You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கல்விக்கு இல்லை”
22 சதவீத அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல், கணித ஆசிரியர்கள் இல்லை என்கிறது சமக்கல்வி இயக்கம் எனும் அரசு சாரா அமைப்பு மேற்கொண்ட ஆய்வு. காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசின் அலட்சியத்தை இது காட்டுகிறதா? மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசு பள்ளிகளின் தரம் மேம்பட்டதாக உள்ளதா? என்று பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
நேயர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.
சரோஜா பாலசுப்பிரமணியன் என்கிற நேயர் தெரிவித்துள்ள கருத்தில், "டாஸ்மாக்கிற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை கூட கல்விக்கு அரசு கொடுப்பதில்லை. தனியார் கல்விக்கூடங்களுக்கு இணையாக அரசு பள்ளிகளுக்கும் தரத்தையும் வசதிகளும் செய்து கொடுத்தால் யார்தான் அங்கு பிள்ளைகளை சேர்க்க மாட்டார்கள். அரசு காட்டும் அலட்சியம்" என்று கூறியுள்ளார்.
ரங்கசாமி குமரன் என்கிற நேயர் ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கூடங்களில் போதிய வசதிகள் இல்லை. நகர்ப்புறங்களில் கட்டணக் கொள்ளை கொடி கட்டிப் பறக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
துரை முத்துசெல்வம் என்கிற நேயர், மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத அரசும் இந்த அரசு தரும் கல்வியின் தரமும் தமிழர்களை தமிழகத்தை விட்டு தாண்டாத வகையில் சுருட்டி விட்டது என்கிறார்.
கல்லூரியில்கூட செய்முறை கிடையாது. இக்கால கட்டத்திற்கேற்றார்போல் மேம்பாடு வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை கூடாது என்று ஆலோசனைகள் அளித்துள்ளார் மாலதி ரவி.
தமிழ்வேல் என்பவர், "தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதில்லை. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டுமல்ல வகுப்பறை, கழிவறை,குடிநீர், போய்வர பேருந்து என்று எதுவுமே இல்லை. படிப்பவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்கள் தானே என்கிற அலட்சியமே இதற்கு காரணம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆர். எஸ். அருண் குறிப்பிடுகையில், "ஆம், இது அரசின் அலட்சியம் தான். சமமான கல்வி தரம் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கிறார்.
அப்துல் வஹாப் என்ற நேயர், இதேோல அரசு துறைகளில் பல இடங்கள் காலியாக இருந்தும் அதை நிரப்ப அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரிய வில்லை என்று கூறுகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்