26/11 மும்பை தாக்குதல்: நடந்தது என்ன? விவரிக்கும் காவல்துறை அதிகாரி

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி

அந்த டொயோட்டா SUV ரக காருக்குள் துப்பாக்கித் தோட்டா பதிந்த தடயங்களும் மற்றும் ரத்தத்தின் வாடைதான் இருந்தது.

நொறுங்கி இருந்த போலீஸ் வாகனத்திற்குள் இருந்த தலைமை காவலர் அருண் ஜாதவ், தன் வலது கை மற்றும் இடது தோளில் துப்பாக்கிச்சூடு காயங்களால் ரத்தம் வழிய தன் இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தார்.

இரண்டு துப்பாக்கிதாரிகள் ஏகே 47 ரக துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டதையடுத்து, மூன்று காவலர்களில் இருவர் உயிரிழக்க, ஒருவர் மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

நடு இருக்கையில் இருந்த அந்நகரத்தின் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் மூத்த காவலர், நெஞ்சில் குண்டு காயங்களுடன் கார் ஜன்னலில் மோதி உயிரிழந்தார்.

வாகனத்தின் முன்பு அமர்ந்திருந்த ஓர் அதிகாரி மற்றும் காவல்துறை ஆய்வாளரும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டனர். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மூத்த ஆய்வாளர் ஒருவரும் கார் ஸ்டீரிங் மீது சரிந்து விழுந்திருந்தார். அவர் அந்நகரத்தில் உள்ள தாதாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு பெயர் போனவர்.

வெளியே, மும்பை நகரத்தின் இருள் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தது.

அது 2008 நவம்பர் 26 ஆம் தேதி மாலை. இந்தியாவின் நிதி மற்றும் பொழுதுபோக்கு தலைநகரான மும்பையில், இந்த உலகம் கண்டிராத பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தது.

பாகிஸ்தானை சேர்ந்த, ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், கடல் வழியாக வந்து, முதலில் சிறு குழுக்களாக பிரிந்தனர். வாகனங்களை கடத்திய அவர்கள், முக்கிய ரயில் நிலையம், இரண்டு சொகுசு ஹோட்டல்கள், யூத கலாசார மையம் மற்றும் மருத்துவமனைகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினர். நகரத்தை 60 மணி நேர முற்றுகையிட்டதில், 166 பேர் உயிரிழந்தனர். அதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகளும் சிக்கலுக்கு உள்ளானது.

132 ஆண்டுகள் பழமையான பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இரண்டு துப்பாக்கிதாரிகளை கொல்ல, ஜாதவ் மற்றும் ஆறு பிற காவல்துறை அதிகாரிகளும், வெள்ளை நிற SUV-இல் விரைந்தனர். ஆனால், அங்கிருந்த 367 நோயாளிகளையும் காப்பாற்றும் நோக்கில், அங்கிருந்த ஊழியர்கள் நோயாளிகளின் வார்டுகளை பூட்டினர்.

மருத்துவமனைக்குள் போலீசார் நுழைய, மேல்மாடியில் இருந்து வந்த துப்பாக்கிச்சூடுகளை சமாளிக்க, மூத்த அதிகாரி ஒருவர் சுடத் தொடங்கினார். அந்த இடத்தில் இருந்து வெளியேறிய துப்பாக்கிதாரிகள், மருத்துவமனைக்கு பின்னால் இருந்த புதர்களில் மறைந்திருந்தனர். மங்கலான ஹெட்லைட்டுகள் மற்றும் சிவப்பு விளக்கு வைத்த SUV அங்கு மெதுவாக சென்றது.

சரியாக பதுங்கியிருந்த துப்பாக்கிதாரிகள், ஒரு சில நொடிகளில், அந்த வாகனத்தை பார்த்து இரண்டு முறை சுட்டனர். அப்போது ஜாதவால் மட்டுமே திரும்ப எதிர்வினையாற்ற முடிந்தது. கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த அவர் துப்பாக்கிதாரிகளை நோக்கி 3 முறை சுட்டார்.

உடனடியாக, காருக்குள் முன் மற்றும் நடுஇருக்கையில் உயிரிழந்த 3 அதிகாரிகளையும் துப்பாக்கிதாரிகள் தெருவில் இழுத்து போட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி மட்டுமே குண்டு துளைக்காத உடை (Bullet proof vest) அணிந்திருந்ததாக துப்பாக்கிதாரி ஒருவர் கிண்டலடித்துள்ளார். உடனே காரின் பின்னால் வந்து மீதமுள்ள 3 பேரையும் வெளியே எடுக்க அவர்கள் முயற்சித்த போது, கார் கதவை திறக்க முடியவில்லை.

வண்டியில் இருந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, மொஹமத் அஜ்மல் அமீர் கசாப் மற்றும் இஸ்மாயில் கான் இருவரும், காரில் ஏறிச் சென்றனர்.

ஆனால், உண்மையில் அதில் ஒருவர் உயிருடன் இருந்திருக்கிறார்; மற்றொருவர் மெதுவாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். மீதமிருந்த இரண்டு பேர் இறந்திருந்தனர். அப்போது திடீரென்று அங்கிருந்த அமைதியை உடைக்கும் வகையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காவலர் யோகேஷ் பாட்டில் பாக்கெட்டில் இருந்த அலைப்பேசி அலறியது. இந்த சம்பவம் நடைபெறும் முன் தன் அலைப்பேசியை சைலன்ட் மோடில் போட அவர் மறந்துவிட்டார்.

காரின் முன் பயணர் இருக்கையில் அமர்ந்திருந்த கசாப், திரும்பி, அவர் மீது மீண்டும் சுட்டார். நடு இருக்கையை துளைத்து கொண்டு சென்ற குண்டு, பாட்டிலை கொன்றது.

ரத்த சிதறல் மற்றும் பிணங்களுக்கு இடையில் ஜாதவ் மட்டும் அங்கு உயிருடன் இருந்தார்.

"கசாப் அவரது துப்பாக்கியை சற்று திருப்பியிருந்தாலும் கூட, நான் இறந்திருப்பேன்."

சாவு வரை சென்ற அனுபவம் உள்ளவர்கள், தங்கள் உடலில் பற்றின்மை மற்றும் அமைதியான நிலையை உணர்வார்கள் என்று கூறப்படும். ஆனால், மும்பையின் அபாயகரமான பகுதிகளில் குற்றங்களை எதிர்த்து போராடி தன் நாக்கில் வெட்டு வாங்கிய ஜாதவ், அவ்வாறு எந்த உணர்ச்சியும் தனக்கு வரவில்லை என்றார்.

"என் குடும்பம் பற்றிய நினைவுகள்தான் என் மனதில் தோன்றியது. இறுதியாக என் காலம் முடிந்து விட்டதாக நினைத்தேன். நான் விரைவில் உயிரைவிட போகிறேன்" என்று தனக்கு தானே கூறிக் கொண்டதாக தெரிவிக்கிறார் தற்போது 51 வயதாகும் ஜாதவ்.

"என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் என் பெற்றோர்களை நினைத்துக் கொண்டேன். இதுதான் முடிவு"

தரையில் குண்டுகள் நிறைந்த தானியங்கி துப்பாக்கியை எடுக்க முயற்சித்ததாக கூறும் ஜாதவ், தன் தோளில் அடிபட்டு இருந்ததால் அதனை எடுப்பதற்கான பலம் இருக்கவில்லை என்று கூறுகிறார். வாகனத்தில் ஏறும் முன் தன் 9mm துப்பாக்கியை மற்றொருவரிடம் கொடுத்ததற்காக வருத்தப்படுவதாக தெரிவிக்கும் அவர், "துப்பாக்கி இருந்திருந்தால், அவர்களை எளிமையாக கொன்றிருப்பேன்" என்றார்.

எந்த திசையில் செல்கிறது என்று தெரியாமல் அந்த வாகனம் அதிவேகமாக ஓட்டப்பட்டது. போகும் போது, சாலைகளில் நின்று கொண்டிருந்தவர்களை துப்பாக்கிதாரிகள் சுட, பதற்றம் மேலும் அதிகரித்தது. போலீசார் அந்த வாகனத்தை நோக்கி சுட்டதில், காரின் பின் டயரை குண்டுகள் தாக்கியது.

