You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ஸ்டெர்லைட் போராட்டத்தில் தவிர்க்க முடியாததால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" - தமிழக அரசு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது 9 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், தவிர்க்க முடியாமல்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தையடுத்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடியில் உள்ள மீனவர் பகுதியான திரேஸ்புரத்திலும் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் இன்று நடந்த சம்பவங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மூத்த அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை தற்போது இயங்குவதற்கு அனுமதியளிக்கப்படவில்லையென்றும் அதனை எதிர்த்து அந்த ஆலை மேல் முறையீட்டு ஆணையத்தில் முறையீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இன்று, அதாவது மே 22ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவுசெய்து சுமார் 20,000 பேர் ஊர்வலமாகச் சென்றபோது , அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து வாகனங்களைத் தீயிட்டதோடு அலுவலகத்தையும் தாக்கியதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த வன்முறையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே, தவிர்க்க முடியாமல் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூடுதல் காவல்துறையினர் அந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரை அரசு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்குமென்றும் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "போராட்டம் நடத்துவது ஜனநாயகபூர்வமானது என்றாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு உள்ளே செல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாமல் நடத்தப்பட்டது. அது அரசின் அணைப்படி நடந்ததா என்பதை இப்போது சொல்ல முடியாது" என்று கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் மேல் முறையீட்டு ஆணையத்தில் வந்தபோது, தமிழக அரசின் வழக்கறிஞர் அந்த ஆலைக்கு எதிராகக் கடுமையாக வாதாடியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொலைக்காட்சிகளுக்கு மிரட்டலா?
ஸ்டெர்லைட் போராட்டம் இன்று காலையில் துவங்கியதிலிருந்து தமிழக தொலைக்காட்சிகள் தொடர்ச்சியாக இது தொடர்பான காட்சிகளை நேரலையில் ஒளிபரப்புச் செய்துவந்தன. ஆனால், போராட்டம் வன்முறையாக உருவெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்புகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் நிறுத்தப்பட்டன.
நேரலை ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால், அரசு கேபிளில் சேனல்கள் நீக்கப்பட்டுவிடும் என அரசுத் தரப்பிலிருந்து மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்திருக்கிறார். "தொலைக்காட்சிகளைத் தடைசெய்யும் உத்தரவு அரசுத் தரப்பிலிருந்து பிறப்பிக்கப்படவில்லை. இது ஹேஸ்யத்தின் அடிப்படையிலானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவ்வாறு செய்ய அரசுக்கு தேவையில்லை" என்று கூறினார்.
இருந்தபோதும், மதியத்திற்குப் பிறகு தமிழ் தொலைக்காட்சிகளில் தூத்துக்குடி கலவரம் குறித்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகவில்லை.
10 லட்ச ரூபாய் இழப்பீடு
இதற்கிடையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்ச ரூபாய் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு 3 லட்ச ரூபாயும் லேசாக காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, நீதியரசர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படுமென்றும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கேட்டறிவதற்காக இன்று மாலையில் தமிழகத் தலைமைச் செயலரைச் சந்தித்த மு.க. ஸ்டாலின், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராதது என்று குறிப்பிட்டிருக்கிறார். கர்நாடக முதல்வரின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்க முடிவுசெய்திருந்ததாகவும் ஆனால், இந்த சம்பவத்தையடுத்து அந்த விழாவில் பங்கேற்காமல் தூத்துக்குடிக்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்