You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீதிபதி லோயா மரணம்: சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு
நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் கோரி மும்பை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான்வில்கர் மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதி லோயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நான்கு நீதிமன்ற அலுவலர்களின் வாக்குமூலங்களை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது தான் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இவ்வழக்கில் நீதிபதிகளையே சதிகாரர்கள் போல சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கண்டித்துள்ளனர்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் விட்டுவைக்கவில்லை என்றும் இது நீதித்துறையை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானதுதான், அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதமன்றம், இது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாக்பூர் சென்றிருந்த லோயா 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பான பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.
லோயாவின் மரணம் சர்ச்சைகளுக்கு உள்ளாவது ஏன்?
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதால்தான் ஷொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டதாக குஜராத் மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு சிறப்பு காவல் பிரிவு தெரிவித்திருந்தது. மேலும் அப்போதைய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோதியை கொலை செய்ய சொராபுதீன் ஷேக் சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறப்பட்டது.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று, ஹைதராபாதிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணித்த சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கௌசர் பி ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
பிறகு மேற்கொள்ளப்பட்ட என்கவுன்ட்டரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஷொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் போலியானது என்றும், இதில் அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், 2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு போலி என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைகளின் பின்னணியில் அமித்ஷா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
பிறகு, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் விசாரணை தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, அமித் ஷா மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. குஜராத் மாநிலத்திற்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தப்படவேண்டும், விசாரணையின் போது நீதிபதியை மாற்ற முடியாது. அதன் பிறகு வழக்கில் நடைபெற்ற முக்கிய திருப்பங்கள்:
- சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 மே மாதத்தில் விசாரணைக்கு ஆஜாராகுமாறு அமித் ஷாவுக்கு சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க கோரி அமித் ஷாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 ஜூன் 26 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாற்றப்பட்டார்.
- இதன்பிறகு வழக்கு நீதிபதி லோயாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி லோயாவின் நீதிமன்றத்தில் அமித் ஷா ஆஜராகவேயில்லை. 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் நீதிபதி லோயா இறந்தார். அவரது மரணம் தொடர்பான பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.
- நீதிபதி லோயாவின் மரணத்திற்கு பிறகு சொராபுதீன் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.வி. கோசவி, புலனாய்வு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, 2014 டிசம்பரில் அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்