தெலங்கானாவில் வாட்சாப் வதந்திகளை எதிர்த்துப் போராடிய பெண் போலீஸ் அதிகாரி
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்
தெலங்கானாவில் சுமார் நானூறுக்கும் அதிகமான கிராமங்களில் இந்த வருடம் கோடைகாலத்துவக்கத்தில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடக்கத்துவங்கியிருந்தது.

பட மூலாதாரம், Bloomberg
ஆண்களும் பெண்களும் வழக்கத்துக்கு மாறாக வீட்டுக்கு விரைவாக திரும்பிக்கொண்டிருந்தனர். வீட்டுக்கு சென்றபின்னர் விளக்குகளை அணைத்து உள்ளேயே இருந்தனர். பொதுவாக குழந்தைகள் வீட்டுக்கு வெளியே மாலை வேளையில் விளையாடிக்கொண்டிருப்பர். ஆனால் அவர்களும் மாலையில் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். தெருவே வெறிச்சோடி இருந்தது. அங்கே நிலவிய அமைதி வியப்பூட்டுவதாக இருந்தது.
இது வழக்கத்து மாறான நிலை. பொதுவாக புழுக்கமான நேரங்களிலும் கோடை காலங்களிலும் பெரும்பாலான கிராமவாசிகள் வீட்டுக்கு வெளியே கயிற்று கட்டிலை போட்டு உறங்குவார்கள்.
கடந்த மார்ச் மாதம் நிலவிய வினோதமான இந்த நிலையைப் பற்றி உள்ளூர் போலீசார் மேலதிகாரிகளுக்கு தெரிவித்தனர். காட்வல் நகர காவல்துறையின் தலைமை பொறுப்பேற்றுள்ள ரேமா ராஜேஸ்வரி காவலர்கள் சொல்லிக்கொண்டிருந்த கதைகளை கவனமாக கேட்டறிந்தார்.
''சூரியன் மறைந்தபிறகு கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக நின்றுபோனது. நாங்கள் இதுபோன்ற ஒரு சூழலை இதற்குமுன் தங்கள் வாழ்நாளில் எப்போதும் பார்த்ததில்லை'' என அவர்கள் கூறினார்கள் என ராஜேஸ்வரி என்னிடம் சொன்னார்.
அடுத்த சில நாள்களில், உண்மையில் என்ன நடக்கிறது என போலீசார் அறிய முயன்றனர். அதற்கான காரணத்தை அவர்கள் அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான கிராமவாசிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காணொளியும், ஓர் ஆடியோ பதிவும் வாட்ஸ்அப் மூலம் வந்தது.
வெளிப்படையாக ஒரு மனிதனின் உடலை குத்திக் கிழிக்கும் அந்தக் காணொளி பயங்கரமானதாக இருந்தது. அதில் உள்ளூர் மொழியான தெலுங்கில் ஒரு ஆடியோ பதிவும் இருந்தது. ஒரு ஆண் குரலொன்று, தசாப்தங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் மீண்டும் திரும்பி வந்துள்ளதாகவும் இம்முறை அவர்கள் மனித உறுப்புகளை திருடுவதற்காகவே வந்துள்ளனர் என்றும் அந்த ஆடியோவில் கூறியது.
போலீசார் கிராமவாசிகளின் மொபைலை சோதித்தபோது 30 -35 காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அந்த பகுதியில் வைரலாக பரவியிருந்தது தெரியவந்தது. ஒரு குழந்தை கடத்தப்படும் ஒரு காணொளி பெருமளவு பகிரப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில், அது மிகவும் புத்திசாலித்தனமாக பாகிஸ்தானில் வெளியான குழந்தை பாதுகாப்பு குறித்த ஒரு காணொளியில் இருந்து எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டிருந்தது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அக்காணொளி எடிட் செய்யப்பட்டு வாட்ஸ்-அப் மூலம் வைரல் ஆனது.
''குழந்தை கடத்துபவர்கள் நமது கிராமங்களுக்கு வருகிறார்கள்'' என்கிறது அந்த செய்தி. '' அவர்கள் உங்கள் வீட்டு கதவுகளின் மீது கற்களை எறிவார்கள். வெளியே வராதீர்கள் மேலும் உங்களது குழந்தைகளையும் வெளியே அனுப்பாதீர்கள். இந்த சேதியை உடனடியாக பரப்புங்கள் வைரல் ஆக்குங்கள்'' என்கிறது அந்த குரல்.
ஜோகுலாம்பா கட்வால் மற்றும் வனபார்த்தி ஆகிய மாவட்டங்கள் ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பின் தங்கியவை என்று கருதப்பட்ட 20 மாவட்டங்களில் அடக்கம். இந்த மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட பகுதிகள். இடையிடையே ஆங்காங்கே நெல், பருத்தி வயல்கள் காணப்படும். பெரும்பாலான மக்கள் நிலமற்றவர்கள். அவர்கள் வேலை தேடி மாநகரங்களுக்குச் செல்வார்கள்.
