You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஜ புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு விடிய விடிய சப்பாத்தி சுட்டு அனுப்பிய கிராம மக்கள்
முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர்: விடிய விடிய சப்பாத்தி சுட்ட கிராம மக்கள்
கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, இரு கிராமத்தினர், விடிய விடிய சப்பாத்திகளை சுட்டுக் கொடுத்ததாக தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரி மற்றும் இருசனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தங்கள் பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்மூலம், அரிசி, பருப்பு, நுாடுல்ஸ் பாக்கெட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, துண்டுகள் என, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பொருட்களை சேகரித்தனர்.
நேற்று முன்தினம் மாலை, அப்பகுதி பெண்கள், பெரியவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் பசியாற்ற, சப்பாத்திகளை தயார் செய்து தர முன்வந்தனர். வீடு வீடாக கோதுமை மாவு சேகரித்து, வீடுகளிலிருந்து எரிவாயு அடுப்பு, தோசைக் கற்களை எடுத்து வந்து, வீதியில் வைத்து, விடிய விடிய, 1,000 சப்பாத்திகளுக்கு மேல் சுட்டனர். நேற்று காலை, நிவாரண பொருட்களுடன், சப்பாத்தியை அனுப்பியதாக விவரிக்கிறது இந்நாளிதழ் செய்தி.
தினந்தந்தி: 200 ஆண்டுகால தடை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, 200 ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது என்பது இப்போது தெரிய வந்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் ராணுவ பிரிவில், அதிகாரிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் பெஞ்சமின் சுவைன் வார்டு, பீட்டர் எயர் கான்னர் ஆகிய இருவரும் 5 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தி, 'மெமோய்ர் ஆப் தி சர்வே ஆப் தி ட்ரவாங்கூர், கொச்சின் ஸ்டேட்ஸ்' (திருவாங்கூர், கொச்சி மாநிலங்களின் ஆராய்ச்சி நினைவுகள்) என்ற தலைப்பில் ஆய்வு நூல் எழுதி, 1893, 1901 ஆண்டுகளில் 2 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
அந்த புத்தகத்தில், "வயதான பெண்கள், சிறிய பெண்கள் (10 வயதுக்குட்பட்டவர்கள்) சபரிமலைக்கு செல்லலாம். ஆனால் பருவ வயதை அடைந்து, குறிப்பிட்ட காலகட்டம் வரையில் அங்கு பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பகுதியில் எல்லா பாலுறவுகளும் தெய்வத்துக்கு (அய்யப்பனுக்கு) வெறுப்பை ஏற்படுத்துவதாகும்" என கூறப்பட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி கூறுகிறது.
தி இந்து (ஆங்கிலம்) : மக்களை சோம்பேறிகளாக்கிய இலவச திட்டங்கள் - உயர்நீதிமன்றம்
விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் இலவச மிக்ஸி மற்றும் கிரைன்டர்களை எரிப்பது போன்ற காட்சிக்கு ஆளும் அதிமுக எதிர்ப்பு தெரிவிக்க, அக்காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், பொருளாதார நிதி நிலையை கருத்தில் கொள்ளாமல் மாநில அரசுகள் இவ்வாறு இலவசங்களை வழங்கும் கலாசாரம், மக்களை சோம்பேறியாக்கி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது என தி இந்து நாளிதழ் செய்தி கூறுகிறது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாது பொது விநியோகத்திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசி அரிசி வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூசி அமர்வு இவ்வாறு கூறியுள்ளதாக அச்செய்தி விவரிக்கிறது.
தினமணி: கஜ புயல் - விரக்தியில் உயிரிழந்த விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கஜா புயலால் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் மன உளைச்சலில் இரு விவசாயிகள் வியாழனன்று உயிரிழந்ததாக தினமணி நாளதிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரத்தநாட்டை அடுத்த சோழன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சி. சுந்தரராஜ் (57) கடந்த 30 ஆண்டுகளாக 5 ஏக்கரில் தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார். இது ஒன்றே அவரது வருமானம். கஜா புயலால் இவர் தென்னந்தோப்பில் இருந்த 400 தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்து பெரும் சேதமடைந்தன. இந்த விரக்தியில் இருந்த சுந்தரராஜ், விஷம் குடித்து உயிரிழந்தார்.
இதேபோல ஒரத்தநாடு வட்டம் கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவாஜி (52), தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் தென்னை சாகுபடி செய்திருந்தார். புயலால் அனைத்து மரங்களும் சேதமடைந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் சிவாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :