பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள்

தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு.

சுனில் சேத்ரிக்கு சமூக வலைதளங்களில் குவிந்த வாழ்த்துக்கள்

மும்பையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படும் கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கோப்பையின் முதல் சீசனில் கென்ய அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றில் இரண்டு கோல்களை அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்ட அணித் தலைவர் சுனில் சேத்ரிக்கு பல்வேறு தரப்பட்டோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பலரையும் பாதிக்கும் பருவநிலை மாற்றமானது உலகளவில் பெண்களை மிக மோசமான அளவில் பாதிக்கிறது. ஆனால், பருவநிலை மாற்றம் குறித்தான உயர்மட்ட உரையாடல்களில், பெண்களின் குரல் மிக அரிதாகவே கேட்கிறது என்ற குற்றச்சாட்டு நெடு நாட்களாக உள்ளது.

தமிழகத்திற்கு ஏமாற்றமளிக்கும் நீட் தேர்வு முடிவுகள்

மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முடிவுகளை சிபிஎஸ்இ திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர். அதில் 45, 336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டிற்கான நீட் தேர்வின் தேர்ச்சி விகிதம் 39.55ஆக உள்ளது.

சீனாவுக்கு உளவு பார்த்தாரா அமெரிக்க உளவுத்துறை அதிகாரி

சீனாவுக்கு உளவு பார்ப்பதற்கு முயற்சித்ததாக கூறப்படும் முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி சியாட்டிலில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று சீனாவிற்கு செல்வதற்காக சியாட்டில் விமான நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த 58 வயதாகும் ரான் ராக்வெல் ஹேன்சன் என்ற அந்த நபரை எஃப்பிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர்.

ஃபிரெஞ் ஓபன்: காயம் காரணமாக செரீனா விலகல்

பாரீஸில் நடைபெற்றுவரும் ஃபிரெஞ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடரில், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு எதிரான தனது 4-வது சுற்று போட்டிக்கு முன்னர் காயம் காரணமாக போட்டி தொடரை விட்டு செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

23 கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ள செரீனா, தனது முதல் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள் டென்னிஸ் களத்துக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.