You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்தவ காப்பீடு திட்டம் ‘மோதி கேர்’ - சுகாதார துறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருமா?
- எழுதியவர், டேவினா குப்தா
- பதவி, வணிக செய்தியாளர், பிபிசி
இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினத்தின் போது ஹரியானா கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்தார் கரிஷ்மா. இந்தியாவின் புதிய சுகாதார காப்பீடு திட்டத்தின் முதல் பயனாளி கரிஷ்மாவின் அம்மா புஷ்பாதான்.
ஹரியானாவில் புதிய காப்பீடு திட்டத்தின் மாதிரி திட்டத்தில் புஷ்பா உட்பட பலர் பதிவு செய்திருந்தனர்.
புஷ்பா, "எனது முதல் குழந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்தது. எங்களுக்கு மருத்துவத்திற்கு மட்டும் ஒன்றரை லட்சம் செலவானது. இந்த முறை இந்த காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தேன். அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றேன். அதனால் எங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகவில்லை" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் இலவசம்தான் என்றாலும், மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுப்பதற்காக அனுமதிக்கப்படுபவர்கள் மருந்து மாத்திரை, போக்குவரத்து போன்ற விஷயங்களுக்காக பணம் செலவிட நேரிடும்.
ஆனால், இந்த திட்டத்தின் கீழ் புஷ்பா சிறுதொகை கூட செலவிட தேவையில்லை. மருத்துவமனை மாநில அரசு மோதிகேர் பொதுநிதியிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரை திரும்ப பெற்றுக் கொள்ளும்.
"நாங்கள் மருத்துவ பயனாளிகள் குறித்த தகவலகளை அதற்கான தளத்தில் பதிவேற்றம் செய்த உடன், எங்கள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும். ஆயுஷ்மான் பாரத் குழுவும் எங்களுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தனர்.இது ஆண்டுக்கொரு முறை அரசு நிதி ஒதுக்கீடு செய்வதுபோல அல்ல." என்கிறார் கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் சுரேந்தர் காஷ்யப்.
இந்திய உச்ச நீதிமன்றம் ஆஸ்பெட்டாஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் உடல்நிலை தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை 1995 ஆம் ஆண்டு வழங்கியது. மருத்துவசதி என்பது ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமை என்று விவரித்தது அந்தத் தீர்ப்பு.
ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பின், இந்தியா அந்த கனவை நிறைவேற்றி இருக்கிறது. அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்திருக்கிறது.
இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜானா, சுருக்கமாக 'மோதி கேர்' திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலமாக மக்கள் தொகையில் 40 சதவீத பேர் பலனடைவார்கள்.
காப்பீடு திட்டம்
இந்த நாட்டின் வறுமையில் வாழும் ஏறத்தாழ 50 கோடி பேர் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த காப்பீடு திட்டத்தால் பயனடைய தகுதி உடையவர்கள். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பின் படி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் 8000 மருத்துவமனைகள் செயல்படுத்துகிறது. பயனாளிகள் குறித்த அனைத்து தகவல்களும் இணையத்தில் பதிவேற்றப்பட்டு இந்த மருத்துவமனைகளுடன் பகிரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் அரசாங்கம் 'ஆயுஷ்மான் கேந்திராஸ்' மையத்தை திறந்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அடையாள அட்டையுடன் இந்த மையங்களுக்கு சென்று உதவி கோரலாம். அங்குள்ள அலுவலகர்கள் இவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனுடைய தகுதி உள்ளவர்களா என சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு தகவல்களை ஆய்வு செய்வார்கள்.
யார் இந்த காப்பீடு திட்டத்திற்கு நிதி அளிக்கிறார்கள்?
மாநில அரசாங்கம் இந்த திட்டத்திற்காக லாபநோக்கமற்ற அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறது. தங்களது பட்ஜெட்டிலிருந்து ஒரு தொகையை இந்த அறக்கட்டளைக்கு அளிக்கிறது. மத்திய அரசும் 60 சதவீத நிதியை வழங்குகிறது.
இன்னொரு மாதிரியும் இருக்கிறது. அதில் மாநில அரசு தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்கலாம்.
கள நிலவரம் என்ன?
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு 2.65 லட்சம் மருத்துவ படுக்கைகள் கிடைக்க வழிவகை செய்கிறது என்கிறது அரசு. ஆனால், உண்மையில் களநிலவரம் அவ்வாறாக இருக்கிறதா?
கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிம்ன் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜகதீஷ்,"இருபது சதவீதம் வரை மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயரலாம் என கணிக்கிறோம். மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவார்கள். மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் போதுமான அளவு இல்லை" என்கிறார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி 11, 082 நபருக்கு ஒரு அலோபதி மருத்துவர், 1844 பேருக்கு ஒரு மருத்துவ படுக்கை, 55, 591 பேருக்கு ஒரு அரசு மருத்துவமனை என்ற அளவிலேயே உள்ளது என்கிறார்.
பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள். ஏழைகள் இந்த மருத்துவமனைகளுக்கு செல்வதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத விஷயம்.
இதுவரை 4000 தனியார் மருத்துவமனைகள் இந்த 'மோதிகேர்' திட்டத்திற்குள் வர ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைக்காக அரசாங்கம் உறுதி செய்துள்ள தொகை குறைவாக இருப்பதாக கூறி இந்த திட்டத்தில் இணையவில்லை.
தனியார் மருத்துவமனைகளை இந்த திட்டத்திற்குள் கொண்டுவர கட்டணத்தை திருத்தி அமைக்க தயாராக இருப்பதாக கூறுகிறது அரசாங்கம்.
பிற நாடுகளின் நடைமுறை என்ன?
ஒரே அடிப்படையான வித்தியாசம் மக்கள் தொகை. எடுத்துக்காட்டாக பிரிட்டன் போன்ற நாடுகளில் தேசிய சுகாதார சேவைகளில் அனைத்து மக்களும் அங்கமாக இருப்பார்கள். பொது மருத்துவமனைகளில் பெரும்பாலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். ஆனால் மோதிகேர், இந்தியாவில் சுகாதார சேவைகளை பெறக்கூடிய வசதியற்றவர்களுக்காக தொடங்கப்பட்டது.
அமெரிக்காவின் ஒபாமாகேர் அனைத்து குடிமக்களுக்கும் காப்பீட்டை கட்டாயமாக்கியது. பின் குடிமக்கள் கட்டும் காப்பீட்டு தொகைக்கு மானியம் வழங்கியது.
தற்போது டிரம்பின் நிர்வாகத்தில் காப்பீட்டு தொகைகள் குறித்து பல அரசியல் விவாதங்கள் நிகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்ன?
பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களை சில இன்னும் இந்த திட்டத்தில் சேரவில்லை அவைகளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுவில்லை.
மோசடி மற்றும் தவறாக பயன்படுத்துவதை கண்காணிப்பது இந்த திட்டத்தின் இதில் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
தவறுகள் நடக்காமல் இருக்க அரசாங்கம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும், கட்டண ரசீதுகள் மற்றும் பயன்பாட்டாளர்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை சரிபார்க்கும் கள ஊழியர்களையும் நம்புயுள்ளது.
"பயன்பாட்டாளர்களை அறிய எங்களிடம் வலுவான கணினி தொழில்நுட்பம் உள்ளது. எனவே யார் வேண்டுமானாலும் இந்த சேவையை தவறாக பெறலாம் என்பதெல்லாம் கிடையாது." என ஆயுஷ்மான் பாரத்தின் நிர்வாக தலைவர் இந்து பூஷன் பிபிசியிடம் தெரிவித்தார்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்