You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''ஸ்டெர்லைட்டுக்கு போடப்பட்டது விலையுயர்ந்த பூட்டு; விலை - 13 உயிர்கள்''
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை மக்கள் நலன் சார்ந்த முடிவா? மக்களின் கொந்தளிப்பை திசைதிருப்பும் முயற்சியா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்
''தற்போதைக்கு இந்த அரசாணை மக்களின் கொந்தளிப்பை திசைதிருப்பும் முயற்சியாக தான் பார்க்க இயலும்.நீதிமன்ற உத்தரவு எப்படி வந்தாலும் ஆலையை மூடுவதில் அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே இந்த அரசாணை பலன் அளிக்க கூடியது. இந்த அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்ய ஏதுவாக பிறப்பித்து உள்ளனர். மக்கள் நலன் சார்ந்த முடிவாக இருப்பதால் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகள்,நிறுவனங்களை இனி தமிழகத்தில் அனுமதிப்பதில்லை என கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.'' என தெரிவித்துள்ளார் நெல்லை முத்துசெல்வம் எனும் நேயர்.
சரோஜா பாலசுப்பிரமணியம் எனும் நேயர் ''என்னது மக்கள் நலன் சார்ந்த முடிவா? ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம். ஒரு கல்லில் ஒன்பது மாங்காய்களை அடிக்கும் அரசியல்வாதிகளின் ஒவ்வொரு செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கவே செய்யும்'' என எழுதியுள்ளார்.
''எந்தவித சட்டநடைமுறையும் பின்பற்றாமல் ஆலையை மூடுவது என்பது சட்டத்தின் மூலம் திரும்பவும் ஆலையை இயக்க வழி வகுக்கும். அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றபட்டால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வாய்ப்பு மிகக் குறைவு இதை செய்ய அரசுக்கு பயம் ஏன்?'' என ட்விட்டரில் கேட்டுள்ளார் பாலன் சக்தி எனும் நேயர்.
''உச்ச நீதிமன்ற கோடைகால விடுமுறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற பணிகள் தொடங்கிய பிறகு ஆலை செயல்பட விதிக்கப்பட்ட தடையை வழக்கம் போல் உச்ச நீதிமன்றம் விலக்கி தீர்ப்பளிக்கும்'' என கலிமுல்லா என்ற நேயர் குறிப்பிட்டுள்ளார்.
''இதை மாதிரியான உத்தரவுகள் பல கொடுக்கபட்டாலும். அவர்கள் நீதி மன்றம் சென்று மாற்றியுள்ளார்கள். எனவே அவர்கள் இனி செயல்பட முடியாத உத்தரவாக இருக்க வேண்டும். இது அப்படியானதாக தெரியவில்லை. விடுமுறை விட்டது போல் தான் உள்ளது. சட்டமுறைகளை இன்னமும் கடுமையாக பயன்படுத்திருக்கலாம்'' என்கிறார் அருண்.
''கண்டிப்பாக திசை திருப்பும் முயற்சிதான். ஏனெனில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அவ்வளவு வலுவற்றதாக இருக்கிறது. நீதிமன்றத்தில் எளிதாக தடையானை பெறுவதற்காகவே தயாரிக்கப்பட்டது போலவே இருக்கிறது. தற்போதைக்கு நீதித்துறை இருக்கின்ற சூழ்நிலையில் மிக எளிதாக தடையானை பெற்று ஆலையை நடத்த முடியும். ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் உடனடியாக இல்லாமல் ஒரு 6 மாதம் கழித்து இது நடக்கலாம்'' என்கிறார் கண்ணதாசன் பழனிசாமி
கார்த்திக் கந்தசாமி எனும் நேயர் ''விவாகம் விருப்பம் போல நடக்கலாம்.விவாகரத்து நீதிமன்றத்தில் போய் தான் முடிவுக்கு வரும்'' என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்