கைது செய்யப்படும் செயற்பாட்டாளர்கள்:“பெரும் கட்சிகளின் மெளனம்தான் அச்சம் தருகிறது”

எதிர்குரல்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.ஒரு நாடு தொடர்ந்து ஜனநாயக பாதையில் இயங்க வேண்டுமானால் அந்த நாடு எதிர்குரல்களுக்கு இடம் தரவேண்டும். ஆனால், இப்போது இந்தியா இதற்கு எதிர் திசையில் பயணித்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்.

சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகிய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஐந்து செயற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளை அவர்களுக்கும்

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மனித உரிமை செயற்பாட்டளரும் மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளருமான ஹென்றி டிஃபென், "எதிர்ப்பு குரல்கள் அனைத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக ஒடுக்கப்பார்க்கிறது இந்திய ஒன்றிய அரசு. " என்கிறார்.

"இது ஐ.நா மனித உரிமை பாதுகாவலர்கள் பிரகடனத்தின் இருபதாம் ஆண்டு. இந்த சமயத்தில் இந்த கைதுகள் நிகழ்ந்துள்ளன. இந்த கைதுகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை அமைப்புக்கு மனு அளித்துள்ளோம்" .

"இந்த கைதுகள் குறித்து பெரும் அரசியல் கட்சிகள் பேசாதது துரதிருஷ்டம். ஆன்டி- நேஷனல், மாவோயிஸ்ட் ஆகிய பதங்களை ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் போது, எதிர் கட்சிகள் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தயங்குகின்றன. இப்போது அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றால், நாளை அவர்களும் இவ்வாறாக சித்தரிக்கப்படலாம். இதே நடவடிக்கை அவர்கள் மீதும் பாயலாம்" என்கிறார் ஹென்றி.

எதிர்க்கட்சிகள் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவிப்பதோடு நின்றுவிடாமல். களத்திற்கு வந்து போராட வேண்டும் என்கிறார் அவர்.

அரசியல் கட்சிகளின் மெளனம்

ஆவணப்பட இயக்குநரும் சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதியும் இதே கருத்தை முன்வைக்கிறார். இப்போது உண்மையில் அச்சம் தருவது பெருங்கட்சிகளின் மெளனம்தான் என்கிறார் அவர்.

திவ்யபாரதி, "பெரும் அரசியல் கட்சிகள் வலுவற்று இருப்பது போல காட்சி தருகின்றன. உண்மையில் களத்தில் காத்திரமாக செயல்படுவது தனி நபர்களும், சிறு அமைப்புகளும், கலைஞர்களும்தான். அவர்களை முடக்கப்பார்க்கிறது அரசு. அவர்களை முடக்குவதன் மூலம், பெருமக்களிடம் அச்சத்தை விதைக்கப்பார்க்கிறது. தமிழகத்தில் திருமுருகன், வளர்மதி கைதையும் நாம் இந்தப் பின்னணியில்தான் புரிந்து கொள்ள வேண்டும்" என்கிறார்.

உளவுத்துறையை கொண்டு சாமான்ய மக்களை மிரட்டுவது, ஆவணப்படத்தை திரையிட இடம் அளித்தவர்களை அச்சுறுத்துவது என ஜனநாயக குரலை நெறிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. இது ஆரோக்கியமற்ற போக்கு. ஜனநாயக படுகொலை. இது தொடருமானால் நாளை எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருக்கும் என்கிறார் திவ்யபாரதி.

இப்போதாவது அரசியல் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அறமற்ற கைதுகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :