You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தனிநபர்களின் அந்தரங்க தரவுகளை திருடியதா பிரதமர் மோதியின் 'நமோ' செயலி?
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அதிகாரபூர்வ மொபைல் செயலி 'நமோ' தனிநபரின் அந்தரங்க தரவுகளை அனுமதியின்றி மூன்றாம் நபர்களுக்கு அனுப்பியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஃபிரான்ஸை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நமோ செயலி அதன் பயன்பாட்டாளர்களின் தரவுகளை ஒரு மூன்றாம் தரப்பு நபருக்கு அனுப்புவதாகவும், அது அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை நரேந்திர மோதி தலைமையிலான பாஜக மறுத்துள்ள நிலையில், இந்த தரவுகள் பயன்பாட்டாளர்களுக்கு ஏற்றத்தக்க வகையில் உள்ளடக்கத்தை வழங்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்தது.
கடந்த சனிக்கிழமையன்று, எலியட் ஆல்டெர்சன் என்ற புனைப்பெயரில் ட்விட்டரில் இயங்கிவரும் ஃபிரெஞ்சு கணினி ஆய்வாளர் ஒருவர், நமோ ஆண்ட்ராய்டு செயலியில் ஒருவர் புதிய கணக்கை தொடங்கும்போது கைப்பேசி குறித்த அனைத்து தகவல்களும், பயன்பாட்டாளரின் இமெயில், புகைப்படம், பாலினம், பெயர் போன்ற சுயவிவர தரவுகளும் மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றிற்கு பயன்பாட்டாளரின் அனுமதியின்றி நமோ செயலி அனுப்புவதாக கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஞாயிறன்று, பிரதமர் மோதியை கேலி செய்யும் விதத்தில் ட்வீட்களை பதிந்திருந்தார்.
மோதியின் நமோ செயலி ரகசியமாக ஆடியோ, வீடியோ மற்றும் நண்பர்களின் தொலைப்பேசி எண்களை பதிவுசெய்வதாகவும், இந்தியர்களை வேவு பார்க்கும் பிக் பாஸ்தான் மோதி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோதியை கடுமையாக சாடியிருந்தார் ராகுல்.
மேலும், நமோ செயலியை கைப்பேசிகளிலிருந்து நீக்கக்கோரும் #DeleteNaMoApp என்ற ஹேஷ்டேக்கையும் பதிந்திருந்தார். இது இந்தியளவில் ட்ரெண்டானது.
ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளித்த பாஜக, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற பகுப்பாய்வு நிறுவன சர்ச்சையிலிருந்து திசைத்திருப்ப ராகுல் முயற்சிக்கிறார் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது.
தரவுகளை பகுப்பாய்வு செய்யும் சர்ச்சைக்குரிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு செய்திகள் சுட்டிக்காட்டுவதாக கடந்த வாரம் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இக்குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதற்கிடையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), எலியட் ஆல்டெர்சன் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செயலியில் சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செயலியில் இணைக்கப்பட்டிருக்கும் இணையதளத்தின் ஐபி முகவரி சிங்கப்பூரில் அமைந்துள்ளது என்றும், ஒரு இந்திய அரசியல் கட்சி ஏன் இந்தியாவிலேயே ஐபி முகவரியை வைப்பதுதான் சரியாக இருக்கும் என்றும் எலியட் ஆல்டெர்சன் குறிப்பிட்டுள்ளார்.
நமோ செயலி மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயலியில் உள்ள குறைபாடுகளை ஆல்டெர்சன் சுட்டிக்காட்டியதை அடுத்து குறிப்பிட்ட செயலிகளில் அந்தரங்க கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு நமோ செயலியை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதியை ட்விட்டரில் சுமார் 41.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்