நாளிதழ்களில் இன்று: ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர்

மகாபாரத காலத்திலேயே இணையதள வசதி இருந்தது என்று கூறிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், 1997இல் இந்தியாவைச் சேர்ந்த டயானா ஹைடனுக்கு 'மிஸ் வோர்ல்டு' உலக அழகிப் பட்டம் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

"நாம் பெண்களை லட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் பார்க்கிறோம். ஐஸ்வர்யா ராய் இந்தியப் பெண்களைப் பிரதிபலிக்கிறார். அவருக்கு உலக அழகிப் பட்டம் வழங்கப்பட்டதுகூட சரி. ஆனால், டயானா ஹைடன் எந்த வகையில் அழகு என்று எனக்குப் புரியவில்லை," என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது கூறியுள்ளார்.

தி இந்து (ஆங்கிலம்) - தேவையான தீர்ப்பு

சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பாலியல் வல்லுறவு வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறித்து ’தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

பொதுமக்கள் ஆதரவும், அரசியல் செல்வாக்கும் உள்ள, அதிகாரம் மிக்க மத அமைப்புகளின் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது இந்நாட்டில் கடினம் என்றும் கரை படிந்த நபர்கள் இந்திய ஆன்மீகத்தின் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தக் காலக்கட்டத்தில் இது அவசியமான தீர்ப்பு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி - ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமல்ல

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மக்களின் கருத்தை அறிய தேசிய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

தேர்தல் செலவை மிச்சமாக்க தேவையில்லாத பிரச்சனைகளை இந்திய ஜனநாயகம் வரித்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் இந்தியா போன்றதொரு பெரிய நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது விவாதத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியமல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - சாலை விபத்தில் இறக்கும் சிறார்கள்

இந்தியாவில் நாளொன்றுக்கு சாலை விபத்தில் இறக்கும் 18 வயதுக்கும் குறைவானவர்களின் எண்ணிக்கை 29 என்று மத்திய அரசின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்.

ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இத்தகைய விபத்துகளில் நாட்டிலேயே முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: