You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பு செய்ய அனுமதி
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் போல, இனிமேல் நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்ய அவை இரண்டுக்கும் தனித்தனித் தொலைக்காட்சிகள் உள்ளன.
ஆனால் சில வெளி நாடுகளில் இருப்பதுபோல நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மக்கள் பார்க்க ஏதுவாக அதெற்கென தனி தொலைக்காட்சி எதுவும் இதுவரை இல்லை. மத்திய அரசின் செலவில் இனி அதற்கென தனி தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.
பொது மக்களுக்கு நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள உரிமை உண்டு என்றும் இது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும் புதன்கிழமையன்று, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
வழக்கு விசாரணைகளைப் பார்ப்பது சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் இந்தத் தீர்ப்பின்போது தலைமை நீதிபதி கூறினார்.
நேரலை ஒளிபரப்பு என்று கூறப்பட்டாலும், சிறிது தாமதத்துக்குப் பிறகே இப்புதிய தீர்ப்பின்படி நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிபரப்பு செய்யப்படும். சில நேரங்களில் வழக்கறிஞர்கள் செய்யும் காரசார விவாதம், பயன்படுத்தப்படும் அவதூறான சொற்கள், நீதிபதிகள் தெரிவிக்கும் காட்டமான கருத்துகள் ஆகியவற்றை ஒளிபரப்பாகாமல் தடுக்கவே இந்த தாமதம் தேவை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 70 நொடிகள் தாமதத்துக்கு பிறகே அவை நடவடிக்கைகள் ஒளிபரப்பாவதை தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், இந்தியாவில் அவ்வாறு ஒளிபரப்பு செய்யப்படுவதிலும் நியாயமான நேர இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த ஒளிபரப்பை சோதனை முயற்சியாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அவை நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்வதில் இருந்து தொடங்கி உச்ச நீதிமன்றத்தின் பிற அவைகளுக்கும், நாட்டிலுள்ள பிற உயர் நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது.
பாலியல் வல்லுறவு வழக்குகள், திருமண உறவுகள் குறித்த வழக்குளின் விசாரணை ஒளிபரப்பு செய்யப்பட்டால் தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள் வெளியாகும் என்பதால் அவற்றை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் சமூக பதற்றத்தை தூண்ட வாய்ப்புள்ள வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது.
நேரலை ஒளிபரப்புக்கான விதிமுறைகளையும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த விதிமுறைகளை நீதிமன்றம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தபின், ஒளிபரப்பு செய்யப்படும்போது அவை பின்பற்றப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணைகள் மற்றும் தீர்ப்பை காணொளியாக பதிவு செய்யவேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளையே நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :