You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிபிஐ குறித்து நரேந்திர மோதியின் அச்சம் - காரணம் என்ன?
முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரஃபேல் போர் விமானம் தொடர்பான மனுவை அக்டோபர் 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஐ மீது அதிக அழுத்தங்கள் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை அந்த முகமை நியாயமாக மேற்கொள்ளுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, விவகாரத்தை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதான அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்றும் மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ரஃபேல் விமான ஒப்பந்தம், சிபிஐ தலைவர் அலோக் ஷர்மா என பல விஷயங்களை, அடல் பிஹாரி வாஜ்பேயின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அருண் ஷோரியிடம் பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா பேசினார். பேட்டியின் சாராம்சம் இதோ:
மோதியின் அச்சத்திற்கான மூன்று காரணங்கள்
சிபிஐயை வைத்து மற்றவர்களை பயமுறுத்தி வந்த நரேந்திர மோதியே தற்போது சிபிஐயை பார்த்து பயப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது.
சிபிஐயை பார்த்து பிரதமர் பயப்படுவதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. மோதிக்கு நெருக்கமான சிபிஐயின் ராகேஷ் அஸ்தானாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டால் அவர் மோதியைப் பற்றிய ரகசியங்கள் அனைத்தையும் சொல்லிவிடக்கூடும்.
சிபிஐயை தான் விரும்பியபடி இனிமேல் பயன்படுத்த முடியாது என்பது இரண்டாவது கவலை.
அலோக் வர்மா போன்ற அதிகாரிகளிடம் ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணை ஒப்படைக்கப்பட்டால் தனது நிலை என்னவாகும் என்பது மூன்றாவது அச்சம். ஏனெனில் சிபிஐ தலைவர் ஒரு விசாரணையை நடத்துவதற்கு பிரதமர் அல்லது வேறு யாருடைய அனுமதியும் தேவையில்லை.
உண்மையில் ரஃபேல் விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மோதிக்கு பிரச்சனைதான். அதற்கு காரணம் அலோக் வர்மா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டார் என்பதாகவும் இருக்கலாம்.
இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டார். ஆனால் இந்த உத்தியும் மோதிக்கு பெரிய அளவில் பயனளிக்காது. பிரதமர் தன் தலையில் தானே பெரிய மலையை தூக்கி வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறார்… இதன் விளைவுகளை எதிர்வரும் சமயத்தில் வெட்ட வெளிச்சமாகும்.
ரஃபேல் தொடர்பாக கடிதம்
அந்த காலத்தில் பல அதிகாரிகள் அந்தமான் சிறைச்சாலைக்கு அனுப்பியது அவர்கள் மீதான அச்சத்தால் தானே? அதே நிலைதான் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. அலோக் வர்மா ரஃபேல் தொடர்பாக எதாவது செய்வார் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார் என்று மோதிக்கு தெரிந்திருக்கும்.
ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் தேவை என்று சிபிஐ எழுதிய கடிதங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சென்றிருக்கலாம். அது தொடர்பான தகவல்கள் மோதிக்கு கிடைத்திருக்கலாம். இது பற்றிய தெளிவான தகவல்கள் தெரியவில்லை.
ரஃபேல் விவகாரம் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும்போது இது தொடர்பான எல்லா விஷயங்களும் வெளிச்சத்திற்கு வரும். அலோக் வர்மா, ரஃபேல் தொடர்பாக எதாவது கடிதம் எழுதியிருக்கிறாரா என்பதைப் பற்றிய விவரங்களும் தெரியவரும். அப்போது பிரதமர் அலோக் வர்மாவை சந்தித்தபோது அது தொடர்பாக எதாவது பேசினாரா இல்லையா என்ற தகவல்களும் வெளிவரும்.
பிரதமர் விசாரணையில் தலையிட்டிருந்தால் அது சட்டப்படி தவறானது.
பலவீனமடையும் அரசின் மீதான நம்பிக்கை
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊழல் தொடர்பாக மத்திய அரசின் மீதான நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது. இல்லை, நம்பிக்கையே இல்லை என்றே சொல்லிவிடலாம். ஏனெனில் நாட்டில் இருந்து பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் இவர்களின் குடும்பத்தினர்தான்.
அமித் ஷாவின் மகன் மீதான வங்கி தொடர்பான விவரங்கள் வெளியாகி, மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மீதான நம்பிக்கையை பாதித்தது.
நீரவ் மோதி, முகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்கள் சாதாரண மக்களின் நண்பர்கள் அல்ல, அரசின் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நண்பர்கள். அவர்கள்தான் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டிற்கு தப்பியோடினார்கள்.
சிபிஐக்குள் நடக்கும் உட்பூசல் நிலைமையை தலைகீழாக புரட்டிப் போட்டு அரசின் பிடி தளர்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. ஒரு காலத்தில் மோதியின் தலைமையும் நிர்வாகமும் வலுவாக இருப்பதாக கூறப்பட்டது. இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது.
கடந்த ஆறு மாதங்களில் வெளிவரும் விஷயங்களும், முட்டாள்தனங்களும் இந்த ஆட்சி நிலையானதல்ல என்பதை காட்டுகிறது.
அதற்கு காரணம் மோதி யாருடனும் பேசுவதில்லை என்பதாகவும் இருக்கலாம். அல்லது வேறு யாராவது செய்யும் தவறுகள் இவரின் தலையில் விடிகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அரசின் விளக்கம்
சிபிஐயில் உயர் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பூதாகரமாக வெடித்தபோது, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டார். இது முட்டாள்த்தனமான செயல் என்று விமர்சித்த எதிர்கட்சிகள், மத்திய உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டின.
சிபிஐயின் இரு தலைவர்களுமே ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். எனவே இந்த விவகாரத்தை நியாயமாக விசாரிக்க வேண்டுமென்றால் மூன்றாவது மனிதர் அவசியம்.
விசாரணை முடியும்வரை இரு அதிகாரிகளும் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசின் முடிவு முற்றிலும் சட்ட ரீதியிலானது என்று ஜெட்லி தெரிவித்தார்.
எதிர்கட்சியின் தாக்குதல்
அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்தபிறகு காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வியும் ஒரு செய்தியாளர் கூட்டத்தை கூட்டி, அரசின் வாதங்களுக்கு எதிர்வாதங்களை முன்வைத்தார்.
அரசின் வாதங்களை நிராகரித்த அபிஷேக் மனு சிங்வி, ''சிபிஐ தலைவரை நீக்கிய மோதி அரசின் செயல், அரசியலைப்பு சாசனத்திற்கு எதிரானது. இப்படி செய்து, இந்த அரசு நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளது.
விதிமுறைகளின்படி, சிபிஐ தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பதவியில் இருந்து நீக்க முடியாது. இதற்கான சட்டம் சிபிஐ 4 (a) மற்றும் 4 (b) பிரிவுகளில் உள்ளன.''
''ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்படும் அதிகாரிக்கு அரசு முழு ஆதரவு கொடுத்திருக்கிறது, குற்றம் சுமத்தியவரை தூக்கிவிட்டது. இது குஜராத்தின் புதிய பாணி.
பிரதமர் நேரிடையாக சிபிஐ அதிகாரிகளை அழைத்து பேசுகிறார். குற்றவியல் வழக்கில் பிரதமர் தலையிடுகிறார். இது அப்பட்டமாக சட்டத்தை மீறும் செயல்."
''சிவிசி ஒரு கண்காணிப்பு முகமை மட்டுமே. யாரையும் பதவியில் நியமிக்கவோ, அகற்றவோ சிவிசிக்கு அதிகாரமில்லை. பாஜகவுக்கு அறிவுரைகளை வழங்குவது சிவிசி தான். உயர் பண நோட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது, பொருளாதார நடவடிக்கைகள், மால்யா விவகாரம், எதிர்கட்சித் தலைவர் நியமனம், நீதிபதி நியமனம் என நாட்டின் முக்கியமான விஷயங்கள் அனைத்திலும் பிரதமருக்கு அறிவுறுத்தும் கட்சித் தலைமை, சிவிசியை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்கிறது.''
இதனிடையே, பதவியை திரும்பப் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தை அலோக் வர்மா அணுகியிருக்கிறார். அந்த விசாரணை வெள்ளியன்று நடைபெறும். சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள சிபிஐ வளாக கட்டடத்தின் பத்து மற்றும் பதினோறாவது மாடிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இங்குதான் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவின் அலுவலகங்கள் உள்ளன.
சிபிஐ விவகாரம் தொடர்பாக மோதி அரசின் செயல்பாடுகளை பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமியும் விமர்சித்துள்ளார்.
சுப்ரமணியம் சுவாமி வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ''சிபிஐயில் வெளிப்படையாக இப்போது பிரச்சனைகள் வெளியாகின்றன. ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்பதற்காக அமலாக்கப் பிரிவு அதிகாரி ராஜேஷ்வர் சிங் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
நிலைமை இப்படி இருந்தால், ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை. ஏனெனில் என்னுடைய அரசு தவறிழைத்தவர்களை பாதுகாக்கிறது. அப்படியென்றால், ஊழலுக்கு எதிரான நான் தாக்கல் செய்த வழக்குகளை எல்லாம் திரும்பப்பெறுவேன்'' என்று காட்டமான கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்