ஸ்வீடனில் இருந்து சூரத் வரை : தாயை தேடி ஒரு பயணம்

    • எழுதியவர், ஷைலி பட்
    • பதவி, பிபிசி

ஸ்வீடன் நாட்டில் தன் உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக வளர்ந்தவர் கிரண் கஸ்டஃப்ஸன். கிரணுடன் நெருக்கமாக இருந்ததைவிட, அவரது தங்கை எலன் மற்றும் தம்பி பியோர்ன் இருவரும் நல்ல நெருக்கத்துடன் இருந்தனர்.

கிரணின் பெற்றோர்கள் அவருக்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி தந்திருந்தாலும், தன் வாழ்வில் ஏதோ குறைவது போலவே உணர்ந்தார் கிரண்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள அனாதை விடுதியில் இருந்து அவர் தத்தெடுக்கப்பட்டதாக கிரணின் பெற்றோர்கள் அவரிடம் முன்னதாக கூறியிருந்தனர்.

"நான் ஸ்வீடனுக்கு வந்தபோது எனக்கு 3 வயது. இந்தியா குறித்தோ, அங்கு நான் செலவழித்த நாட்கள் குறித்தோ எனக்கு எந்த நினைவுகளும் இல்லை. 1988, மார்ச் 14ஆம் தேதி. நீதிமன்றத்தில் என் தத்தெடுப்பு வழக்கை கையாண்ட வழக்கறிஞரும், அவரது மனைவியும் என்னை ஸ்வீடனுக்கு அழைத்து வந்தனர். ஸ்வீடன் விமான நிலையத்தில்தான் நான் என் வளர்ப்பு பெற்றோரைமுதல்முறை சந்தித்தேன்" என்று கூறுகிறார் பிபிசியிடம் பேசிய கிரண்.

சாதாரண குழந்தை பருவம். தான் ஒரு வெளிநபர் போல இதுவரை உணர்ந்ததில்லை என்று அவர் தெரிவித்தார். கிரணின் தாய் மரியா, ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். அவரது தந்தை செல் ஒக்யா கஸ்டஃப்ஸன் தொழிலதிபர் மற்றும் புகைப்பட கலைஞர் ஆவார்.

"என் பெற்றோர்கள் என்னை வித்தியாசமாக உணர வைத்ததில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அதை நினைத்து பெருமைப்பட வேண்டும் என்று சொல்லி வளர்த்தார்கள்."

ஆனால் வளர்ப்பு தாயிடம் ஒரு ஆழமான இணைப்பை கிரணால் உணர முடியவில்லை.

"என் வாழ்வில் ஏதோ ஒன்று குறைகிறது என்றே எண்ணிணேன். கடந்த இரண்டு வருடங்களாக அந்த உணர்வு அதிகமானது."

தேடல்

தன் உண்மையான குடும்பம் எது என்ற பதில் இல்லாத கேள்விகளால் அமைதியற்று காணப்பட்டார் கிரண்.

தன் கேள்விகளுக்கு பதில் தேடி, தன் வளர்ப்பு பெற்றோருடன் 2000ஆம் ஆண்டு சூரத் வந்தார் கிரண். அவரது ஸ்வீடன் குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளித்தனர்.

கிரண் தத்தெடுக்கப்பட்ட அனாதை விடுதிக்கு அவர்கள் சென்றனர். அவரை பற்றி புரிந்து கொள்ளவே, தன் குடும்பம் சூரத்துக்கு வந்ததாக கிரண் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு மீண்டும் சூரத் சென்றார் கிரண். இந்த முறை அவரது சமூகவியல் மற்றும் மனித உரிமைகள் குறித்த படிப்பின் ஒரு பகுதியாக இந்த பயணத்தை மேற்கொண்டார்.

அவர் தத்தெடுக்கப்பட்ட விடுதி, அவருக்கு போதுமாக தகவல்களை தரவில்லை என்பதால், இந்த பயணங்கள் அவர் மனதில் மேலும் பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தது.

மீண்டும் ஸ்வீடன் திரும்பிய கிரண், அவர் தத்தெடுக்கப்பட்டது குறித்தும், அந்த விடுதியின் தகவல்கள் குறித்தும் அதிக ஆராய்ச்சி செய்தார். 2010ஆம் ஆண்டு, அவரது உண்மையான தாயை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் இதனை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று அவருக்கு தெரியவில்லை.

வளர்ப்புப் பெற்றோர் கிரணின் இந்த தேடலுக்கு சம்மதம் தெரிவித்தனர். கிரணை நினைத்து பெருமைப்படுவதாகவும், அவரை மேலும் விரும்புவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

சிறிது காலம் கழித்து, இது குறித்து எதுவும் செய்ய முடியாமல் போனாலும், உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும் கிரணை விட்டு அகலவில்லை.

படிப்பு முடிந்த பிறகு, ஸ்வீடனில்உள்ள நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினர் கிரண்.

2016ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு அருண் தோஹ்லே என்பவரின் விரிவுரையில் கலந்து கொண்டார் கிரண்.

அருண் தோஹ்லே, நெதர்லாந்தை அடிப்படையாக கொண்ட குழந்தை கடத்தலுக்கு எதிரான அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அவர் இந்தியாவில் இருந்தபோது, ஜெர்மன் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டவர்.

சட்டவிரோத குழந்தை கடத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அருண், இந்தியாவில் இருந்த தன் உண்மையான தாயை கண்டுபிடிக்க நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியிருந்தார்.

