You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸிகா நோய் தொற்றிய கர்ப்பிணிக்கு ஜெய்ப்பூரில் பிரசவம்- Ground_Report
- எழுதியவர், ஜுபேர் அகமத்
- பதவி, பிபிசி செய்தியாளர், ராஜஸ்தான்
ஸிகா வைரஸ் தொற்றியுள்ள பெண்ணொருவர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திங்கள்கிழமை குழந்தை பெற்றெடுத்தார்.
ஜெய்பூரில் ஸிகா வைரஸ் பரவிய பின்னர், அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் குழந்தை பெற்றெடுப்பது இதுவே முதல்முறை.
இந்த குழந்தை பிறப்பதற்கு முன்னால், இந்த குழந்தையின் பெற்றோர் பதற்றமாக காணப்பட்டனர். அவர்களின் நம்பிக்கை எல்லாம் மருத்துவர் அன்ஜூலா சௌத்திரி மீது குவிந்து இருந்தது.
இந்த குழந்தையின் பிறப்பை உள்ளூர் நிர்வாகமும் பெரிதும் எதிர்பார்த்திருந்தது.
பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதை திங்கள்கிழமை இரவு அறிவித்தபோது, பெற்றோரின் பதற்றம் தணிந்தது. உள்ளூர் நிர்வாகமும் இது பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
"குழந்தை கருத்தரித்த முதல் 3 மாதங்களில் ஸிகா வைரஸால் அந்த கர்பிணி பெண் பாதிக்கப்பட்டால், பிறக்கின்ற குழந்தையும் ஸிகா வைரஸால் பாதிக்கப்படும். இந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் தேதி மிகவும் நெருங்கி வந்த நேரத்தில்தான் ஸிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது" என்று பிபிசியிடம் மருத்துவர் அன்ஜூலா சௌத்திரி கூறினார்.
200 குழுக்கள் அமைப்பு
பிகாரில் இருந்து இடம்பெயர்ந்து இந்த குடும்பம் ராஜஸ்தானில் குடியேறியுள்ளது. மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு, 4-வதாக ஆண் குழந்தை பிறந்திருப்பது இந்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெய்பூரில் ஸிக்கா வைரஸ் பரவல் பற்றிய பீதி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த குழந்தை பிறப்பு பெரிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
இந்த நகரத்தில் கண்டறியப்பட்டுள்ள 29 ஸிக்கா நோயாளிகளில் 3 பேர் கர்பிணி பெண்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தினம்தோறும் அவர்கள் சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஸிக்கா வைரஸ் பெரும்பாலும் கொசுக்களால் பரவுகிறது. உறலுறவின் மூலமும் இது பரவலாம்.
கருத்தரித்த 3 மாதங்களுக்குள், அந்த கர்ப்பிணி பெண் ஸிக்கா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானால், வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். குழந்தையின் தலை சிறியதாகிவிடும். இதனை குணமாக்குவதற்கு எந்த சிகிச்சையும் இதுவரை இல்லை.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் உதவியோடு, ஜெய்பூரில் பரவியுள்ள ஸிக்கா வைரஸ் தொற்றை தடுக்க ராஜஸ்தான் மாநில அரசு முயன்று வருகிறது.
இந்த வைரஸ் பரவக்கூடிய இடங்களில் எல்லாம், தேவையான தகவல்களை வழங்கி உதவுவதற்கு மாநிலம் முழுவதும் 200 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் காலி சரன் சராஃப் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு அதிக பாதிப்பு
ஸிக்கா வைரஸ் பரவுவதை தடுக்க பெரியதொரு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகமும், ராஜஸ்தான் மாநில அரசும் கூறியுள்ளன.
போர்க் கால அடிப்படையில் ஸிகா வைரஸ் பரவலை தடுக்க அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளதாக இந்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த சராஃப் கூறியுள்ளார்.
புதன்கிழமையன்று ஸிகா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்படாதது மாநில நிர்வாகத்திற்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.
ஆனால், ரத்த மாதிரிகள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் முடிவுகள் வெளியான பின்னர், ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29க்கும் அதிகமாக இருக்கலாம்.
"எங்கெல்லாம் கொசுக்கள் வளர்கின்றனவோ, அங்கெல்லாம் ஸிக்கா வைரஸ் பரவுகிறது" என்கிற மேற்கோள் அரசு துண்டு பிரசுரங்களில் பெரிய எழுத்துக்களில் காணப்படுகின்றன.
