குடும்ப பிரச்சனையில் குழந்தைகள் பலிகடா ஆவதற்கு காரணம் என்ன?

திருப்பூரில் கணவன் மீது எழுந்த சந்தேகத்தில் குழந்தையை நீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்துள்ளார்.

கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சனையில் குழந்தைகள் பலிகடா ஆவதற்கு என்ன காரணம் என்று 'நீங்கள் நினைக்கிறீர்கள்?' என #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"சமூகத்தில் நிகழ்ந்த பல மாற்றங்கள்தான் காரணம். முதலாவது கூட்டு குடும்பம் ஒழிந்தது, இரண்டாவது பணம் பணம் என்று ஓடி ஓடி பேச நேரம் இல்லாதது, சீரியல்களில் வரும் வக்கிரமான கருத்துக்கள், இதோடு கூட சுயநலம் தலைவிரித்தாடுவது. விட்டுக்கொடுத்தல் தியாகம் இவற்றை தொலைத்ததன் விளைவு," என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன் எனும் ஃபேஸ்புக் நேயர்.

"போராட தைரியமற்ற, கணவன் மேல் நம்பிக்கை இழந்த, முற்காலத்து மனப்பான்மை கொண்ட அப்பாவித் தாய்," என ஜோதிலிங்கம் எனும் ட்விட்டர் நேயர் கூறியுள்ளார்.

தமீம் அன்சாரி எனும் நேயர், "ஒரு பெண் தான் இப்படி ஆவாள் என்று இல்லை. ஆண் இதைவிட கொடூரமாக மாறலாம். வித்தியாசம் இது தான். ஒரு ஆண் தன்னுடைய எதிர்மறை எண்ணங்களையும் கூட தைரியமாக வெளிப்படுத்த சுதந்திரம் பெற்று இருக்கிறான்," என்று பதிவிட்டுள்ளார்.

"வலியவர்களின் வீரமெல்லாம் எளியவர்களிடம் தான் எடுபடும். கணவன் மீது கோபம் ஏற்பட்டால் அவர் வாங்கி கொடுத்த அற்ப விலையுள்ள நகைகளையோ, சொத்துக்களையோ சேதபடுத்துவார்களா? ஏன் குழந்தைகளை இறைவனின் விலை மதிப்பற்ற அருட்கொடைகளை புரிந்து கொள்ளாத மூடர்கள்," என மைதீன் ரிஃபா எனும் நேயர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களையும் இதற்கான காரணமென்று சில நேயர்கள் கூறியுள்ளனர்.

கூட்டு குடும்ப வாழ்க்கை இல்லாததே அடிப்படை காரணம்.... பணம் சம்பாதிக்கும் நாம் பண்புகளையும்.. பக்குவத்தையும் தொலைத்து விட்டோம் என்கிறார் ஆசிக் அலி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :