You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரீத்தி ஜிந்தா #MeeToo இயக்கத்தை கொச்சைப் படுத்தியதாக கொந்தளிப்பு
நடிகை பிரீத்தி ஜிந்தா ஒரு காணொளிப் பேட்டியில் வெளிப்படுத்திய கருத்து #MeeToo இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவதாகக் கூறி சமூக வலைத் தளங்களில் அவருக்கு எதிராக பலர் கொந்தளித்தனர்.
ஆனால், தமது பேட்டி மோசமாக எடிட்டிங் செய்யப்பட்டதால் தமது கருத்து சர்ச்சைக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.
#MeeToo என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக சமூக ஊடகத்தில் எழுதும் இந்த இயக்கம் கடந்த ஆண்டு ஹாலிவுட் திரையுலகத்தில் தோன்றியது.
கடந்த சில மாதங்களில் இந்த இயக்கம் இந்தியாவில் வேகம் பிடித்தது. திரைப்பட நடிகர்கள், கவிஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல பெண்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு நடிகருக்கும் இந்த இயக்கம் தொடர்பில் என்ன கருத்து என்பதை அறிய ஆர்வம் ஏற்பட்டது.
தற்போது பாலிவுட்டில் அவ்வளவாக படங்களில் நடிக்காத பிரீத்தி ஜிந்தா சில ஆண்டுகளுக்கு முன்புவரை சல்மான் கான், ஷாரூக்கான், அமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். எனவே இந்த இயக்கம் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிவதில் ஒரு சுவாரசியம் இருந்தது.
சர்ச்சைக்குள்ளான தமது கருத்துகளை பாலிவுட் ஹங்கமா என்ற இணைய தளத்துக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் பிரீத்தி ஜிந்தா.
"நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறீர்களா?" என்று கேட்கப்பட்டபோது, கலகலவென்று சிரித்த அவர், "நான் அப்படி துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை. அப்படி உள்ளாகி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது உங்களுக்குச் சொல்ல என்னிடம் பதில் இருந்திருக்கும்" என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், "இது மிகவும் பொருத்தமான கேள்வி. நீங்கள் எப்படி நடத்தப்பட விரும்புகிறீர்களோ, அப்படி நடத்தப்படுவீர்கள்" என்று கூறினார்.
இந்த கருத்து பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
பலரும் விமர்சித்த பிரீத்தியின் இந்தப் பேட்டி சமூக ஊடகத்தில் வைரலாகப் பரவியது.
பேட்டியின் தொடக்கத்தில் இந்தியாவில் மீடூ இயக்கம் தொடங்கியது முக்கியமானது என்று கூறிய அவர், பிறகு, பல பெண்கள் மிகத் தீவிரமாக இல்லாத குற்றச்சாட்டுகளையும், தனிப்பட்ட பகையாலும், பிரபலமடைவதற்கும் இதனைப் பயன்படுத்தி இந்த இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதாகக் குறிப்பிட்டார்.
பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து சிறுமைப்படுத்தும் வகையிலும், கூருணர்ச்சி இல்லாமலும் இந்த தமது பேட்டி எடிட் செய்யப்பட்டதாகவும் டிவிட்டரில் தெரிவித்தார் பிரீத்தி.
ஆனாலும், அவரது கருத்துக்களால் ஏமாற்றமடைந்ததாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்திருந்தனர். பிரபல நடிகர் நானா படேகருக்கு எதிரான 10 ஆண்டுகளுக்கு முந்திய தமது குற்றச்சாட்டை மீண்டும் எழுப்பியதன் மூலம் நடிகை தனுஸ்ரீ தத்தா மீடூ இயக்கத்தை செப்டம்பர் மாதம் இந்தியாவில் தொடங்கி வைத்தார். குற்றச்சாட்டை மறுத்த நானா படேகர், அது பொய் என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்