You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா?
இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.
மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்திலிருந்து மேற்குப் புறமாக, சுமார் 100மீ தொலைவில் சிதைந்த நிலையில் கட்டடப் பகுதியொன்று காணப்படுகிறது.
மிக நீண்ட காலமாக சிதைந்த நிலையில் இந்தக் கட்டடப் பகுதி இங்கு காணப்படுகின்ற போதும், தற்போதுதான் இதன் புராதனத் தன்மை குறித்த பேச்சுக்கள் வெகுவாக எழுந்துள்ளன.
சிதைந்த இந்தக் கட்டடம் செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள், சோழர்களின் ஆட்சியின்போது பொலனறுவையில் இந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்திய செங்கற்களுக்கு ஒப்பானவையாக இருக்கின்றன என்று, ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத் தலைவர் கோ. கமலநாதன் கூறுகின்றார்.
இலங்கையின் பொலனறுவை பிரதேசத்தைத் தலைநகராகக் கொண்டு, 11ஆம் நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சி நிலவியமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும், மாட்டுப்பளை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த கட்டடத்தின் வரலாறு தொடர்பில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எவரும் இதுவரையில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"எனது பதினைந்து வயதில் சிதைந்த இந்தக் கட்டடத்தை நான் கண்டிருக்கின்றேன். இந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் அப்போது காடு வளர்ந்திருந்தது. எனவே, கட்டடப்பகுதிக்குள் அநேகமாக யாரும் அப்போது போவதில்லை. மேலும், இப்போது இந்தக் கட்டடம் இருப்பதை விடவும் அப்போது உயரமாக இருந்தது" என்கிறார் ஓய்வு பெற்ற அதிபர் வி. ஜெயநாதன். இவருக்கு இப்போது 75 வயதாகிறது. ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரான இவர் - அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
புராதன ஆலயமொன்றின் எஞ்சிய பகுதி என நம்பப்படும் இந்தக் கட்டடத்திலுள்ள செங்கற்கள், இப்போது இப்பிராந்தியத்தில் புழக்கத்திலுள்ள சாதாரண செங்கற்களை விடவும் பெரியவையாகக் காணப்படுகின்றன.
சிதைந்த கட்டடப் பகுதிலுள்ள செங்கல் ஒன்றின் நீளம் 28 சென்டி மீட்டர்களாக உள்ளது. அகலம் 13.5 சென்டி மீட்டர்களாகவும் , உயரம் 5.5 செ.மீட்டர்களாகவும் உள்ளன.
ஆனால், தற்போது இப்பகுதியில் புழக்கத்திலுள்ள சாதாரண செங்கல் ஒன்றின் நீளம் 21 சென்றி மீற்றர்களாகவும், அகலம் 09 சென்டி மீட்டர்களாகவும், உயரம் 6.5 சென்டி மீட்டர்களாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, குறித்த கட்டடச் சிதைவுக்கு அருகில் பள்ளமான ஒரு இடமும் காணப்படுகிறது. இது சிதைந்த நிலையில் காணப்படும் புராதன ஆலயத்துக்குரிய தீர்த்தக் கரையாக இருக்கலாம் எனவும் இங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில், மேற்படி சிதைந்த கட்டடத்திலிருந்து எடுக்கப்பட்ட செங்கல் ஒன்று, அருகிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு, அண்மையில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்