You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்டா பகுதிகளில் மத்திய படையினர் குவிக்கப்படுவது ஏன்?
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மீத்தேன் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மத்திய அரசின் அதி விரைவுப் படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன் தினம் அங்குள்ள விவசாய நிலத்தில் மீண்டும் எண்ணெய்க் குழாய் உடைந்து பதற்றத்தை அதிகரித்ததுள்ளது.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் தீவிரமாகி வருகிறது.இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர் என போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திடீரென மத்திய அரசின் அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
''உணவு பாதுகாப்பு மண்டலத்தில் இவர்களை கொண்டுவரும் செயல்களை மத்திய அரசு செய்யக்கூடாது. டெல்டா மாவட்டங்களில் மக்களை பயமுறுத்தும் செயலை மத்திய அரசு செய்வதை கைவிட வேண்டும்'' என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் முகாமிட்டுள்ள மத்திய அதிவிரைவு படையின் 40 பேர் கொண்ட ஒரு குழு இன்று கும்பகோணம், திருவிடைமருதூர் காவல் நிலையங்களில் இருந்து பிரச்சினைக்குரிய இடங்களுக்கு விரைவாக செல்லும் வழித்தடங்கள் குறித்து கேட்டறிந்தனர். இதன் பிறகு இக்குழு தஞ்சைக்கு புறப்பட்டு சென்றனர்.
மத்திய அதி விரைவுபடை வீரர் ஒருவர் கூறுகையில், '' நாங்கள் வந்திருப்பது பதட்டமான பகுதிகளுக்கு விரைவாக வந்து சேரவும் அந்த பகுதிகள் குறித்த ஆய்வும் மட்டுமே. எங்களுக்கான ஒத்திகை பயிற்சி'' என்றார்.
வழக்கமான நடவடிக்கைகளுக்கிடையே திடீரென அதிவிரைவுப் படையினர் டெல்டா பகுதிகளில் குவிக்கப்பட்டு வருவது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் வரதராஜீ கூறுகையில், "இது சாதாரண நிகழ்வு தான். மக்கள் அச்சப்பட வேண்டாம். அதிவிரைவுப் படையினர் ஒவ்வொரு ஊராக சென்று வருவதாகவும், போராட்டங்களை ஒடுக்குவதற்க்கு வந்ததாக கூறப்படும் தகவல் உண்மையல்ல", என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்