You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை அதிமுக ஆதரித்தது ஏன்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தை முடிக்கவேண்டும் என்ற காரணத்தால்தான் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது என அதிமுக மக்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்த கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகராக உள்ள தம்பிதுரை கூறிய கருத்து உண்மையற்றது என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தம்பிதுரையின் கூற்று உண்மை இல்லை என்பதற்கு அதிமுக கட்சியின் வரலாற்றில் ஆதாரம் உள்ளது என்கிறார் டிகேஎஸ் இளங்கோவன். ''1999ல் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற்றதால் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இதை அனைவரும் அறிவார்கள். அந்த ஆட்சிக்காலத்தில் மத்தியில் தம்பிதுரை சட்டத் துறை அமைச்சராக இருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தனது ஆட்சிக்காலம் முழுவதையும் முடிக்கவேண்டும் என்பது மட்டும்தான் அதிமுகவின் நோக்கம் என தற்போது அவர்கள் கூறுவது அவர்களின் சுயலாபத்திற்காக மட்டுமே,'' என்றார்.
பாஜக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை என்பதுதான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது, முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டது. அதைவிடுத்து அதிமுக கூறும் காரணங்கள் பிரச்சனைகளை திசைதிருப்பும் முயற்சி என்கிறார் டிகேஎஸ் இளங்கோவன்.
''நாட்டில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி கேள்விகள் எழுப்பாமல், அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தது என்பதை மக்கள் அறிவார்கள். அதிமுக அரசு அடுத்த மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காகதான் பாஜகவின் பக்கம் நின்றார்கள்,'' என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியை காப்பாற்றவேண்டும் என்பதை விட கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் தம்பிதுரையின் கருத்தில் வெளிப்படுகிறது என்கிறார் பத்திரிகையாளர் மணி.
''மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகதான் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி செய்ய வேண்டும் என வாக்களித்ததாக அதிமுகவினர் கூறுகிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்னதாக, தமிழகத்தில் முதல்வரின் குடும்ப உறவினர் இல்லத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.163கோடி பணம் மற்றும் காரில் பதுக்கிவைத்திருந்த தங்கம் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்,'' என்றார்.
மேலும், ''ஆர்கே நகர் தேர்தலின்போது, ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்தன. இந்த ஆதாரங்களைக் கொண்டு ஆர்.கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்திவைத்தது. இவை எல்லாம் ஒரு துளிதான். இதுபோல பல ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அதிமுக பாஜகவுக்கு வாக்களித்தது,'' என்றார் மணி.
பாஜகவின் ஆட்சியை 1999ல் ஜெயலலிதா கலைத்ததை சுட்டிக்காட்டிய மணி, ''மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நிலையாக ஆட்சி செய்யவேண்டும் என்று சொல்வது வேடிக்கையான காரணம். அதிமுக பாஜகவுக்கு ஆதரவு தந்தது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். தங்களை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் பாஜகவை ஆதரித்தார்கள் என்பது மிகவும் தெளிவு,'' என்றார் மணி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்