திரிபுரா: கம்யூனிஸ்ட் கோட்டையை தகர்த்தது பாஜக

கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த திரிபுரா மாநிலத்தில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்தது.

கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெறாத பாஜக அங்கு 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான பூர்வகுடி மக்கள் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணிக்கு இது மிகப் பெரும் பின்னடைவு.

மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்கார் எளிமைக்கு பெயர் பெற்றவர். 1993ல் அக்கட்சியின் தசரத் தேவ் வெற்றி பெற்று முதல்வரானார். 1998ல் மீண்டும் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணிக் சர்க்காரை முதல்வராக்கியது.

அதைத் தொடர்ந்து, 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் மார்க்சிஸ்டுகள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து நான்கு முறையாக மாணிக் சர்க்கார் முதல்வராகப் பதவி வகித்தார்.

இடதுசாரிகளுக்கு மேலும் பின்னடைவு

இந்தியாவில், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலேயே கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடித்து வந்தனர். கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்துகொண்டிருந்த நிலையில், அசைக் கமுடியாத செல்வாக்கோடு அவர்கள் ஆட்சி செய்துவந்தது மேற்கு வங்கமும், திரிபுராவும்தான்.

மேற்கு வங்கத்தில் 1977 முதல் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் 2011ல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரசிடம் ஆட்சியை இழந்தனர். அப்போது முதல் அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து தேர்தலில் தோல்வியையே சந்தித்து வருகின்றனர்.

கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சிக்கு நிகராக பாஜக அந்த மாநிலத்தில் வளர்ந்து வருகிறது.

இந் நிலையில், கம்யூனிஸ்டுகளின் மற்றொரு கோட்டையான திரிபுரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சியையும், பாஜகவின் எழுச்சியையும் காட்டுகின்றன.

மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பாஜக 35 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி (ஐ.பி.எஃப்.டி.) 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பாஜக 43 சதம் வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42.7 சத வாக்குகளையும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்நணி 7.5 சதம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளபடி மூன்று வடகிழக்கு மாநிலத் தேர்தல் முடிவு நிலவரம்.

மேகாலயா

பல முனைப் போட்டி நிலவும் மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில், வெற்றியும் பெற்று காங்கிரசுக்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

இறுதிமுடிவுகள்

பாஜக - 2

இந்திய தேசிய காங்கிரஸ்- 21

தேசியவாத காங்கிரஸ் - 1

மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி- 2

தேசிய மக்கள் கட்சி - 19

ஐக்கிய ஜனநாயகக் கட்சி - 6

குன் ஹின்னியூட்ரெப் தேசிய விழிப்பு இயக்கம் - 1

மக்கள் ஜனநாயக முன்னணி - 4

சுயேச்சை- 3

வாக்கு சதவீதம்

காங்கிரஸ் கட்சி 28.5 சத வாக்குகளையும், தேசிய மக்கள் கட்சி 20.6 சத வாக்குகளையும், ஐக்கிய ஜனநாயக கட்சி 11.6 சத வாக்குகளையும் பெற்றுள்ளன.

நாகாலாந்து

இம்மாநிலத்தில் பாஜகவும், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் (என்.டி.பி.பி.) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

நாகா மக்கள் முன்னணியும் (என்.பி.எஃப். ), தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.)யும் ஓர் அணியாகப் போட்டியிட்டன. 2003ம் ஆண்டில் இருந்து அந்த மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி ஆட்சியில் இருக்கிறது. இடையில் 2003ம் ஆண்டு மூன்று மாதம் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நிலவியது.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் 57

பாஜக - 11

நாகா மக்கள் முன்னணி- 27

ஐக்கிய ஜனதா தளம் - 1

தேசிய மக்கள் கட்சி - 2

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - 15 வெற்றி, முன்னிலை -1

சுயேச்சை -1

நாகா மக்கள் முன்னணி 39.1 சத வாக்குகளையும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25.5 சத வாக்குகளையும், பாஜக 14.4 சத வாக்குகளையும், ஐக்கிய ஜனதா தளம் 4.3 சதம், காங்கிரஸ் 2.1 சத வாக்குகளையும் பெற்றுள்ளன.

திரிபுரா

மொத்த இடங்கள்- 59

இறுதி முடிவுகள்:

பாஜக - 35

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 16

திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி - 8

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :