You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாதிரியாரின் பாலியல் குற்றம் மூடிமறைப்பு: ஆஸ்திரேலிய பேராயருக்கு 12 மாதம் சிறை
1970களில் பாலியல் தேவைகளுக்கு தேவாலயச் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப் வில்சன் என்ற அந்தப் பேராயர் குற்றவாளி என்று ஒரு ஆஸ்திரேலிய நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. தற்போது அவர் 12 மாதம் சிறைவைக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தண்டனையை அனுபவிக்க அவர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க வாய்ப்பு உள்ளது என்றும் மேஜிஸ்திரேட் கூறியுள்ளார். எனவே, அவர் 12 மாதமும் வீட்டுச் சிறையில் வைக்கப்படலாம் என்றும், ஆறு மாதத்துக்குப் பிறகு அவர் பரோல் பெற முடியும் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.
பாலியல் குற்றச்சாட்டில் இதுவரை தண்டனை பெற்ற கத்தோலிக்க மத குருமார்களில் இவரே மிக உயர்ந்த பதவியை வகிப்பவர். நியூ சௌத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஜேம்ஸ் பாட்ரிக் ஃப்லெட்சர் என்பவர் தேவாலயத்தில் பணியாற்றிய சிறுவர்களை பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்திய குற்றத்தைப் பற்றி போலீசிடம் தெரிவிக்கத் தவறினார் என பிலிப் வில்சன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தாம் குற்றவாளி என்று தீர்ப்பு வந்த பிறகு பேராயராக தாம் ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து அவர் விலகிக் கொண்டார். ஆனால் பதவி விலகவில்லை.
குற்றம் நடந்தபோது இளம் பாதிரியாராக இருந்த வில்சன், குற்றத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பணியில் இருந்து நீக்கினார். திருச்சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதால் தாம் அப்படிச் செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.
சிறுவர்களை பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஃப்ளெட்சர் இது போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளில் 2004ம் ஆண்டு தண்டனை பெற்று இரண்டாண்டுகளுக்குப் பிறகு சிறையிலேயே இறந்தார்.
ஃப்ளெட்சரின் செயல்கள் பற்றித் தமக்குத் தெரியாது என்று விசாரணையின்போது மறுத்தார் வில்சன். ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் தேவாலய சிறுவரான பீட்டர் க்ரெய்க், குற்றம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இது பற்றி தாம் பிலிப் வில்சனிடம் தெரிவித்ததாக விசாரணையில் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்