You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தோல்வி: திருச்சியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் திருச்சி சமயபுரம் அருகே சுபஸ்ரீ என்ற மாணவி நேற்று (புதன்கிழமை)தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.
ஏற்கனவே, செஞ்சியை சேர்ந்த மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் திருச்சி கண்டோன்மெண்ட் கிளை அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராகவும், அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். இவருடைய மகளான சுபஸ்ரீ (18), இந்த வருடம் 12-ஆம் வகுப்பில் 907 மதிப்பெண்கள் எடுத்து திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வும் எழுதினார்.
நீட் தேர்வு முடிவில் 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றார். இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்த சுபஸ்ரீ, நேற்று (புதன்கிழமை) இரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குமாட்டிக் கொண்டார்.
இதையறிந்த பெற்றோர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுபஸ்ரீயின் தந்தை கண்ணண், "நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும்" என்றார். இனிமேல் நீட் தேர்வினால் ஒரு மாணவ மாணவியைக் கூட நாம் இழக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், தற்கொலை ஒரு தீர்வாகாது'' என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்