அவர்களில் 50% பேருக்குத்தான் எழுத படிக்க தெரியும். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு திறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) இருக்கிறது. பெரும்பாலும் அவை ஏற்கெனவே பயன்படுத்தி விற்கப்பட்ட 2000 ருபாய் மதிப்புள்ள சீன மாடல் போன்களே. குறைவான கல்வி அறிவு இருந்தாலும் மலிவான விலையில் இணைய வசதி கிடைப்பதால் அவர்களால் தொழில்நுட்பத்தை முழுமையாக அணுக முடிகிறது.
ஊடக அறிவு அவர்களுக்கு மிகவும் குறைவு. வாட்சப் மூலம் பகிரப்படும் செய்திகள், வைரல் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றவை அவர்களைக் கவர்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு டஜனுக்கும் அதிகமான வாட்ஸ்-அப் குழுக்கள் இருக்கின்றன. சாதி அடிப்படையில், உறவுகள் அடிப்படையில், கிரிக்கெட் விவசாயம் என விருப்பங்கள் அடிப்படையில் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கிக்கொண்டு கிராமத்தினர் தீவிர ஈடுபாட்டுடன் பயன்படுத்துகின்றனர்.

பட மூலாதாரம், Bloomberg
ஒவ்வொரு நாளும் 13 பில்லியன் செய்திகளை வாட்ஸ்-அப் வழியே அனுப்பும் சுமார் 20 கோடி இந்தியர்களில் இவர்களும் அடங்குவர். இந்தியாதான் வாட்ஸ்அப்புக்கு மிகப்பெரிய சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம், இக்காணொளிகள் இரண்டு மாவட்டங்களில் வைரலாக பரவியது. போலிச் செய்திகளை அழித்து கிராம போலீஸ் காவலுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க ராஜேஸ்வரி திட்டமிட்டார். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலர் அனுப்பப்பட்டார். அவர் வீடு வீடாக சென்று போலிச் செய்திகள் மற்றும் காணொளிகளை அங்குள்ளவர்களுக்கு காண்பித்து விளக்கினார்.
மக்கள் வதந்திகளை நம்ப கூடாது என்றும் மேலும் அவற்றை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் வதந்தி பரப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் கிராமத்தினரிடம் கூறினர். இரவு ரோந்து பணி தீவிரமாக்கப்பட்டது. கிராம காவலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோரின் செல்பேசி எண்கள் மக்களிடம் அளிக்கப்பட்டது மேலும் சுவரிலும் எழுதப்பட்டது.
ஒன்றரை மாதத்துக்கும் மேலாக காவல்துறை அதிகாரி ராஜேஸ்வரி தொடர்ச்சியாக நிம்மதியாக உறங்கவில்லை ஏனெனில், வாட்ஸ்அப் மற்றும் இந்தியாவின் செய்தி பகிர்வு செயலியான ஷேர் சாட் மூலமாக குழந்தை கடத்தல்காரர்கள் மற்றும் உறுப்பு திருடர்கள் உலவுவதாக வதந்தி பரவியது.
கடந்த 2016 -17 ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 54 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இந்த பதிவுகளை சோதனை செய்தபோது இந்த குறிப்பிட்ட பகுதியில் யாரும் சமீபத்தில் கடத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
ஆனால் காவல்துறையினரின் செல்பேசிகள் தொடர்ந்து ஒலித்தவண்ணம் இருந்தன. ஒருநாள் ஒரு கிராமவாசி செல்பேசியில் அழைத்து தனது வீட்டு கதவு மீது சிலர் கற்களை எறிவதாகவும் மேலும் குழந்தை கடத்தல்கார்கள் வந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால் கிராமத்தில் பணியில் இருந்த காவலர் அதுபோன்ற எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்றும் கிராமம் அமைதியாக இருக்கிறது என்றும் காவல் நிலையத்துக்கு அறிக்கையளித்தார்.

பட மூலாதாரம், Bloomberg
இதையடுத்து ராஜேஸ்வரி, தானே இவ்விஷயம் குறித்து அறிவதற்கு களமிறங்கினார். '' நான் கண்டறிந்தது என்னவெனில், ஒரு குடிகார கிராமவாசி குழந்தை கடத்தல் குறித்த காணொளி பார்த்துவிட்டு கடத்தல்காரர் வந்துவிட்டதாக ஒரு பிரமையில் காவல்துறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டார்'' என்கிறார் ராஜேஸ்வரி.
கடந்த ஏப்ரல் மாதம், ஒரு கிராமத்தில் ஒரு மத விழா முடிந்ததும் மக்கள் உறங்கச் சென்றனர். இரண்டு பெண் பாடகர்கள் அங்கே விழாவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியபிறகு இரவு நேரத்தில் கடைசி பேருந்தை தவறவிட்டனர். இதையடுத்து உள்ளூர் கோயில் ஒன்றில் அன்று இரவு தங்குவதற்கு முடிவு செய்தனர். நள்ளிரவு நேரத்தில் ஒரு மது அருந்திய நபர் அவர்களை பார்த்துவிட்டார். பின்னர், ஒட்டுமொத்த கிராமத்தையும் எழுப்பிவிட்டு, குழந்தை கடத்தல்காரர்கள் கோயிலில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்தார்.
கோயிலுக்கு ஓடிவந்த கும்பலொன்று அப்பெண்களை வெளியே இழுத்து வந்தது. ஒரு மரத்தில் கட்டி அடித்தது. இந்நிகழ்வின்போது உஷாரான ஒரு கிராமவாசி கிராம காவலரை தொடர்பு கொண்டார். நான்கு காவலர்கள் அந்த பகுதிக்கு வந்து அப்பெண்களை கடைசி நேரத்தில் காப்பாற்றினார்.
சில வாரங்கள் கழித்து, இன்னொரு கிராமத்தில் ஒருவர் வயல்வெளியில் மறைந்து கொண்டு தனது காதலிக்காக காத்திருந்தார். உள்ளூர்காரர்கள் சிலர் பார்த்துவிட்டனர். ஒரு கும்பல் சூழ்ந்து அவரை அடித்து வெளுத்தது. இம்முறையும் ஒரு கிராமவாசி காவலரை தொடர்பு கொண்டதால் கும்பலிடம் சிக்கிய நபர் காப்பாற்றப்பட்டார்.
மற்றொரு கிராமத்தில் ஒரு கால்நடை மேய்ப்பருக்கும் இரண்டு இளைஞர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. அவ்விரு நண்பர்களும் தங்களுடன் சண்டை போட்டவரின் படத்தை வாட்ஸ்-அப்பில் குழந்தை கடத்தால்காரன் என்று குறிப்பிட்டுப் வாட்சாப்பில் பகிர்ந்தனர்.
அதே தினத்தன்று, தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அந்நபர் விட்டிருந்தபோது, அண்டை கிராமத்து மக்கள் அவர்களது திறன்பேசியில் இவரது புகைப்படத்தை பார்த்திருந்த்தால் சூழ்ந்துகொண்டு தாக்கினர். இந்த செய்திகளுக்கு காரணகர்த்தாவான இரண்டு இளைஞர்களும், சண்டை காரணமாக பதிலடி தருவதற்காகவும், தக்க பாடம் புகட்டுவதற்காகவும் புகைப்படத்தை வைரல் ஆக்கியதாவும் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Bloomberg
இது போன்ற 13 சம்பவங்கள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்துள்ளன. கிராமத்தினர் ஆத்திரம் கொண்ட போதெல்லாம் கிராமம் முழுவதும் கற்கள் மற்றும் கம்புகளோடு திரிந்தனர்.
கிராமத்தில் இருந்த காவலர்கள் ஊர் பெரியவர்கள் மற்றும் கிராம சபை தலைவர்ளுடன் தொடர்ந்து பேசி போலிச் செய்திகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியதாக ராஜேஸ்வரி கூறுகிறார். கிராமத்தில் பணிபுரிந்த காவலர்கள் தங்களை கிராமவாசிகளின் வாட்ஸ்-அப் குழுக்களில் இணைத்துக்கொண்டு என்னென்ன செய்திகள் பகிரப்படுகின்றன என்று கண்காணித்தனர்.
திருமணங்கள், இறுதி சடங்குகள் போன்றவற்றில் டிரம் அடித்து செய்தி சொல்பவர் மூலம் கிராமம் முழுவதும் வதந்திகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. போலிச் செய்திகள் குறித்தும் அதன் அபாயங்கள் குறித்து விளக்க ஒரு குழுவை உருவாக்கி, அவர்களதுடன் கிராமம் முழுவதும் பயணித்து ஆடிப்பாடி செய்திகளை பகிர்ந்தனர் காவலர்கள் .
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் குறைந்தது 25 பேர் கும்பல் கொலைகளில் உயிரிழந்தனர். இந்திய அரசாங்கமானது வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு போலிச் செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்ககோரியது.
ஆனால் தெலங்கானாவில் 400-க்கும் அதிகமான கிராமங்களில் வதந்திகள் பரவி பதற்றம் ஏற்பட்டிருந்தாலும் யாரும் உயிர் இழக்கவில்லை.
அங்கு உண்மைகள் கேட்கப்படுகின்றன. புரளிகள் புதைக்கப்படுகின்றன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












