You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஸ்ஸாம்: ' குடியுரிமை மதத்தை பொறுத்தது அல்ல, தேதி சம்பந்தப்பட்டது'
- எழுதியவர், ஷகீல் அக்தர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு அமைப்பின் (Coordinator of National Registration(NRC) ஒருங்கிணைப்பாளர் தலைவர் பிரதீக் ஹஜீலா, அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட குடிமக்கள் பட்டியல் முற்றிலும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் தயாரிக்கப்பட்டது என்று கூறுகிறார். வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள் குடியுரிமைக்கான கூடுதல் அல்லது புதிய ஆவணங்களை தருவதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறுகிறார்.
ஹஜீலாவுடன் பிபிசி கண்ட பேட்டியில், பட்டியல் தயாரிப்பதில் எந்தவிதமான மத பாகுபாடும் காட்டப்படவில்லை என்று அவர் உறுதிபட கூறினார். வரைவு பட்டியலில் இடம்பெறாத 40 லட்சம் விண்ணப்பதாரர்களில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எந்தவொரு குழு அல்லது குறிப்பிட்ட எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பட்டியலில் எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் பணியில் மதமோ, சாதியோ, இனமோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை; தேதியைத்தான் கணக்கில் எடுத்துக்கொண்டோம், அந்த தேதி 1971 மார்ச் 24.
பெருமளவிலான வங்கதேச மக்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியது தொடர்பாக அந்த மாநிலத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய - மாநில அரசுகள் மற்றும் கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகளுக்கும் இடையே 1985இல் உடன்படிக்கை ஏற்பட்டது.
அந்த உடன்படிக்கையின்படி 1971 மார்ச் 24 நள்ளிரவுக்குப் பிறகு, மாநிலத்தில் குடியேறுபவர்கள் 'சட்டவிரோத வெளிநாட்டவர்' என்று அறிவிக்கப்படுவார்கள். இது இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதற்கு முதல்நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேதிக்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்தவர்கள் அனைவரும் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக கருதப்பட்டனர். அவர்கள் வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமுக்கு குடியேறியவர்களாக இருந்தாலும் அவர்களும் குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற தகுதி பெற்றவர்கள்.
இந்த பதிவேட்டில் இடம் பெறாத 40 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதோடு, அதற்கான விளக்கத்தை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.
தங்களது விண்ணப்பத்தை நிராகரித்த அதிகாரிகளிடமே தங்கள் விளக்கத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும் என்ற மக்களின் அச்சத்தைப் பற்றி பிரதீக் ஹஜீலாவிடம் கேட்டோம்.
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகள் நடைபெறும் மையங்களில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அதிகாரிகளை மாற்றலாம், அதுவும் உயரதிகாரிகளையே நியமனம் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் இடமாற்றம் செய்துவிடுவோம் என்பதால் அச்சம் தேவையில்லை என்று ஹஜீலா விளக்கம் அளிக்கிறார்.
இந்த நடவடிக்கையை தொடங்குவதற்கு முன்னதாக நியம இயக்க செயல்முறையை (Standard Operating Procedure) உள்துறை அமைச்சகம் சமர்ப்பிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
'உயர் நீதிமன்றத்தின் அங்கீகரத்திற்கு பிறகு அதனை நாங்கள் நடைமுறைபடுத்துவோம்' என்று ஹஜீலா கூறுகிறார்.
பட்டியலில் 40 லட்சம் நபர்கள் இடம்பெறவில்லை என்பது மிகப் பெரிய எண்ணிக்கைதான் என்பதை ஹஜீலா ஒப்புக்கொள்கிறார். ஆனால் இது இறுதி பட்டியல் அல்ல என்றும் மக்கள் எந்தவித வரம்பின் கீழும் கொண்டுவரப்படவில்லை என்பதையும் அவர் கூறுகிறார்.
'இது விரிவான, முழுமையான செயல்முறை. லட்சக்கணக்கான தனி நபர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்கள் வழங்கும் ஆவணங்களையும், சமர்ப்பித்த சான்றுகளையும் ஆராய்கின்றோம். வேறு எந்தவொரு முகமையின் ஆய்வுகளையும் நாங்கள் ஏற்கவில்லை. 1971ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர்கள் அஸ்ஸாமில் வசித்ததற்கான ஆதாரங்களை மிகவும் கவனமாக பரிசீலித்து, துல்லியமாக சரிபார்க்கிறோம்.'
இனிமேல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலிப்பது எளிதானதாகவே இருக்கும் என்று அவர் கூறுகிறார். முன்னர் 33 மில்லியன் மக்களின் விண்ணப்பங்களை பரிசீலித்தோம், இனி நான்கு மில்லியன் பேரின் ஆவணங்களை மட்டுமே சரிபார்க்க வேண்டும் என்பதால் பரிசீலனை சுலபமானதாக இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இறுதிப் பட்டியலில் எவ்வளவு பேர் இடம் பெறுவார்கள் என்று கேட்டப்பட்டதற்கு, எந்தவிதமான ஊகங்களும் இந்த விஷயத்தில் தவறானதாகிவிடும்; விண்ணப்பதாரர்கள் அளிக்கும் சான்றுகளே அதனை முடிவு செய்யும் என்று அவர் பதிலளித்தார்.
பட்டியலில் இடம்பெறாதவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும், விண்ணப்பிப்பதற்குமான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இறுதிப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்பதையும் கணிக்கமுடியாது என்கிறார் ஹஜீலா.
உச்ச நீதிமன்றம் இறுதி தேசிய குடிமக்கள் பட்டியலை வெளியிட காலக்கெடு நிர்ணயிக்கும்வரை பட்டியலை வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. ஆனால் அஸ்ஸாம் மாநிலத்தில் வசிக்கும் வங்க மொழி பேசும் சிறுபான்மையினரை களையெடுக்கப்படும் நடவடிக்கையாகவும் இது இருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :