You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது
சேலம் மாவட்டத்தில் சேலம் - சென்னை எட்டுவழி சாலை அமைக்க திட்டமிட்டு அளக்கப்பட்ட பகுதிகளான பாரபட்டி ,சீலநாயக்கன் பட்டி, ஆழகு நகர் பகுதிகளில் கருத்து கேட்டு அப்பகுதி மக்களை சந்திக்க வந்த தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தனசேகரன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் நாம் தமிழார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யுனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஒன்பது பேரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் - சென்னை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணி முடிந்த நிலையில் இன்றைய தினம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் பாரப்பட்டி அருகே உள்ள ஊமாங்காடு பகுதியில் 8 வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து பேசினர்.
அப்போது அங்கு வந்த மல்லூர் போலீசார், அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்து பேசக்கூடாது என்று கூறி அவரை கைது செய்ய முற்பட்டனர்.
சீமான் கைது: தங்களுக்கும் இதே கதிதான் என்று சேலம் பெண் குமுறல்
அப்போது அங்கிருந்த விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 11 பேரை கைதுசெய்து அழைத்து சென்றனர். மல்லூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களை சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சந்தித்து பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட 11 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயிருக்கு மதிப்பு தரும் அரசு இல்லை என பொதுமக்களிடம் கூறிய சீமான் , தலைவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு லட்சம் மரங்கள் நட்டதாக அரசு சொன்னாலும் தாங்கள் எந்த மரத்தையும் பார்க்கவில்லை என்றார்.
ஆக்கிரமிப்பு செய்யப்படும் இரண்டரை ஏக்கர் நிலங்களில் குறைந்தது 70 மரங்கள் இருக்கும் என்று பொதுமக்கள் தங்கள் குறைகளை நம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தங்கள் தரப்பு நியாங்களை எடுத்துரைத்த வண்ணம் இருந்தனர். அப்போது நடைபெற்ற இக்கைது நடவடிக்கையை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
"தங்களின் குறைகளை சீமானிடம் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக அமர்ந்து கருத்துகளை பரிமாறிக்கொண்டு இருக்கும் போது , மக்களை தள்ளிவிட்டு காவல்துறையினர் சீமானை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது எவ்விதத்தில் நியாயம்," என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.
தங்களை பாதுகாக்கும் பொருட்டு அதிகாரிகள், அரசியல்வாதிகள் முன்வராதபட்சத்தில், மக்களின் நலன் கருதி பேசுபவர்களை பேசும்போதே ஒவ்வொருமுறையும் சுற்றிவளைத்து கைது செய்தததாக மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். சமூக ஆர்வலர்கள், கட்சியின் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களுக்கு எவ்விதத்தில் நியாயம் கிடைக்கும், ஆளும் அரசா தங்கள் வாழ்க்கையை காப்பாற்றி எங்களுக்கு நிலம் வழங்கப் போகிறது என பெண்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்