You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பசுமை சாலை திட்டம்: ''விவசாயிகளை விவசாய கூலிகளாக மாற்றுகின்றனர்'' #GroundReport
சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் அளவை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி ஒருவர், அதிகாரிகளே விஷம் கொடுத்து தங்களை குடும்பத்துடன் கொலை செய்யும்படி கேட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் இருந்து நில அளவை செய்து எல்லைக்கல் நடும் பணி தற்போது நடந்து வருகிறது.
அந்தவகையில், சேலத்தில் இருந்து அரூர் செல்லும் வழியில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் பசுமைவழிச் சாலை அமைக்க நிலம் அளவை செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. வருவாய் துறை அதிகாரிகள் காவல் துறையினருடன் இணைந்து நிலங்களை அளந்து எல்லை கற்கள் பதித்து வருகின்றனர்.
இதற்கு நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.ஏற்கெனவே அடிமலைபுதூர் பகுதியில் நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த உண்ணாமலை என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று காலை ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நில அளவை பணி தொடங்கியது. இங்கு நிலங்களை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது அங்கிருந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு குறித்து விவசாயிகளிடம் போதிய விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றும்,விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் முறையாகப் பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
அப்போது அங்கு வந்த இயற்கை பாதுகாப்பு குழுவின் நிர்வாகியும், இதழியல் படிக்கும் கல்லூரி மாணவியுமான வளர்மதி,பொதுமக்களின் நிலங்களை கைகயகப்படுத்தக் கூடாது என்று முழக்கமிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து களைந்துசெல்லுமாறு கூறினர். தொடர்ந்து வளர்மதி எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அவரை குண்டுகட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர். அதன்பிறகு அதிகாரிகள் நிலம் அளக்கும் பணியை தொடங்கினர்.
அங்கிருந்து மாலை, சீரிக்காடு பகுதியில் நிலம் அளவீடு செய்ய சென்ற இடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்ற விவசாயி தனது பேரன்களுடன் வந்து வாக்குவாதம் செய்தார்.
தனக்கு சொந்தமான 40 சென்ட் நிலம் முழுவதும் பறிபோவதாக வேதனை தெரிவித்த வடிவேல், அதிகாரிகள் தனக்கும், தனது குடும்பத்தினர் அனைவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு நிலத்தை கையகப்படுத்திக்கொள்ளுமாறு கண்ணீர்மல்க மன்றாடினார். அவரை போலீசார் சமாதானப்படுத்தினர். இருந்தாலும்,நிலம் கையகப்படுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிபோய்விடும் என்றார்.
பின்னர், குப்பனூர் காட்டுவலவு பகுதியில் நாராயணன் என்பவரின் நிலத்தை கையகப்படுத்த சென்றத்தில் நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தனது குடும்பத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் முழுவதுமாக கையகப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்த அவர், ,அதிகாரிகள் விவசாயிகளிடம் நிலத்தை அடித்து பறிப்பது போன்று நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.
விவசாயியாக இருந்த தன்னை விவசாய கூலியாக அரசு மாற்றிவிட்டதாகவும், வருமானத்திற்கு பிச்சை எடுக்க வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேநிலை நீடிக்கும்போது தாங்கள் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறுவழி இல்லை என்று அவர் கவலை தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்