உலக அஞ்சல் தினம் 2018: சாலைக்கு தபால்காரரின் பெயர் - நெகிழ்ச்சி சம்பவம்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images/ இந்து தமிழ்
இந்து தமிழ்: 'சாலைக்கு தபால்காரரின் பெயர் - நெகிழ்ச்சி சம்பவம்'
கேரளாவில் தபால்துறையில் தன்னுடைய பணிக்காலத்தில் மிகப்பெரிய சேவை செய்த ஒரு தபால்காரரின் பணியை கவுரவப்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு சாலைக்கு அவரது பெயரை அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் சூட்டியுள்ளது. கேரளாவில் மேற்கு கொச்சியில் தோப்பம் பாடியில்தான், 'சாக்கோ' என்ற தபால்காரரின் பெயரில் அந்த சாலை அமைந்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.
கொச்சியில் முக்கியத் துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது ஒட்டுமொத்த தபால்காரர்களுடைய சேவையை கவுரவப்படுத்தும் வகையில் உள்ளதாக அம்மாநில தபால்காரர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். நாட்டுக்காகவும், பொது மக்களுக்காகவும், நடை யாக நடந்தும், இந்த கணினி காலத்திலும் சைக்கிளில் சென்று தபால்களைப் பட்டுவாடா செய்யும் தபால்காரர்களுக்கு, எந்த கவுரவமும், பிரதிநிதித்துவமும் இதுவரை அமையவில்லை என்று தபால் துறையில் பணிபுரிந்தவர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர் என்கிறது அந்த செய்தி

பட மூலாதாரம், இந்து தமிழ்
"கணினி அறிவியல் வளர்ச்சியால் நாள் தோறும் தகவல் பரிமாற்றத்தில் எண்ணற்ற மாற்றங்கள். பேக்ஸ், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று ஆரம்பித்து இன்று நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. ஆனால், இத்தகைய தகவல் தொடர்புகள் வராத காலத்தில் தபால்காரர்களே மக்களிடையே, மிகப் பெரிய ஊடக தொடர்பு சாதனமாக செயல்பட்டனர்.
நவீன போஸ்ட்மேனுக்கு முன்னர் 'ரன்னர்கள்' எனப்படும் தபால்காரர்கள், ஊருக்கு ஊர் தபால்களை, ஓட்ட நடையி லேயே பயணித்து விநியோகித்தனர். காடு, மேடு, கரடு, முரடு பாதையானாலும் தவறாது கடிதங்கள் சென்றடையும் என்ற உத்தரவாதம் இருந்தது. மிதிவண்டியை தவிர வேறு வாகனங்களில் தபால்காரர்கள் சென்றதை நம் தலைமுறையினர் கண்ட தில்லை. தற்போது கம்பியில்லா தகவல் தொழில்நுட்பம் வந்துவிட்டாலும் தபால்காரர் கள் சேவைகளை இன்றளவும் மறக்கவும், மறுக்கவும் முடியாது." என்று அந்நாளிதழ் விவரிக்கிறது.

'மாயமான 400 மீனவர்களை விமானம் மூலம் தேடுதல் தீவிரம்'
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் சோகம் அடைந்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட துறை முகங்களிலிருந்து தங்கு கடல் மீன் பிடிப்புக்கு சென்ற விசைப் படகுகள் அனைத்தும் கரை திரும்பின. ஆனால், இங்கிருந்து கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்ற 64 விசைப்படகுகள் கரை திரும்பாமல் இருந்தன. இவற்றில் 22 விசைப்படகுகள் கரை திரும்பி வருவதாக குமரி மாவட்ட மீன் வளத்துறைக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
இன்னும், 42 படகுகள் புயல் எச்சரிக்கை தகவல் கிடைத்ததை உறுதி செய்யவில்லை. அப்படகு களில் சென்ற தூத்தூர், இரை யுமன்துறை, குளச்சல் பகுதியைச் சேர்ந்த 420-க்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர். கடற்கரை கிராமங்களில் சோகம் நிலவுகிறது.
வள்ளவிளை கடற்கரை கிராமத் திலிருந்து அதிநவீன வயர்லெஸ் கருவி மூலம் (எச்எப் செட்) புயல் எச்சரிக்கை குறித்த தகவலை அப்படகுகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’: 'மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுவிட்டோம்'
நிராவ் மோதி விவகாரத்திற்குப் பின் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுவிட்டது பஞ்சாப் நேஷனல் வங்கி என்று அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி சுனில் மேத்தா கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் 700 வது வங்கியின் கிளையை திறந்து வைத்தப்பின் அவர், கடந்த நிதி ஆண்டில் பல பிரச்சனைகளை வங்கி சந்தித்தது. அதிலிருந்து மீண்டு வர வங்கி மேலாண்மை குழு உறுதி பூண்டோம். வாரா கடன்களை அதிகளவில் மீட்டுள்ளோம் என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்க கூடாது'
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Facebook
எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் நரேந்திர மோதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
"மறைந்த தமிழக முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறைந்த தமிழக முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு 'புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம்' என பெயர் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14-வது நிதி ஆணையத்தின் ஒதுக்கீட்டின்படி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய 2017-18-ம் ஆண்டுக்கான செயல்திறன் மானியம் ரூ.560.15 கோடி மற்றும் 2018-19-ம் ஆண்டு முதல் தவணையாக வழங்கவேண்டிய அடிப்படை மானியம் ரூ.1,608.03 கோடியை விரைந்து வழங்குமாறு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின துறைக்கு உத்தரவிட வேண்டும்.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான ஒப்புதல் வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இந்த ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான இயல்பான பணிகளை தொடங்கமுடியும்.
கொசஸ்தலை ஆற்றில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்வாய் அமைக்க ரூ.2,518 கோடியும், கோவளம் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால்வாய் அமைக்க ரூ.270 கோடியும், எந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.100 கோடியும், நீர்நிலைகளை மறுசீரமைப்பதற்கு ரூ.200 கோடியும், 2015- 16-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு ரூ.917.84 கோடி என மொத்தம் ரூ.4,445.84 கோடி நிதியினை சென்னை மாநகரத்தின் நிரந்தர வெள்ள தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்." ஆகிய கோரிக்கைகள் உட்பட 'தமிழக வளர்ச்சி சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோதியிடம் பழனிசாமி வழங்கினார் என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினமணி: 'பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் மையத்தின் பொறியாளர் கைது'
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும், இதர நாடுகளுக்கும் உளவு பார்த்ததாக, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி அருகே செயல்படும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மையத்தின் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"இவர், பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), ரஷியாவின் என்டிஓஎம் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்களில் ஒன்று, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி அருகே செயல்படுகிறது.
இந்த மையத்தின் தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவில் கடந்த 4 ஆண்டுகளாக பொறியாளராக பணியாற்றி வரும் நிஷாந்த் அகர்வால் என்பவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கும், இதர நாடுகளுக்கும் உளவு பார்த்து வந்ததாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












