சபரிமலையில் களமிறக்கப்படும் கம்யூனிஸ்ட் படை - ஊழியர்களாக நியமிக்க உத்தரவு

சபரிமலையில் கம்யூனிஸ்ட் படை - கேரள மாநில அரசு திட்டம் - தினமலர்

சபரிமலை சன்னிதானத்தில் போராட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், ஊழியர்கள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியினரை களமிறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையின்போது தரிசனத்திற்கு வந்த 15 பெண்கள்ளுக்கு, போலீஸ் பாதுகாப்பு கொடுத்தபோதும் பக்தர்கள் எதிர்ப்பால் சன்னிதானத்திற்குள் செல்ல முடியாதது மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் 1600 முதல் 2000 பேர் வரை தற்காலிக பணியாளர்களாக அங்கு நியமிக்கப்படுவர். காணிக்கை எண்ணுதல், பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல், தங்கு விடுதிகளில் உதவி செய்தல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவர்.

தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுவோர் அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியை சோந்தவர்களாக இருக்க வேண்டுமென வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு மடங்காக விலை உயர்வு பெற்ற கேஸ் சிலிண்டர்- தினமணி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.400 அல்லது ரூ.450 என்றிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.896 ஆக உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வசதி படைத்தோர் வீடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சமையல் எரிவாயு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் இலவச எரிவாயு இணைப்பு, இலவச எரிவாயு அடுப்பு விநியோகத்தால் மக்கள் விறகு அடுப்பு அல்லது ஸ்டவ் அடுப்பிலிருந்து எரிவாயு பயன்பாட்டுக்கு மாறினர்.

ஆண்டு வருவாய் 10 லட்சத்துக்கு அதிகமாக பெறுவோருக்கு 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளை இப்போது ரூ.896. பிறர் இந்த விலை கொடுத்து வாங்கினாலும் மானிய தொகை ரூ.405 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

திடீரென மானியத்தொகை நிறுத்தப்பட்டு, வங்கி மற்றும் எரிவாயு விநியோக அலுவலகத்திற்கு அலக்கழிக்கப்படுவதாக பயனாளர்கள் கூறுகின்றனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழைக்காக டிஎன்-ஸ்மாட் திட்டம் தொடக்கம் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் புதிய முயற்சியாக பல்வகை பேரிடர்களின் அதீத தாக்கத்தினை முன்னதாக அறிந்து அவசர முன்னெச்சரிக்கை மீட்புநடவடிக்கைகளை முறைப்படுத் தும் தமிழ்நாடு இணையதள புவியியல் தகவல் முறை (ஜிஐஎஸ்) அமைப்பான டிஎன்-ஸ்மார்ட் (TN-SMART) உருவாக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின்போது இது பயன்படுத்தப்படவுள்ளது. தாய்லாந்தில் உள்ள ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு மையத்துடன் இணைந்துபெய்யக்கூடிய மழையளவை கணித்து அந்தந்த பகுதிகளின் வானிலையை மதிப்பிட இந்த அமைப்பு உதவும்.

இதன் மூலம் உயிரிழப்பை தடுக்கவும், பேரிடர்களின்போது, அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் சேதங்களை தடுக்கின்ற சரியான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு இந்த அமைப்பு உதவும் என்று ’நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: