குமாரசாமியை தேடி அதிர்ஷ்டம் வந்த வழியைப் பாருங்கள்!

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் இந்த சூழ்நிலையில், 103 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரிய பா.ஜ.க நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகியது. 37 உறுப்பினர்களை கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத).-வின் எச்.டி குமாரசாமி முதலமைச்சர் அரியணையில் ஏறப்போவதாக அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

தோளில் பச்சைத் துண்டுடன் முதலமைச்சர் கனவில் பதவியேற்ற எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கொடுத்திருந்த15 நாட்கள் அவகாசத்தை குறைத்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, 19ஆம் தேதி மாலை நான்கு மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பச்சை சிக்னலில் இருந்த எடியூரப்பாவுக்கு நிலைமை சிகப்பு சிக்னல் காட்ட, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு செல்லவில்லை என்று கூறி பதவி விலகிவிட்டார்.

தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை, பா.ஜ.கவுக்கு ஒரு கண்ணாவது போகட்டும் என்று நினைத்த காங்கிரஸ், 38 உறுப்பினர்கள் கொண்ட குமாரசாமி பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தானாகவே முன்வந்து அறிவித்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 78 உறுப்பினர்கள் இருந்தாலும், அரசியல் சதுரங்க விளையாட்டில் எதிர்பாராத விதமாக கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார் எச்.டி குமாரசாமி.

முதலமைச்சர் பதவிக்கும் குமாரசாமி இடையே பெரிய இடைவெளி இருந்தது. எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவில்லை என்று பின்வாங்கியதால் குமாசாமியின் தலைவிதியே மாறிவிட்டது.

குமாரசாமி முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தாலும் அந்த நாற்காலியை தாங்கிப் பிடிக்கும் நான்கு கால்களாக இருக்கப்போவது காங்கிரஸ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரிந்ததே.

சரி, ம.ஜ.த மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் அடிப்படையை எப்படி புரிந்து கொள்வது?

2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பேசிய குமாரசாமி, "2006ஆம் ஆண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க நான் எடுத்த முடிவினால், எனது தந்தையின் அரசியல் வாழ்வில் களங்கத்தை ஏற்படுத்திவிட்டேன். அந்த தவறை சரிசெய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் காங்கிரஸ் உடன் இருப்பேன்" என்று தெரிவித்தார்.

ஆனால் குமாரசாமிக்கும் காங்கிரசிற்கும் இடையிலான உறவு எப்போதுமே சுமூகமாக இருந்ததா? பா.ஜ.கவுடான அவரது உறவு கசந்து போக காரணம் என்ன? இந்த கேள்விக்கான பதிலை இந்திய அரசியலின் வரலாற்றுச் சுவடுகளை புரட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

பா.ஜ.கவுடன் நட்பு

2004 சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு, மஜத மற்றும் காங்கிரஸ் இணைந்து கர்நாடகாவில் ஆட்சியமைத்தன. ஆனால் இரண்டு ஆண்டுக்குள்ளேயே குமாரசாமி தனது விளையாட்டை தொடங்கினார்.

முதலமைச்சராக பதவியேற்கும் பேராவலில், தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவே கெளடவின் பேச்சைக் கேட்காமல், கட்சியில் இருந்து வெளியேறினார் குமாரசாமி.

ஆட்சியில் பாதி காலத்திற்கு குமாரசாமி முதலமைச்சர், மீதி பாதி காலத்திற்கு பா.ஜ.கவை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதலமைச்சரானார் குமாரசாமி.

ஆனால் 2007 அக்டோபரில் தனது வாக்குறுதியை திரும்பப் பெற்ற அவர், பா.ஜ.க உறுப்பினர் முதலமைச்சராக முட்டுக்கட்டை போடும் விதமாக ஆதரவை விலக்கிக்கொண்டார்.

அதையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க ஆட்சி அமைத்தது.

நட்பாக மாறிய பகைமை

குமாரசாமியின் தந்தை, முன்னாள் பிரதமர் எச்.டி தேவே கௌட என்ன செய்தார்? அவர் 1999ஆம் ஆண்டில் ஜனதா கட்சியில் இருந்து விலகி, மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியை நிறுவினார். 1977இல், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவானதே ஜனதா கட்சி என்பதும், அந்த ஜனதா கட்சியில் இருந்தவர் தேவே கெளட என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் பகையாளியாக கருதிய காங்கிரசுடன் பங்காளியாக நட்பு பாராட்டினார் தேவே கெளட. 1996ஆம் ஆண்டில் தேவே கெளட பத்து மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தபோது, அவருக்கு ஆதரவளித்தது காங்கிரஸ்.

சித்தராமையா

சித்தரமையாவின் நிலைமையோ பாவம். தனக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் பணியாற்றிய சித்தராமையாவுக்கு கட்சியின் தலைமை பொறுப்பை ஒப்படைக்காமல் தனது மகன் குமாரசாமியை கட்சியின் தலைவராக்கினார் தேவே கெளட.

கட்சிக்குள் நிராகரிக்கப்பட்ட சித்தராமையா, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளை கொண்டு ஒரு கட்சியை உருவாக்கினார், அவருக்கு காங்கிரசின் ஆதரவு கிடைக்க மாநில முதலமைச்சரானார்.

ஆனால் சித்தராமையாவின் பகைமை தேவே கெளடவுடன் முடியவில்லை. கர்நாடக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த தேவே கெளட மீதுகொண்ட வெறுப்பினால், அந்த சமூகத்தை சேர்ந்த அதிகாரிகளிடமும் சித்தராமையா பாகுபாடு காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அரசியல் அரிச்சுவடிகளை தனது தந்தையிடம் கற்றுக்கொண்ட குமாரசாமி, பல தந்திரங்களை பயன்படுத்தினார். தனது தந்தை தேவே கெளடவின் மீதான சித்தராமையாவின் தாக்குதல்களை ஒக்கலிகா சமூகத்தின் மீதான தாக்குதலாக சித்தரித்தார் குமாரசாமி.

குமாரசாமியின் அரசியல் பயணம்

1996ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த குமாரசாமி, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 11வது நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்கு சென்றார்.

இதுவரை, ஒன்பது முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள குமாரசாமி, ஆறு முறை வெற்றி பெற்றிருக்கிறார். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில், சென்னபட்டினா, ராம்நகர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு, இரு இடங்களிலும் வெற்றிபெற்றார்.

அரசியல்வாதியாக அவதாரம் எடுப்பதற்கு முன் குமாரசுவாமி திரைப்படம் தயாரிப்பாளராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: