You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழகம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்திருந்த கெடு இன்று (வியாழக்கிழமை) முடிவடையும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையத்தில், செல்போன் கோபுரத்தில் ஏறிய 14 பேர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர்.
இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல் புதூரிலும் சிலர் செல்போன் கோபுரம் ஒன்றில் ஏறி போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட்டனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவவேதும் எடுக்காத நிலையில், தமிழக அரசு அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய சட்ட ஆலோசனை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று, ,வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
விரைவிலேயே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், "காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்" என்று கூறியுள்ளார். மேலும் நீதி வெல்லும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் வலியுறுத்தல் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஸ்கீம் என்றால் என்ன? அதாரிட்டி என்றால் என்ன என சந்தேகம் கேட்பது கால தாமதத்திற்கான வழி. மாநிலங்களுக்கிடையில் பாயும் நதிகள் தொடர்பான சட்டம் 6 ஏ-விலேயே ’ஸ்கீம்’ என்றால் என்ன என விளக்கியிருக்கிறார்கள். ஓட்டுவேட்டைக்காக இந்த விளையாட்டை விளையாடாதீர்கள்."
"தயவுசெய்து மக்களுக்கான தேவையைப் பாருங்கள். தமிழக அரசு இதற்கு வலியுறுத்தாவிட்டால், யார் பெயரைச் சொல்லி அவர்கள் ஆட்சி நடத்துகிறார்களோ அந்தப் பெயருக்கே களங்கமாக அமையும்" என்று கூறினார்.
இது தொடர்பாக வலியுறுத்த தமிழக முதல்வரிடம் நேரம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்தை ஆதரிப்பதாகவும் கமல் கூறினார்.
இதற்கிடையில் தில்லியில் கடந்த நான்கு நாட்களாகப் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் இன்று நாடாளுமன்ற சாலையில் ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்