு பெருமைப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். அதே நிலையை இப்போது இரண்டு வருடங்கள் கழித்தும் பெற்றிருக்கிறோம் என்பது சந்தோஷமாக இருக்கிறது. இது அவருக்கு நாங்கள் செலுத்தும் நல்ல அஞ்சலி.
சரக்கு மற்றும் சேவை வரி விவகாரத்தில் தமிழகம் ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக பலரும் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள். ஆனால், இது மோடியுடைய ஜிஎஸ்டியோ, பா. சிதம்பரத்தின் ஜிஎஸ்டியோ அல்ல. இறுதியில் அமல்படுத்தப்பட்டது ஜெயலலிதா வடிவமைத்த ஜிஎஸ்டி. 13 விஷயங்களைப் பட்டியலிட்டு அவற்றை மாற்ற வேண்டுமென ஜெயலலிதா கூறினார். அவை ஒவ்வொன்றையும் மாற்ற வைத்தேன். அருண் ஜேட்லி கடைசி நாளில் பேசும்போதுகூட, தமிழக அமைச்சரின் குறுக்கீடுகள் இந்த சட்டத்தை மறு வடிவமைப்பு செய்திருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு அவரது பங்களிப்பு இருந்தது. ஆகவே, ஜெயலலிதா இருந்திருந்தாலும் இதே ஜிஎஸ்டி, இதே உதய் போன்றவை நடந்திருக்கும்.
ஜெயலலிதா இருந்திருந்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற ஒரு நடவடிக்கையை எந்த மாநிலத்தையும் கலந்து பேசாமல் மோடி செய்திருக்க மாட்டார். மாநிலங்களிடம் கலந்து பேசியிருப்பார். மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லாமல், மத்தியிலிருந்து ஒரு முடிவெடுப்பது என்பது நடந்திருக்காது.
சுதந்திர வெளி
ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு அமைச்சர்களுக்கு ஒரு சுதந்திர வெளி (window of freedom) என்பது கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட சுதந்திரம் மிக அதிகமென நினைக்கிறேன். அவர் இருந்தபோது கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. யாரிடம் பேச வேண்டுமென்றாலும் அனுமதி வாங்க வேண்டும். பூங்குன்றனிடம் சொல்ல வேண்டும். தலைமைச் செயலகத்தில் அவருடைய செயலர்கள் நான்கு பேர் இருப்பார்கள். அவர்களிடம் சொல்லி அனுமதி பெற வேண்டும்.
அந்தக் கட்டுப்பாடு இப்போது இல்லையென்பதால் அமைச்சர்கள் தாங்களாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், துவக்கத்தில் சில தவறுகள் நடக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த தகவல்களை வெளிப்படையாக ஊடகங்களிடம் சொல்வது என்பது அவர் இருந்தபோது நடக்கவில்லை. ஆகவே நூறு பேச்சுகளை அமைச்சர்கள் பேசினால் அதில் ஒன்றிரண்டு தவறாக இருக்கலாம். ஆனால், அதை அவர்கள் சரிசெய்து வருகிறார்கள். இப்போது 33 அமைச்சர்களும் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். அந்த சுதந்திரம் முன்பு இல்லை. அந்த சுதந்திரம் புதிதாக வரும்போது சில விஷயங்கள் தவறாவதை பொருட்படுத்தக்கூடாது. அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி, மீண்டும் அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டுவிடக் கூடாது.
கட்சியிலும் ஆட்சியிலும் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியம் என்று பார்த்தால், இரட்டை இலை, கட்சிக் கட்டமைப்பு, அவர் அமல்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம். அவர் அமல்படுத்திய பல திட்டங்களை இனி யார் வந்தாலும் மாற்ற முடியாது. பெயர்களை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம். அம்மா ஸ்கூட்டர் திட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அம்மா மொபைல் திட்டம், அம்மா வென்சர் கேபிடல் திட்டம் போன்றவை மிக முக்கியமானவை. 'அம்மா ஆட்சியின் மாதிரி' இந்தியாவுக்கே மாதிரியாக அமைந்தது.
மேலும் பெண்கள் மத்தியில் ஒரு அழுத்தமான முத்திரையை பதித்துச் சென்றிருக்கிறார். அ.தி.மு.க. என்றால் அது பெண்களுக்கான கட்சி என்பதை யாரும் எளிதில் மாற்றிவிட முடியாது.
கட்சிக்குள்ளும்கூட, பலரையும் ஒருங்கிணைத்து எல்லோருக்குமான கட்சியாக இதனை ஜெயலலிதா வளர்த்தெடுத்தார். அந்தக் கட்டமைப்பை இன்னும் பல தலைமுறைக்கு யாரும் மாற்ற முடியாது என நினைக்கிறேன்.
(பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் கூறியபடி).
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்