அதனை கேட்ட கிரண், எப்படியாவது தன் தாயை கண்டுபிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அருணின் ஆலோசனைபடி, பூனேவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய அஞ்சலி பவாரை தொடர்பு கொண்டார் கிரண்.

இந்தியாவில் கிரணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அருண் மற்றும் கிரணிடம் இருந்து தகவல்களை பெற்று, சூரத்தில் உள்ள அனாதை விடுதியை தொடர்பு கொண்டதாக பிபிசியிடம் பேசிய அஞ்சலி தெரிவித்தார். ஆனால், அவரது முயற்சிகள் ஆரம்பத்தில் வீணாகிப் போனது.

மத்திய தத்தெடுப்பு அணையம் குறித்து அவர்களிடம் பேசிய பிறகே, அஞ்சலியால் தகவல்களை பெற முடிந்தது.

"அவர்கள் அளித்த ஆவணங்கள்படி, கிரணுக்கு 1 வயது 11 மாதங்கள் ஆன போது அவரது தாய் அவரை அனாதை விடுதியில் விட்டுச் சென்றுள்ளார். ஆனால் கிரணை, அவரது தாய் அடிக்கடி வந்து சந்தித்துள்ளார். கிரண் தத்தெடுக்கப்பட்ட விஷயமும் அவரது தாய்க்கு தெரியும். அதனால்தான், தான் வேலை செய்யும் இடத்தின் முகவரியை விடுதியில் வழங்கியுள்ளார் அவரது தாய்."

சூரத்தில் வீட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த சிந்து கோஸாமிதான் கிரணின் தாய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனாதை விடுதி அளித்த முகவரியில் சென்று அஞ்சலி பார்த்த போது, அங்கு சிந்து இல்லை.

அந்த ஆண்டே, தன் நண்பருடன் இந்தியா வந்தார் கிரண். அவரது தாய், வேலை செய்த இடத்தில் இருந்தவர்களை சந்தித்து பேசினார்.

உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த அழுத்தத்தினால் சில தகவல்கள் கிடைத்தது. ஆனால் சிந்துவை கண்டுபிடிக்க அது போதுமானதாக இல்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதோ, உயிருடன்தான் உள்ளாரா என்பதையோ யாராலும் கூற முடியவில்லை.

இந்நிலையில், அனாதை விடுதியில் உள்ள பதிவுகளில் இருந்த பிறப்பு சான்றிதழ்களை அஞ்சலியால் பெற முடிந்தது. அப்போதுதான் கிரண் ஓர் இரட்டை பிறவி என்றும், அவருக்கு ஒரு இரட்டை சகோதரர் இருப்பதும் தெரிய வந்தது.

"என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறுகிறார் கிரண்.

பிரிவு

சமூக ஆர்வலர் மூலமாக கிரணின் சகோதரரை கண்டுபிடிக்க முடிந்தது.

சூரத்தில் வசித்த ஒரு குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டு, தொழிலதிபராக இருந்தார் கிரணின் சகோதரர்.

ஆனால், அவரை சந்திப்பது எளிதானதாக இல்லை. கிரணின் இரட்டை சகோதரரை தத்தெடுத்த குடும்பம், அவரைப் பற்றிய உண்மைகளை சொல்லவில்லை. அதாவது, அக்குடும்பத்தால் அவர் தத்தெடுக்கப்பட்டவர் என்பது சகோதரருக்கு தெரியாது.

எப்படியோ வளர்ப்புப் பெற்றோரை ஒப்புக் கொள்ள வைத்து, கிரணின் சகோதரருக்கு உண்மை கூறப்பட்டது.

32 வயதை கடந்து, தன் சகோதரரை தான் சந்தித்த நாளை தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார் கிரண்.

அவர்களின் வீட்டுக் கதவை தட்டிய போது, கிரணின் சகோதரர்தான் கதவை திறந்துள்ளார்.

இருவரும் ஏதும் பேசிக் கொள்ளாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

வீட்டில் அவர் கிரணுக்கு ஐஸ் க்ரீம் கொடுத்துள்ளார். "எனக்கு ஒரு கை கடிகாரத்தை அவர் பரிசளித்தார். அன்பாக நடந்து கொண்டார். அவர் கண்கள், என் கண்கள் போலவே இருந்தது. ஆனால் அதில் சோகம் தெரிந்தது"

அஞ்சலியின் ஒரு கேள்விக்கு பதிலளித்த கிரணின் சகோதரர், அவர் தனிமையாக உணர்வதாக கூறியுள்ளார்.

அடுத்த நாள் கிரண் தங்கியிருந்த விடுதியில் அவர்கள் சந்தித்த போது, கிரண் அழுதுவிட, அவர்களுக்கு பிரிவு கடினமாக இருந்தது.

"நாங்கள் எங்களை கண்டுபிடித்துக் கொண்டோம், ஆனால் எங்களிடம் பல கேள்விகள் உள்ளன. சோகம் இருக்கிறது. என் சகோதரர் மிகவும் அன்பானவர். அவரை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது" என்று கூறுகிறார் கிரண்.

கிரண் தனது சகோதரரை சந்தித்து விட்டார். ஆனால், அவரது தாயை தேடும் படலம் இன்னும் முடியவில்லை.

தாயை தேடிச் சென்ற போது, அவருடன் வேலை செய்தவர்களிடம் இருந்து வாங்கிய புகைப்படத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார் கிரண்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: