You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அனுமதி அளித்தது யார்? - உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முறையாக அனுமதி பெறப்பட்டதா என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்பது உட்பட, இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட 15 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடைபெற்றுவருகின்றன.
குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர் தாக்கல்செய்திருந்த பொதுநல மனுவில் ஒரே சம்பவம் குறித்து 242 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் இதனை சிபிசிஐடி காவல்துறையினரும் உள்ளூர் காவல்துறையினரும் விசாரித்துவரும் நிலையில், பொது மக்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும் ஆகவே எல்லா வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரணை செய்ய வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று கோரியிருந்தார்.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, அரசுத் தரப்பை நோக்கி நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முறையான அனுமதி பெற்றுதான் நடத்தப்பட்டதா, அந்த அனுமதியை அளித்தது யார், அந்த அனுமதி வாய்மொழியாக அளிக்கப்பட்டதா, எழுத்து மூலமாக அளிக்கப்பட்டதா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
மேலும், மே மாதம் 21ஆம் தேதி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டு அடுத்த நாள் காலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பினர்.
இது தவிர, கலவரங்களுக்கு அடுத்த சில நாட்களில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டன. அது தொடர்பான ஆவணங்களையும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதன் முதலில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் தாக்கல்செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், எல்லா வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க இயலாது. மேலும் வீடியோ ஆதாரங்களை வைத்தே ஆட்கள் அடையாளம் காணப்படுகின்றனர். ஆகவே யாரும் தேவையில்லாமல் துன்புறுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :