You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்ததால் 9 மாதம் சிறையில் இருந்தாரா டாக்டர் கஃபீல்?
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர் கஃபீல் கான் 8 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ளார். யார் இந்த கஃபீல் கான்? எதற்காக இவர் சிறை சென்றார்? சமூக ஊடகங்களில் இவரது புகைப்படங்கள் வைரலாக பகிரப்படுவதற்கு காரணம் என்ன?
கடந்த ஆண்டு கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரியில் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தன. நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் இக்குழந்தைகள் கொத்து கொத்தாக உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு பணிபுரிந்த குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான், அலைந்து திரிந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், அவர் மீதே வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கோரக்பூர் சிறையில் அடைத்தனர்.
அப்போது, குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதால் அல்ல என்றும், குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அப்பகுதியில் நிலவும் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்க நோய் மற்றும் பிற காரணங்களால் இறந்தன என்றும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் கூறியிருந்தார்.
சுமார் 8 மாதங்கள் சிறையில் இருந்த மருத்துவர் கஃபீல் கான், தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். அவர் அழுதபடியே, அவரது தாயை கட்டி அணைக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகின்றன.
சிறையில் இருந்த போது கஃபீல் கான் தன் கைப்பட எழுதிய கடிதமும் வெளிவந்துள்ளது.
கடிதத்தின் தமிழாக்கம்:
நான் உண்மையிலேயே குற்றவாளியா?
கடந்த 8 மாதங்களாக சிறையில் பொறுக்க முடியாத சித்தரவதை மற்றும் அவமானத்தை அனுபவித்த பிறகு, என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி… நான் உண்மையிலேயே குற்றவாளியா? இதற்கு என் அடி மனதில் இருந்து வந்த பதில் - இல்லை. இல்லவே இல்லை.
2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மருத்துவமனையில் நடந்த சம்பவம் தெரிய வந்தவுடன் ஒரு மருத்துவராக, ஒரு தந்தையாக, ஓர் இந்திய குடிமகனாக என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தேன். ஆக்சிஜன் வாயு பற்றாற்குறையால் உயிருக்குப் போராடி வந்த பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் முடிந்த நடவடிக்கையை எடுத்தேன்.
எனக்கு தெரிந்தவர்களிடம் பேசி, அலைந்து, திரிந்து, அழுது, கத்தி ஒரு மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன்.
பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. நிர்வாகத் தவறால் இந்த சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் இதனை சரிசெய்ய முயற்சி செய்வதை நான் நிறுத்தவில்லை.
ஆகஸ்டு 13ஆம் தேதி காலை உத்தர பிரதேச முதல்வர் யோகி மகாராஜ் மருத்துவமனைக்கு வந்தபோது என் வாழ்க்கையே மாறிவிட்டது. அவர் என்னை பார்த்து நீதான் கஃபீலா? நீதான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்தாயா? என்று கேட்டார். நான் அதற்கு ஆம் என்று கூறினேன்.
கோபமடைந்த யோகி, இதெல்லாம் ஏற்பாடு செய்ததால் நீ பெரிய ஹீரோ ஆகிவிட்டதாக நினைப்பா? நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
யோகிஜி ஆத்திரம் அடைந்ததற்கு காரணம், இந்த சம்பவம் எப்படி ஊடகங்களுக்கு சென்றது என்பது குறித்துதான்.
அல்லா மீது ஆணையாக நான் எந்த ஊடகத்திடமும் சொல்லவில்லை. அவர்கள் ஏற்கனவே அங்கு இருந்தார்கள்.
இதனையடுத்து என் வீட்டிற்கு வந்த போலீஸார், என் குடும்பத்தினரை மிரட்டி கொடுமை செய்தனர். என்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்று பேசப்பட்டது. என் அம்மா, மனைவி, என் குழந்தைகள் என என் குடும்பமே பயந்து போனது.
என் குடும்பத்தினர் அவமானப்படாமல் இருக்க, நானே சென்று சரணடைந்தேன். நான் எந்த தப்பும் செய்யாததால் நீதி கிடைக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் இல்லை. நாட்கள் ஓடின, மாதங்கள் கழிந்தன. ஆகஸ்டு 17 முதல் ஏப்ரல் 18 வரையில்....
எனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்பினேன். அப்போதுதான் தெரிந்தது, நீதித்துறையே ஒரு விதமான அழுத்தத்தில் இயங்குகிறது என்று.
150 கைதிகள் மத்தியில் சிறிய இடத்தில் படுத்துக் கொண்டு, இரவில் கொசுக்கடியால் அவதிப்பட்டு, உயிர் வாழ்வதற்கு அங்கு கிடைக்கும் உணவை விழுங்கி, அரை நிர்வாணமாக குளித்து, உடைந்த கதவுகள் கொண்ட கழிவறையை பயன்படுத்தி, என் குடும்பத்தினரை சந்திக்க ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளுக்காக ஒவ்வொரு வாரமும் காத்திருப்பேன்.
எனக்கு மட்டுமல்லாமல் என் குடும்பத்தினரின் வாழ்க்கையும் நரகமானது. காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்திற்கும் - கோரக்பூருக்கும் அலகாபாத்துக்கும் நீதி கேட்டு அலைந்தனர். எல்லாம் வீணாகிப் போனது.
என் குழந்தையின் முதல் பிறந்தநாளைக்கூட என்னால் கொண்டாட முடியவில்லை. ஒரு குழந்தைகள் நல மருத்துவராக இருந்து, என் குழந்தை வளர்வதை பார்க்க முடியாதது வேதனையாக உள்ளது.
என் குழந்தை எப்போது நடக்க ஆரம்பித்தாள், எப்போது பேசினாள் என்று கூட என்னால் பார்க்க முடியவில்லை.
தற்போது மீண்டும் அந்த கேள்வி என் மனதை துளைக்கிறது. நான் உண்மையிலேயே குற்றவாளியா - இல்லை, இல்லவே இல்லை.
மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தீர்ந்து போனதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நான் உதவி மட்டுமே செய்தேன்.
சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள்தான் இதில் குற்றவாளிகள். இது முழுமையாக நிர்வாகத்தின் தவறாகும். அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள என்னை பலியாடாக ஆக்கிவிட்டார்கள். எங்களை சிறையில் தள்ளி, உண்மைகள் அனைத்தும் கோக்பூர் சிறைக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் விரைவில் வெளியே வந்து என் குடும்பம் குழந்தையுடன் இருப்பேன் என்று நம்புகிறேன். உண்மை ஒரு நாள் வெளிவரும். நீதி வெல்லும்.
இப்படிக்கு,
மனமுடைந்த அப்பா/கணவர்/மகன்/நண்பன்
மருத்துவர் கஃபீல் கான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்