பஞ்சரான டயர் தேய்ந்து போகும் வரையில், 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிதாரிகள் காரை ஓட்டினர். அந்த காரை கைவிட்டு, ஒரு ஸ்கோடா வண்டியை நிறுத்தி, வாகனத்தில் இருந்த மூவரையும் கீழே இறக்கி, அதனை கடத்தி நகரத்தின் அகலமான கடற்கரை பாதையை நோக்கி ஓட்டிச் சென்றனர்.

அங்கிருந்த போலீஸ் சாவடியில் மாட்டிக் கொண்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் ஒருவரும், இஸ்மாயிலும் உயிரிழக்க, கசாப் உயிருடன் பிடிபட்டார்.

"நான் இறந்தது போல நடித்து, வாகனத்தின் பின் இருக்கையில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்கிறார் ஜாதவ்.

வயர்லஸ் ரிசீவரை எடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார் ஜாதவ். தாம் பதுங்கியிருந்தது, சாலையில் போடப்பட்ட போலீஸாரின் உடல்கள், அனைத்தையும் கூறி உதவி கோரினார். ஆம்புலென்ஸ் வந்த பிறகு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த அன்று, ஜாதவின் மனைவியும், அவரது பள்ளி செல்லும் மூன்று குழந்தைகளும் தாக்குதல் குறித்த செய்திகளை இரவு முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தெரிய வந்தவுடன், அவர்கள் அலறிப்போய் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

அடுத்த நாள் அதிகாலையில், தன் மனைவியிடம் தொலைப்பேசியில் பேசினார் ஜாதவ். அதனையடுத்து தன் கை மற்றும் தோளில் உள்ள 5 குண்டுகளை எடுக்க அவர், அறுவை கிசிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர் எந்த அதிர்ச்சிக்கும் உள்ளாகவில்லை என்பதை பார்த்து வியந்தனர். இதற்கு முன்னரும் சில ரவுடிகளை துரத்தியதில் குண்டு காயங்கள் பட்டு, தப்பித்ததாக அவர் கூறினார். அடுத்த 7 மாதங்களில் அவர் பணிக்குத் திரும்பினார்.

கசாப் தண்டனை பெறுவதில் முக்கிய சாட்சியாக இருந்தார் ஜாதவ். இரண்டு ஆண்டுகள் கழித்து மே 2010ஆம் ஆண்டு, பூனே நகர சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டார்.

தன் துணிச்சலுக்காக ஜாதவ் பல விருதுகளை பெற்றார். அவரது மூத்த மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு, மற்ற இருவரும் அதாவது அவரது மகனும் மற்றொரு மகளும் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு பிறகு, அவருக்கு வாழ்க்கை பெரிதாக மாறிவிடவில்லை. பணியில் இன்றும் ரவுடிகளையும் கொள்ளையர்களையும், கார் திருடர்களையும் துரத்தி வருகிறார். இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு, அவரது பாதி செயலிழந்த கை, வலியை ஏற்படுத்துகிறது.

தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த இன்று, ஜாதவின் நேர்காணல் இருக்கும் வீடியோ, கேட்வே ஆஃப் இந்தியா அருகில் ஒலிபரப்பப்படும்.

ஆனால், கடினமான மற்றும் எதற்கும் கவலைப்படாத ஜாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையில் இருக்க மாட்டார்கள். அவர்கள் வட இந்தியாவில் உள்ள குரு ஆசிரமத்திற்க்கு ஆசிகள் பெறவும் அமைதியை தேடவும் சென்றுள்ளனர்.

"அப்படி ஒரு சம்பவத்தை பார்த்த பிறகு மனதில் அமைதி நிலவுவது சற்று கடினமானது. இரவுகளில், சில நேரம் நான் எழுந்துக் கொள்ளும் போது, என்னால் மீண்டும் தூங்க முடிவதில்லை. சில நினைவுகள் திரும்பி வருகின்றன. அந்த படுகொலையில் நான் எப்படி உயிருடன் வந்தேன் என்று எனக்கு வியப்பாக இருக்கும். அது ஒரு அதிர்ஷ்டமா? விதியா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றா? எனக்கு இதற்கு பதில் கிடைக்காது என்று நினைக்கிறேன்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :