வாதம் விவாதம்: "அதிமுகவில் இணைந்தால் பெரிய பதவியில் அமர்வார் டி.டி.வி. தினகரன்"

"திமுக எங்களது எதிரணி; எதிரியல்ல" என்று ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்ததாக செய்தி வெளியாகிறது. தினகரனின் இந்த பேச்சு அரசியல் நாகரீகத்தை காட்டுகிறதா? அல்லது ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டுள்ளதா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெல்லை டி முத்துசெல்வம், "தினகரனின் அரசியல் நாகரீகத்தைதான் இது காட்டுகிறது. ஒரு சிறந்த ஆளுமை மிக்க தலைவராக உள்ளார் தினகரன். அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும். அவ்வாறு இணைந்தால் நிச்சயம் கட்சியில் பெரிய பதவியில் அமர்வார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"அரசியல் நாகரிகம் எல்லாம் தினகரனிடம் இல்லை, இது சுயநலம், மற்றும் வரும் தேர்தலுக்கு அச்சாரம்" என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

"ஆளுமை கோலோச்சிய காலம் போய் சரிசமமாக பார்க்கும் அரசியல் வரவேற்கத்தக்கது..கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் அரசியல் நாகரிகம் மக்களுக்கு நன்மை தரும்" என்று கூறுகிறார் வசந்த் ராஜ்.

"மக்கள் அளிக்கும் அங்கீகாரத்தைப் பொருத்து ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளாக செயல்படுவோர், பெரும்பாலும் மக்கள் நலம் சாராது அவரவர் சுயநலம் சார்ந்து செயல்படுவதாலேயே, இது போன்று எழும் அரசியல் நாகரீகம் பொருந்திய கருத்துக்களும் நம்பகத் தன்மையற்று போகிறது என்று குறிப்பிடுகிறார் சக்தி சரவணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: