ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் புகுந்த நீர்; முதல்வர் ஆய்வு

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் உட்புகுந்த நீர்; ஆய்வு செய்த முதல்வர்

ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்டார்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு நடத்தியதுடன், பாதிப்படைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.

இதற்காக இன்று காலை தனது ஆய்வு பணியை பவானியில் துவங்கிய முதல்வர், நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் காவிரியாற்றின் வழித்தடத்தில் உள்ள கரையோர பகுதிகள் பல இடங்களிலும் சேதமடைந்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையினால் பவானி மற்றும் காவிரி ஆறுகளில் ஒரே சமயத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 205 ஹெக்டேர் பரப்பளவிற்கு வேளாண் பயிர்களும், 404 ஹெக்டேர் பரப்பளவிற்கு தோட்ட பயிர்களும் என 609 ஹெக்டேர் பரப்பளவிற்கு நடப்பாண்டு காவிரி ஆற்றின் வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 47 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் உட்புகுந்த நீர்; ஆய்வு செய்த முதல்வர்

ஆய்வுக்கு பின் தமிழக முதல்வர் கூறும் போது, பவானி இரு ஆறுகள் சேரும் இடம் என்பதால் ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ளவர்கள் வீடு கட்டிதர கோரிக்கை வைத்துள்ளதாகவும், இவர்களுக்கு பாதுகாப்பான அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குடிமராமத்து பணிகள் பொறுத்த வரையில் 328 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிபாளையம் பகுதியில் 7 முகாமில் ஆயிரம் பேர்களும், குமாரபாளையத்தில் 8 முகாம்களில் 2 ஆயிரத்து 599 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே இவர்களுக்கான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான் பால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

காணொளிக் குறிப்பு, கூடுதுறையில் வெள்ளம்; கிராமங்களில் உட்புகுந்த நீர்

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாராபாளையம் ஆற்றங்கரையோரத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 849. இதில் பகுதி சேதம் 509, முழுவதும் பாதிக்கப்பட்ட வீடுகள் 340. இவ்வாறு வீடுகளில் நீர் புகுந்தும், வீடுகள் நீரில் மூழ்கியும் உள்ளன.

இவ்வாறான பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு உடைகள் உட்பட 23 வகையான பொருள்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தற்போது அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தின் அளவை கொண்டே வெளியேற்றத்தின் அளவும் மாறுபடும் என்றார்.

தற்போது 2 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்தும், பவானி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீர் என 2 லட்சத்து 1 5 ஆயிரம் கன அடி நீர் பவானியை வந்தடையும், இந்நிலை நீர்வரத்தின் அளவை பொருத்து மாறுபடும் என்றார்.

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் உட்புகுந்த நீர்; ஆய்வு செய்த முதல்வர்

மேலும், கடைமடை விவசாயிகளுக்கு இன்னும் சில தினங்களில் தண்ணீர் கிடைக்கும், தற்போது திறக்கப்படும் 25, 500 ஆயிரம் கன அடி நீர் நாற்று விடுவதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், கடைமடை பகுதியை ஆய்வு செய்ய 9 இந்திய ஆட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல், உள்ளூர் ஆறுகளை இணைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மழையினால் வீணாகும் நீரை சேமிக்கும் பொருட்டு, 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வுப்பெற்ற கண்காணிப்பு பணியாளர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்படுள்ளதாகவும் , இவர்களின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தடுப்பணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறாக நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக முதற்கட்டமாக 292 கோடி ரூபாய் ஒதுக்கி 62 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன், தற்போதைய வெள்ளத்தால் அதிக அளவு நீர் வந்தாலும , பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :