You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு: செய்தியாளர்கள் உட்பட 25 பேர் பலி
ஆஃப்கான் தலைநகர் காபுலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 25 பேர் பலியாகி உள்ளனர். ஏ எஃப் பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல செய்தியாளர்களும் இதில் உயிரிழந்துள்ளனர்.
தனது முதன்மை புகைப்பட கலைஞர் ஷா மராய், இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
காபுலின் ஷாஷ்தரக் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை, மோட்டார் பைக்கில் சென்ற ஒருவர் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
முதல் வெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு பின்னர், பொதுமக்களும் செய்தியாளர்களும் அங்கு திரண்டபோது இரண்டாவது குண்டு வெடித்தது.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது
செய்தியாளர்களை இலக்காக வைத்தே இரண்டாவது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு வைத்திருந்தவர் ஒரு செய்தியாளர் போல வேடமிட்டு, கூட்டத்தில் அதனை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் குறைந்தது 8 செய்தியாளர்கள், 4 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் நஜிப் தனிஷ் பிபிசியிடம் கூறியுள்ளார்.
இந்த இரட்டை குண்டு வெடிப்பில் 45 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உளவுத்துறையின் தலைமை அலுவலகம்தான் தங்கள் இலக்கு என்று குறிப்பிட்டு ஐ.எஸ் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்