You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்தேகத்தின் பெயரால் அடித்துக் கொலை: வதந்திகளால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்
திருவண்ணாமலையில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில், கடந்த 9ஆம் தேதி சென்னையை சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி மக்களால் அடித்து கொல்லப்பட்டார்.
உண்மையில் அவர் தன் குடும்பத்துடன் தங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்குச் சென்றவர்.
திருவண்ணாமலையில் உள்ள அத்திமூர் என்ற கிராமத்தில் இருக்கும் அந்தக் கோயிலுக்கு வழிதெரியாமல் விசாரித்துள்ளனர் ருக்மணியின் குடும்பத்தினர். அப்போது, தங்களுடன் வந்த உறவினர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்பதால், அவர்கள் கொண்டுவந்திருந்த சில மிட்டாய்களை, கோயிலின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளிடம் வழங்கியுள்ளார் ருக்மணி.
இதைப்பார்த்த மக்கள், அவர்களை குழந்தைகள் கடத்தும் நபர்கள் என்று நினைத்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு கூடிய பெரிய கூட்டமும் அவர்களை தாக்க தொடங்கியுள்ளது.
அங்கு வந்த காவல்துறையினரால் அந்தத் தாக்குதலை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த தாக்குதலில் ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்திருந்த நான்கு உறவினர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, காவல்துறையினர் தொடர்ந்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் 60 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை கடத்த வந்ததாக வட மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவரை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டத்திலும் சில இடங்களிலும் குழந்தை கடத்துவதாக வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவேண்டும் என்றும், யாரும் சட்டத்தைக் கையில் எடுக்க கூடாது என்றும் காவல்துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வாட்சப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தவறாக வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாது குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல் தொடர்பாகவோ பிற விஷயங்கள் பற்றியோ வாட்சப் அல்லது பிற வழிகளில் வதந்தியைப் பரப்பினால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் எச்சரித்திருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் குழந்தைக் கடத்தல்காரர் என்று சந்தேகிக்கப்பட்டு ஒரு இளைஞரை பொதுமக்கள் அடித்து அவரது சடலத்தை அங்குள்ள ஒரு ஏரிப்பாலத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவமும் சமீபத்தில் நடந்துள்ளது.
அவர் பொது மக்களின் கேள்விகளுக்கு சரியான பதிலைத் தராததால்தான் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் அசோகன், "மனிதர்கள் உணர்ச்சிபூர்வமான குழுக்களின் அங்கமாக இருக்கும்போது அவர்களின் சிந்திக்கும் திறன் மட்டுப்பட்டு உணர்வுகள் மேலோங்கி விடுகிறது. அந்த உணர்வுகள் பிறரையும் தொற்றிக்கொள்கின்றன. அதனால், தனிமனித எண்ணம் மற்றும் உணர்வுகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும், " என்கிறார்.
அத்தகைய சூழ்நிலைகளில் 'கருத்தேற்றம்' நிகழும். அதாவது உணர்ச்சிமிக்க அந்தக் குழுவில் இருக்கும் ஒருவரின் கருத்து பிறர் மீதும் திணிக்கப்படும் என்கிறார் அவர்.
"கடந்த 30 ஆண்டுகளில் தொழில்நுட்பம் நம்மைப் புரட்டிப்போட்டதுடன் மட்டுமல்லாது, கறைபடுத்தியும் உள்ளது. சமூக வலைத்தளங்களும் நமக்கு அழகிய முக மூடிகளாக உள்ளன. நாம் எவ்வளவு வன்முறை எண்ணத்தை மனதில் உடையவராக இருந்தாலும், வெளியுலகுக்கு நல்லவராகக் காட்டிக்கொள்ள முடியும்," என்று கூறும் அசோகன், "முன்பு ஒரு வீட்டில் ஒரே அறையில் தொலைக்காட்சி, மின் விசிறி அனைத்தும் இருந்தன. இப்போது ஒவ்வொரு அறையிலும் இருப்பதால் ஒரே குடும்பத்திலேயே தனித்தனி மனிதர்களாக வாழ்கிறோம். அப்போது வெளிப்படுத்த முடியாத உணர்வுகள், குழுவாக இருக்கும்போது, அந்தக் குழு மனப்பான்மையால் வெளியே வருகின்றன," என்கிறார்.
"முறையான தகவல் பரிமாற்றம் என்றால் சொல்லப்படுபவருக்கும் புரிய வேண்டும். இத்தகைய செய்திகள் சொல்லப்படும் முன் அதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், சமயம் பார்த்துக்கொண்டு வெளியே வரக் காத்துக்கொண்டிருக்கும் வன்முறையை வெளிப்படுத்த விரும்பும் மிருகம் வெளியே வந்துவிடும்," என்கிறார் அசோகன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்