“நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட அவலமே கேரள வெள்ளம்”

கேரள வெள்ளசேதத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திடீரென்று அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டது முக்கிய காரணம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் தெரிவித்தது.

இக்கட்டான தருணத்தில் மத்திய, மாநில அரசுகளை குற்றஞ்சாட்டும் கேரளாவின் போக்கு சரியா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

நேயர்கள் இது பற்றி தங்களின் சமூக வலைதளங்கள் வழியாக தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

தர்மா லெட் என்கிற நேயர், கேரளா மக்கள் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் அணைகளில் இருந்து அதிக நீரை தமிழ்நாடு நோக்கி வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைப்பது சரியல்ல அது இயற்கையாக சாத்தியமற்றதும கூட என்று ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்,

குற்றஞ்சாட்டும் போக்கு சரியானதல்ல. அதுவும் ஓரளவுக்கு நிவாரணப்பணிகள் முடிந்த பிறகு சொல்வது சரியானதல்ல. ஆனால் நம் தரப்பில் தப்பில்லை என்றாலும் அவர்கள் சொல்வது ஏற்புடையதல்ல என்றாலும் நாம்தான் அதை பலமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசு சரியான வாதத்தை எடுத்து வைத்து நிரூபிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் சுப்பு லெட்சுமி

சயிதா ஹமீத் காபீர் என்ற நேயர், உண்மையான காரணத்தை கண்டறிந்து கேரள மக்களை இது போன்ற வெள்ளத்திலிருந்து வருங்காலத்திலாவது காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

முற்றிலும் தவறான கருத்து அவர்கள் செய்த தவறை சரிசெய்ய தமிழகம் மேல் பழிபோடுவது கண்டிக்கதக்கது என்பது அலஜேந்திரனின் கருத்தாகும்.

பனமாலை மோகன் தனது ஃபேஸ்புக் பதிவில், கேரள வெள்ளத்திற்கான காரணம், தமிழக வெள்ளம் வந்தபோது சொல்லப்பட்டது போல அணை திறந்துவிட்டதால் அல்ல, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட அவலமே அது என்கிறார்.

சக்தி சரவணன் என்கிற நேயர், காடுகள், நீர்வழித் தடங்கள், நீர்நிலைகளின் சுற்றத்தை குறைத்து சுற்றுலா தளங்கள் பெருகியதே கேரள வெள்ள பெருக்கு ஏற்பட மூலகாரணம் என்பதை உணராமல் தமிழகத்தின் ஓர் அணையைக் குற்றவாளி கூண்டில் ஏற்றத் துடிப்பது ஏற்புடையதல்ல என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்தில் தெரிவித்திருக்கிறார்.

தன் தவறை தவிர்க்க பழி விழுகிறது... இது கேரளாவின் மட்டமான வழக்கமான அரசியல் என்கிறார் மேகு மேகநாதன் என்ற நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :