You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாதம் விவாதம்: ''புல்லட் ரயிலுக்கு பதில் இருக்கும் ரயில்களை மேம்படுத்தினால் போதும்''
புல்லட் ரயில் வசதி படைத்தோருக்கு மட்டுமே பயன்படும். நவீனமான, சுத்தமான, பாதுகாப்பான, வேகமான ரயில் சேவையே இந்தியாவுக்குத் தேவை என்கிறார் மெட்ரோ ரயில் அமைப்பை உருவாக்கிய பொறியாளர் ஸ்ரீதரன்.
இந்தியாவுக்குத் தேவை புல்லட் ரயிலா? இருக்கும் ரயில் அமைப்பை நவீனப்படுத்துவதா? ஏன்?என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துக்ள் இங்கே
``வசதிகளும் வாய்ப்புகளும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இருக்கும் ரயில் சேவையில் முதலில் இந்தியா தன்னிறைவை எட்ட வேண்டும் அதற்குப் பிறகு புல்லட் ரயில் திட்டங்களை கொண்டு வரலாம்'' என்கிறார் நெல்லை டி முத்துச்செல்வன் என்னும் முகநூல் நேயர்.
''ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், வேகத்தைக் கூட்டுதல், நேரத்திற்கு ரயிலை இயக்குதல், விபத்துகளை அரிதாக்குதல், தரமான உணவு, சுகாதாரத்தை மேன்மை படுத்துதல், கணினி மையமாகுதல், ஆளில்லா பாதை கடப்புகளை ஒழித்தல், ரயில் நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் போன்ற எண்ணற்ற பணிகளை துரிதப்படுத்தினாலே போதும் உலக நாடுகளாலும், மக்களாலும் இந்திய ரயில்வே துறை போற்றப்படும்'' என்கிறார் சக்தி சரவணன் என்னும் முகநூல் நேயர்.
''எல்லா தேவைகளையும் நிறைவேற்றிய பிறகுதான் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது முடியாத காரியம். ஆனால் அந்த திட்டம் தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது. முதலில் அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யப் படவேண்டும். அது மிக முக்கியம்'' என்கிறார் சுப்பு லஷ்மி என்னும் முகநூல் நேயர்.
''மெட்ரோ ரயிலின் கட்டணம் அதிகமாக இருப்பதால் அதை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியவில்லை. எனவே மெட்ரோ ரயில் கொண்டுவந்ததன் நோக்கமே தோல்வி அடைந்தது. புல்லட் ரயிலும் அதுபோலதான் ஆகும்''என்கிறார் அபி ஜோசப் என்னும் நேயர்
''இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் சாதாரண ரயிலில் பயணிப்பவர்கள். சென்னையில் மின்சார ரயிலில் பயணிப்பவர்கள்தான் அதிகம். அரசு இதை மனதில் கொள்ள வேண்டும்'' என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன் என்னும் நேயர்
''பயன்பாட்டில் இருக்கும் இரயில்களே நேரத்திற்கு வருவது இல்லை புல்லட் ரயிலால் மட்டும் என்ன மாற்றத்தை விளைவிக்க முடியும்'' என்று கேள்வி எழுப்புகிறார் தீர்தேஸ்வரன் என்னும் டிவிட்டர் நேயர்
''இருக்கும் ரயில்வேயை மேம்படுத்தினால் போதுமானது.. கமிஷனுக்காகவே அதனை செய்யாமல் புல்லட் ரயில் என ஏமாற்றுகின்றனர்''என்று ஆதங்கப்படுகிறார் அன்புசெல்வன் என்னும் நேயர்.
''வளர்ச்சி தேவை , இருப்பினும் அது ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சியாக இருக்கவேண்டும் , பழைய நிலைமை உயர்த்தி புது நிலைமை அடைய வேண்டும் ''என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார் ஸ்போக்ஸ்மென் என்ற பெயர் கொண்ட டிவிட்டர் நேயர்.
''இந்த அரசு பணக்காரர்களுக்கான-கார்ப்பரேட்டுகளுக்கான அரசாகவே இருக்கிறது. யாவருக்குமான அரசாக இல்லை'' என்கிறார் பூர்னசந்திரன் கேன்ஸ் என்னும் நேயர்.
''இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை படுகிற கதையாக இருக்கிறது'' என நையாண்டியாக தனது கருத்தை பதிவு செய்கிறார் சரவணபாவா என்னும் நேயர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்