இந்த துண்டுபிரசுரங்கள் எல்லா வீடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மாநில நிர்வாக நடவடிக்கை பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படுகிறது.
இதுவரை என்ன பாதிப்பு?
ஜெய்பூரிலுள்ள சாஸ்திரி நகர் காலனிதான் ஸிகா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்த வைரஸ் தொற்றியுள்ள 29 பேரில் 26 பேர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள்.
இந்த காலனியின் 3 கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில், ஸிகா வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பது எப்படி என்று சுகாதார பணியாளர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.
மாநில மற்றும் இந்திய அரசின் பெரிய சுகாதார குழுவினர் இந்தக் காலனியின் நுழைவாயிலில் முகாமிட்டுள்ளனர்.
அங்குதான் ஒவ்வொரு நாள் காலையிலும் அதிகாரிகள் பல பகுதி மக்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை மக்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பு
சாஸ்திரி நகருக்கு வந்துள்ள அதிகாரிகள் சுத்தமாக இருப்பது பற்றி தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர் என்று பல பெண்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், திறந்து கிடக்கும் சாக்கடை மற்றும் குவிந்துள்ள குப்பைகளை சுட்டிக்காட்டும் பெரும்பாலான மக்கள், உள்ளூராட்சி நிர்வாகம் இவற்றை சுத்தப்படுத்துவதில்லை என்கின்றனர்.
இந்த காலனிகளில் அதிக மக்கள் மிகவும் நெருங்கி வாழ்ந்து வருகின்றனர். சாதாரன வீடுகளில் வாழும் இவர்கள் குப்பைகளின் மத்தியில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
குப்பை குவியல் காணப்படும் இடத்தின் அருகிலுள்ள கழனியில் பன்றிகளும், பிற விலங்களும் குவிந்து காணப்படுகின்றன. அருகிலுள்ள இடங்களில்தான் இந்தப் பகுதிக் குழந்தைகள் விளையாடியும் வருகின்றன.
இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது?
மலையாக குவிந்துள்ள குப்பைக்குப் பக்கத்தில்லுள்ள ஒரு கட்டடத்தை சுட்டிக்காட்டும் நபர், குப்பை நிறைந்துள்ள இந்த அரசு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள்கூட செல்ல முடியாது என்கிறார்.
ஸிகா வைரஸ் பரவுவதை தடுப்பது மாநில நிர்வாகத்தின் முதன்மை பணியாக இருந்தாலும், இந்த காலனிகளை சுத்தப்படுத்தாவிட்டால், ஸிகா வைரஸ் பரவும் ஆபத்து இருக்கும் என்று இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில், இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிவது அரசின் கடமை என்கிறார்கள் மக்கள்.
இந்த வைரஸ் வெளியில் இருந்துதான் வந்துள்ளது என்று தெரிவித்திருக்கும் சுகாதார அமைச்சர் சராஃப், இது பற்றி துப்பு எதுவும் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிகாரில் எச்சரிக்கை
கடந்த ஆண்டு அகமதாபாத்தில் 3 பேருக்கு ஸிகா வைரஸ் தொற்றியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், மேற்கொண்டு பரவாமல் தடுப்பதில் குஜராத் அரசு வெற்றிகண்டது.
30 நாடுகளில் ஸிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்னால், பிரேசிலில் நூற்றுக்காணக்கானோர் இதற்கு பலியாகினர்.
ஜெய்பூரில் பாதிக்கப்பட்டுள்ளோர் யாரும் வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டவர்கள் அல்ல.
இந்த நிலைமையில், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வந்து குடியேறுவோர் மூலம் இந்த வைரஸ் பரவலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். பிற மாநிலங்களுக்கும் இது பரவலாம் என்று அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஜெய்பூரில் வாழும் பிகாரை சேர்ந்த ஒருவர் ஸிகா வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர், பிகார் சென்று திரும்பியுள்ளார்.
பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ராஜஸ்தானில் வாழ்கின்றனர்.
இதனால், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநில அரசுகள் ஸிக்கா வைரஸ் பரவல் பற்றிய உயர் எச்சரிக்கை நிலையில் இருந்து வருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்