You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இதுவரை நடந்தது என்ன?
தமிழக சட்டப்பேரவையில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலையில் தீர்ப்பு வழங்குகிறது.
இந்த விவகாரம் கடந்து வந்த பாதை:
1. 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.
2. இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.கவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல், தானாக முன்வந்து அ.தி.மு.கவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று கோரினார்.
3. இந்தப் 19 பேரில் எஸ்.டி.கே. ஜக்கையன் பிறகு ஆளும் பிரிவுக்கு ஆதரவாளராகி விட்டார். செப்டம்பர் 17ஆம் தேதியன்று சபாநாயகரைச் சந்தித்த அவர், டி.டி.வி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி ஆளுநரை சந்திக்க அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
4. மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 1986ஆம் ஆண்டு விதிகளின்படியும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
5. இதன் மூலம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), ஆர். முருகன் (அரூர்), எஸ். மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கே. கதிர்காமு (பெரியகுளம்), சி. ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), பி. பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), வி. செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), எஸ். முத்தைய்யா(பரமக்குடி), பி. வெற்றிவேல் (பெரம்பூர்), என்.ஜி. பார்த்திபன் (சோளிங்கர்), எம். கோதண்டபாணி (திருப்போரூர்), டி.ஏ. ஏழுமலை (பூந்தமல்லி), எம். ரங்கசாமி (தஞ்சாவூர்), ஆர். தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர். பாலசுப்பிரமணி (ஆம்பூர்), எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்), ஆர். சுந்தர்ராஜ் (ஓட்டப்பிரடாரம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
6. இந்தத் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி எம். துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என செப்டம்பர் 20ஆம் தேதியன்று இடைக்காலத் தடைவிதித்தார்.
7. இந்த வழக்கு நீதிபதி கே. ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளில் அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இருப்பதால் வழக்கு டிவிஷன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
8. அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்துவந்தது. ஜனவரி 23ஆம் தேதியன்று வழக்கின் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
9. நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவு செல்லுமென அறிவித்தார். அதே அமர்வின் சக நீதிபதியாக இருந்த சுந்தர், சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என அறிவித்தார். இரு நீதிபதிகளின் தீர்ப்பும் முரண்பட்டிருப்பதால், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
10. மூன்றாவது நீதிபதியாக எஸ். விமலா அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றி உச்ச நீதிமன்றமே விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 17 பேர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வன் இதில் இணைந்துகொள்ளவில்லை.
11. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 17 சட்டமன்ற உறுப்பினர்களும் தாக்கல் செய்த மனு சரியானதல்ல; அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் வேண்டுமானால், வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றலாம் என தெரிவித்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பு, தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. ஆகவே இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ். விமலாவுக்குப் பதிலாக எம். சத்யநாராயணா விசாரிப்பார் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
12. இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் ஆகியோர் மரணமடைந்துவிட்டதால், 232 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. 88 உறுப்பினர்களையும் காங்கிரஸ் எட்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றன. டிடி.வி. தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மீதமுள்ள 117 சட்டமன்ற உறுப்பினர்களில் எஸ். கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அவர்களும் அ.தி.மு.கவின் உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர். இவர்களில் கருணாஸ் வெளிப்படையாக ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். மீதமுள்ள இருவரும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
ஆகவே, இந்த விவகாரத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும் பட்சத்தில், ஆளும் தரப்புக்கு அது சிக்கலாக அமையக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :