You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துப்பாக்கிச்சூட்டிற்கு துணை வட்டாட்சியர் அனுமதி வழங்க முடியுமா?
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டிற்கு தனி துணை வட்டாட்சியர் (தேர்தல்) அனுமதி கொடுத்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி அப்பகுதி மக்கள் நூறு நாட்களுக்கும் மேலாக போராடி வந்தனர்.
போராட்டத்தின் நூறாவது நாளின் போது பெரும்திரளான மக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.
தூத்துக்குடியில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால், மக்கள் பேரணியாக வருவது தடை செய்யப்பட்டது. போலீஸார் ஊர்வலமாக சென்ற மக்களை தடுத்தனர். இந்த ஊர்வலத்தில் மக்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது.
போலீஸார் போராட்டக்காரர்களை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டை அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டித்தது மட்டுமல்லாமல், இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தனர்.
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மூலம் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தனி துணை வட்டாட்சியர்தான் அனுமதி கொடுத்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
'நான் உத்தரவிட்டேன்'
மே 22, 2018 ஆம் தேதி, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் அரிகரனிடம் மாலை 5 மணி அளவில், தனி துணை வட்டாசியர் (தேர்தல்) சேகர் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக புகார் அளித்தார் என்கிறது அந்த முதல் தகவல் அறிக்கை.
"ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பல் அங்கிருந்த அரசு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியும் தீ வைத்து கொழுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடாத கலெக்டர் ஆபிசை கொழுத்த வேண்டும் என்று கோசமிட்டு கொண்டே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும் மேற்படி கலவர கும்பலில் இருந்தவர்கள் பெட்ரோல் குண்டுகள் கற்களை வீசியும் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்தை நோக்கி சென்று உள்ளே நுழைய முற்பட்டனர். இதை கண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொது மக்களும் ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் தங்களின் உயிருக்கு பயந்து அஞ்சி நடுங்கி அலுவலகத்திற்குள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் மேற்படி கலவர கும்பலிடம் நீங்கள் கூடியிருப்பது சட்ட விரோதமான கூட்டம் கலைந்து செல்லுங்கள் இல்லாவிட்டால், கண்ணீர் புகை கொண்டு கலைக்க நேரிடும் என்று எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்லாததால் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த நான் (தனி துணை வட்டாட்சியர் சேகர்) உத்தரவிட்டேன்." என்று அந்த அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் உயிரையும் உடமைகளையும் காப்பாற்றவும் பொது சொத்துகளை காப்பாற்றவும் வேண்டி கலவர கும்பலை நோக்கி நீங்கள் சட்டவிரோதமாக கூடி வன்முறை செயல்களில் ஈடுப்பட்டு வருவதால், உடனடியாக கலைந்து செல்ல வேண்டும். கலைந்து செல்லாவிடில் துப்பாக்கி பிரயோகம்செய்ய நேரிடும் என்று எச்சரித்தனர். அதனையும் அலட்சியம் செய்த வன்முறை கும்பல் மீண்டும் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டு அரசு ஊழியர்களுக்கும் மற்றும் பொது மக்களின் உயிருக்கும் பொது சொத்திற்கும் சேதம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு காவல் துறையினரை தாக்கினர்." என்று வவரிக்கிறது.
"வன்முறை கும்பல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு தொடர்ந்து உயிர் சேதமும் பொருட்சேதமும் விளைவிக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டதாலும் இனியும் பொறுமையாக இருந்தால் கலவரகாரர்களால் ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கும் அரசு சொத்துகளுக்கும் பெருத்த சேதம் ஏற்படும் என்பதால் கலவரகாரர்களை துப்பாக்கி பிரயோகித்து கலைக்க உத்தரவிட்டேன் (தனி துணை வட்டாட்சியர் சேகர்)" என்கிறது அந்த முதல் தகவல் அறிக்கை.
இதன் மூலம் தனி வட்டாட்சியர்தான் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டுள்ளார் என்பது தெளிவானாலும், தனி வட்டாட்சியருக்கு துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிடும் அளவிற்கு அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.
துணை வட்டாட்சியர் அனுமதி வழங்க முடியுமா?
இது தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்அதிகாரி தேவசகாயத்திடம் பேசிய போது, "மெஜிஸ்ட்ரேட் அதிகாரம் உள்ளவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி வழங்க முடியும். ஆட்சியர், மாவட்ட நிர்வாக அலுவலர், கோட்டாட்சியர் மற்றும் வட்டாசியருக்கு இந்த அதிகாரம் உள்ளது." என்றார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, "மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர் மற்றும் வட்டாசியர் ஆகியோர் நிறைவேற்று நீதிவான்கள் (executive magistrate). இவர்களுக்கு இந்த அதிகாரம் உள்ளது. ஆனால், இதுவரை துணை ஆட்சியர் எல்லாம் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி வழங்கியதாக நான் கேள்விபட்டது இல்லை" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்