You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் எடுக்க குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு
- எழுதியவர், ஹரேஷ் ஜாலா
- பதவி, பிபிசிக்காக
மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மோதி அரசின் புல்லட் ரயில் திட்டத்துக்கு குஜராத்திலும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் விவசாயிகள். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதற்கான இழப்பீடு குறித்த செயல்முறை மீது விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புல்லட் ரயில் என்பது பல மாநிலத் திட்டம் எனக்கூறி, இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த குஜராத் அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து விவசாயிகள் நீதிமன்றத்தில் தங்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஆனால், மக்களின் ஒப்புதலோடு அவர்களின் நிலத்தை கையகப்படுத்த முடியும் என தேசிய அதிவேக ரயில் நிறுவனம் நம்புகிறது. பத்து நாட்களுக்கு முன்னதாக கீடா மாவட்டத்தின் நைன்பூரில் இருந்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் துவக்கினர். குஜராத்திலுள்ள 192 கிராமங்களைச் சேர்ந்த 2500 விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
நைன்பூரைச் சேர்ந்த விவசாயி கான்பா சவுஹானுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அவருடைய நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. '' இந்த நிலம்தான் பதினைந்து பேர் கொண்ட எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம். இந்நிலத்தினை விட்டுக்கொடுக்க முடியாது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
சாப்ரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனு சவுஹான் கூறுகையில் '' எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் அரை ஏக்கர் நிலம்தான் 6-7 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்துக்கும் விலங்குகளுக்கும் உறைவிடம். இந்நிலம் புல்லட் ரயிலுக்காக கையகப்படுத்தப்பட்டால் எங்கள் குடும்பத்தின் 40 -50 பேருக்க இருக்க இடமில்லாமல் போகும்,'' என்கிறார் மனு.
'' ஒரு ஏக்கரில் சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ஐந்து லட்சம் நான் சம்பாதிக்கிறேன். இந்நிலத்தை மலடாக்கி அவர்கள் திருப்பித்தந்தால், அதில் எங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? ஆகவே இப்படியொரு சூழ்நிலையில் நானும் எனது குடும்பமும் எங்கள் நிலம் கையகப்படுத்துவது குறித்து நினைத்துப்பார்க்க முடியாது'' என்கிறார் மனு சவுஹான்.
குஜராத் விவசாயிகளின் கவலைகள் 'மெட்ரோ மேன்' ஈ.ஸ்ரீதரன் கூற்றிலும் எதிரொலிக்கிறது. டெல்லி மெட்ரோ ரயில் அமைப்பின் முன்னாள் தலைவர் ஈ ஸ்ரீதரன் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் புல்லட் ரயில் என்பது மேல்தட்டு வகுப்பினருக்கானது எனத் தெரிவித்துள்ளார்.
''புல்லட் ரயில் மேல்தட்டு சமூகத்தின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும். சாதாரண மக்கள் இத்திட்டத்தால் பெரும் பயனடையப் போவதில்லை. மேலும் இது மிகவும் அதிக செலவு பிடிக்கும் திட்டம். நவீனமான, சுத்தமான, பாதுகாப்பான, வேகமான ரயில் அமைப்புதான் இந்தியாவுக்குத் தேவை'' என அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
''இந்திய ரயில்வே பொறியாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு 225 கிமீ வேகத்தில் செல்லும் அளவுக்கு ரயில் எஞ்சினை மேம்படுத்தியுள்ளனர். இன்னும் 25 கோடி முதலீடு செய்து மும்பை அகமதாபாத் இடையேயான ரயில் பாதையை நவீனப்படுத்தினால் ரயில் வேகத்தை இன்னும் 150 -200 கிமி/மணிநேரம் என்ற அளவுக்கு அதிகரிக்க முடியுமே'' என குஜராத் கெடுட் சமாஜின் தலைவர் ஜெயேஷ் படேலும் கூறியுள்ளார்.
''நிலைமை இவ்வாறிருக்க ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு லட்சத்துக்கு பத்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புல்லட் ரயில் திட்டத்துக்காக விவசாய நிலங்களை ஏன் கையகப்படுத்தவேண்டும்'' என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சூரத்தைச் சேர்ந்த விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
புல்லட் ரயில் திட்டம் இரண்டு மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்படுகிறது. ஆகவே இம்மாவட்ட ஆட்சியர்கள் நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்கியுள்ளனர்.
சூரத்தின் துணை ஆட்சியர் (நில எடுப்பு) எம்.கே.ரத்தோர் கூறுகையில் '' சந்தை மதிப்புக்கு ஏற்றபடி புதிய நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களுக்கு அதன்படி இழப்பீடு வழங்கப்படவேண்டும்'' என்கிறார்.
இந்த விவகாரத்தில் இழப்பீடு குறித்து வேறு எதுவும் கூற அவர் மறுத்துவிட்டார். உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடுத்துள்ளார். இவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு பேச முடியாது எனத் தெரிவித்துவிட்டார் துணை ஆட்சியர்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு நிறுவனமான தேசிய அதிவேக ரயில் நிறுவனம் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ளது.
"விவசாயிகளின் போராட்டங்கள் முற்றிலும் நியாயமானது. வீடும், நிலமும் அவர்களது சொத்து. அதை கைப்பற்றினால் போராட்டம் நிச்சயம்" என்கிறார் தேசிய அதி வேக ரயில் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தனஞ்சய் குமார்.
"திட்டம் குறித்த தகவல்களையும், நிலம் வழங்குவோருக்கு தரும் இழப்பீடு குறித்த தகவலை தாமதமாகத் தந்தது எங்கள் தவறு" என்கிறார் தனஞ்சய் குமார்.
நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டம் நீர்த்துவருவதாக தனஞ்சய் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
தேசிய அதிக வேக ரயில் நிறுவனம் அமைக்கப்பட்டபின் அடிப்படை கட்டமைப்புகளை உண்டாக்குவதில் ஏற்பட்டத் தாமதம், இப்பிரச்சனை அரசியல் ஆவதற்கு சாதகமாக அமைந்ததாக அவர் கூறுகிறார்.
மெட்ரோ மேன் ஸ்ரீதரனின் கருத்துக்கு பதல் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
"எங்கள் இலக்கு அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு சாலை வழியாகவோ அல்லது வான் வழியாகவோ பயணிப்பவர்களே" என்று தெரிவித்தார் தனஞ்சய்.
விமானம் மூலமாக பயணிக்க ஐந்து மணி நேரம் ஆகிறது. விமான நிலையம் செல்லும் வழியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விமானத்தில் பயணிக்கும் நேரம், மும்பை சென்றடைந்த பிறகு அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல், என அனைத்தும் சேர்த்து ஐந்து மணி நேரம் ஆகிறது என்கிறார் அவர்.
இந்த புல்லட் ரயில் மூலம் ஐந்து மணி நேரப் பயணம் இரண்டரை மணி நேரமாக குறையலாம். ஏனெனில் மும்பையின் போக்குவரத்து நெரிசலை பயணிகள் தவிர்க்கலாம்.
மேலும், விவசாயிகள் போராட்டம் திட்டத்திற்கு எதிரானதன்று. அவர்கள் இழப்பீடு குறித்து கவலையடைந்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தம் 2016ன் படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்