You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவிலுக்குப் போகிறவர்கள் தி.மு.கவுக்கு வாக்களிக்க வேண்டாமென சொன்னாரா ஸ்டாலின்?
தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதைப் போல பொய்யான கருத்துக்களுடன் 'மீம்ஸ்' போன்றவற்றை வெளியிட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'கோவிலுக்குச் செல்லும் யாரும் தி.மு.கவுக்கு வாக்களிக்கத் தேவையில்லை; அப்படி கோவிலுக்குச் செல்வோர் வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை" என மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்ததைப் போல கிராஃபிக்ஸில் படம் ஒன்று உருவாக்கப்பட்டு, அந்தப் படம் வாட்ஸப், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் இன்று தீவிரமாக பரப்பப்பட்டது.
மேலும், இந்தக் கருத்து தொலைக்காட்சிகளில் வெளிவந்ததைப்போல சில தனியார் தொலைக்காட்சிகளின் சின்னங்களுடனும் கிராஃபிக்ஸ் படங்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டன.
இது தவிர, 'விஷ்வ ஹிந்து பரிஷத் ரதத்தை குண்டு வைத்துத் தகர்க்க, தி.மு.க. தொண்டர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்' என்ற கிராஃபிக்ஸ் படமும் இதேபோல சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
இதையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதனை நேரில் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டவர்கள், மு.க. ஸ்டாலின் சார்பில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
'நான் சொல்லாத கருத்துக்களை சொல்லியதாகவும், அந்தக் கருத்துக்களை சில தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது போலவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அத்தகைய விஷமச் செய்திகளின் நகல்களை, தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இத்துடன் இணைத்துள்ளேன். எனவே என்னுடைய ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கி போலிப்பதிவுகளை பதிவிட்டு, நான் சொல்லாத செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் போலி பதிவிட்டு வருபவர்கள், மீது உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்' என மு.க. ஸ்டாலின் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.
அந்தப் பதிவுகளின் காட்சிகளும் அந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில், தொலைக்காட்சிகளின் சின்னங்களுடன் பொய்ச் செய்திகளை வெளியிடுவது, தலைவர்கள் கூறாத கருத்துகளைக் கூறியதுபோல பரப்புவது சமீப காலமாக வெகுவாக அதிகரித்துள்ளது.
பிற செய்திகள்:
- ஜார்கண்ட்: முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்து கொன்றது தொடர்பாக 11 பேருக்கு ஆயுள்
- ஏழு மடங்காக அதிகரிக்கும் உலகின் தண்ணீர் தேவை #WorldWaterDay
- `4500 ஆண்டுகளுக்கும் பழமையானது` - தமிழின் பெருமையை சொல்லும் ஆய்வு!
- தவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்
- 'பாண்டவராக' விரும்பும் ராகுல்காந்தி மகாபாரதத்தில் இருந்து கற்க வேண்டியது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்