You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: சமூக வலைதள கண்காணிப்பை கைவிட்ட மத்திய அரசு
இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.
தினமணி: சமூக வலைதள கண்காணிப்பை கைவிட்ட மத்திய அரசு
பொது மக்களின் சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் வகையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதோடு, தனது சமூக வலைதளக் கொள்கையை முழுமையாக மறுஆய்வு செய்வதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் வகையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார் என்று விளக்குகிறது அச்செய்தி.
தினமலர்: வைர வியாபாரி நீரவ் மோதியை நாடு கடத்த நடவடிக்கை
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,500 ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நீரவ் மோதி, அவரது உறவினர், மெஹூல் சோக்சி ஆகியோரை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை தீவிரப்படுத்தி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரன்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது. இன்டெர்போல் சார்பிலும் இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிரட்டனில் தஞ்சமடைந்துள்ள நிரவ் மோதியை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை தீவிரப்படுத்தி உள்ளதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
தி இந்து (ஆங்கிலம்) - எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்
அரசு வேலையில் பணி உயர்வு நடவடிக்கையின் போது, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று ’தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 1000 ஆண்டுகளாக தலித் சமூகம் பிற்படுத்தப்பட்டதை மனதில் வைக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :