கர்நாடகா இடைத்தேர்தல் - 4 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி; ஒன்றில் மட்டும் பாஜக

கர்நாடக மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரேயொரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வென்றுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம் நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிய இந்த இடைத்தேர்தலில் 65 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

மக்களவை தொகுதிகள்

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பெல்லாரி, மாண்டியா மக்களவை தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வென்றுள்ளன.

பெல்லாரி மக்களவை தொகுதியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பாவும், மாண்டியா தொகுதியை மத சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் சிவராம கௌடாவும் வென்றுள்ளனர்.

ஷிமோகா மக்களவை தொகுதியை பாரதிய ஜனதா கட்சி வென்றிருக்கிறது. இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஆவார்.

ராம் நகர் சட்டப்பேரவை தொகுதியை மத சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பாக போட்டியிட்ட கர்நாடக மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் குமாரசுவாமியின் மனைவியான அனிதா வென்றுள்ளார்.

ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சித்து நாம கொளடா வென்றுள்ளார்.

ரெட்டி சகோதரர்கள் ஆதிக்கம்

பாரதிய ஜனதா கட்சிக்கு முழு ஆதரவு அளிக்கின்ற ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கம் மிகுந்ததாக பெல்லாரி தொகுதி இருந்து வந்தது.

ஆனால், இந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட சாந்தா இந்த தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

2004, 2009 மற்றும் 2014ம் ஆண்டு என தொடர்ந்து 3 முறை பாரதிய ஜனதாவின் கோட்டையாக இருந்து வந்த பெல்லாரி, இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் சென்றுள்ளது.

2014ம் தேதி நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பெல்லாரி தொகுதியில் பாஜக சாபாக போட்டியிட்ட பி ஸ்ரீ ராமலூ வெற்றிபெற்றார்,

ஆனால், கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து அவர் விலகினார்.

அதன் காரணமாக நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், அவரது மகள் அனிதா போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: