பாலியல் வல்லுறவுக் குற்றவாளியைக் கண்டறிய உதவிய வாட்ஸ்ஆப் காணொளி

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவத்சவா
    • பதவி, பிபிசி இந்தி

இந்தியாவில் பலர் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படுவதற்கு வாட்ஸ்ஆப் மூலம் பரவும் புரளிகள் காரணமாக உள்ளதாகக் சாட்டப்படுகிறது. எனினும், மத்தியப் பிரதேசத்தில் ஒரு பாலியல் வல்லுறவு வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைப் பிடிக்க ஒரு பரவலாகப் பகிரப்பட்ட வாட்ஸ்ஆப் செய்தி உதவியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மாந்த்சாரை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி ஜூன் 26 அன்று பள்ளிக்குச் சென்றபின் வீடு திரும்பவே இல்லை.

அடுத்த நாள் காலை ஒரு பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் ரத்தக் காயங்களுடன், மயங்கிய நிலையில் அந்தச் சிறுமியைக் கண்டுபிடித்தார் ஒரு காய்கறி வியாபாரி.

அச்சிறுமி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்பட, பல காயங்களுக்கு இப்போது அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் செய்தி பரவியதும் சுமார் இரண்டு லட்சம் பேர் நீதி கேட்டு போராட்டத்தில் களமிறங்கினர். எனினும், பள்ளியின் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததாலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாததாலும் துறைக்கு குற்றவாளி யார் என்றே தெரியவில்லை. அந்த சிறுமியும் வாக்குமூலம் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை.

பொதுமக்கள் கோபம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், காணொளிக் காட்சிகளைக் கோரி அப்பள்ளியின் அருகில் கடை நடத்திக்கொண்டிருந்தவர்களை அணுகியது காவல் துறை.

சுமார் 400 மணிநேரம் ஓடக்கூடிய காட்சிகளை ஆராய்ந்தபின் ஒரு மெலிய தேகம் உடைய இளைஞர் ஒருவரின் பின், பள்ளிச் சீருடையில் அந்தச் சிறுமி நடந்து செல்வது தெரிய வந்தது. மிட்டாய் வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி அந்தச் சிறுமியை அவர் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

அது தங்கள் மகள்தான் என்று அச்சிறுமியின் பெற்றோர் உறுதிப்படுத்தினார்கள். எனினும் அந்த நபரின் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த காலணிகளைத் தயாரித்த நிறுவனத்தை காவல் துறையினர் கண்டறிந்தனர்.

அதன்பின்தான் அவர்கள் மூன்று காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர முடிவு செய்தனர். இந்தக் காணொளிகள் சந்தேகத்தின்பேரில் பிறரை கும்பல்கூடி அடிக்கவும் வழிவகுக்கும் எனும் ஆபத்தையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.

மாந்த்சாரின் மதப் பிரச்சனைகள் புதிதல்ல. பசுவதை, மத ஊர்வலங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் அங்கு இதற்கு முன்பும் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினர் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அந்த சந்தேக நபரின் மத அடையாளம் மட்டுமல்லாது அந்த சிறுமி இறந்து விட்டதாகவும் போலிச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதாகக் கூறுகிறார் காவல் அதிகாரி மனோஜ் சிங்.

எனவே வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் மூலம் அவற்றைப் பகிரும் முன்பு, உள்ளூர் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களிடம் தகவல் தெரிவித்தனர் காவல் அதிகாரிகள். இரு மதத்தினரும் இணைந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவினார்கள்.

"குற்றச் சம்பவங்களுக்கு மதச் சாயம் பூசக்கூடாது. இது யாருடைய மகளுக்கும் நடக்கலாம்," என்கிறார் பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஜிதேந்திர ரத்தோர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்தக் காணொளியைக் கண்டவர்கள் அழைத்துத் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ஏழு சந்தேக நபர்களை அவர்கள் பின்தொடர்ந்தனர்.

பேஸ்புக் கணக்குகளை அதன் அடிப்படையில் ஆராய்ந்தபோது ஒரு நபரின் பேஸ்புக் கணக்கில் இருந்த தகவல்கள் காவல் துறைக்கு கிடைத்த தகவல்களுடன் பொருந்திப்போனது.

மூன்று நாட்கள் கழித்து முக்கியக் குற்றவாளியை காவல் துறையினர் கண்டறிந்தனர். ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் அவர்களுக்கு உதவியது.

இது தொடர்பாக இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

காவல் துறையினர் அபாயங்களை முன்கூட்டியே கணித்து காணொளிகளை சமூக வளைத்தளங்களில் பகிர்ந்தது பலனளித்துள்ளது. "வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் காணொளிகளைப் பகிர்ந்த இரவு முழுதும் நான் தூங்கவில்லை," என்றார் மனோஜ் சிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :