You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா சிலை அவரது முக அமைப்பை போல் அமையாதது ஏன்? சிற்பியின் விளக்கமும் வேதனையும்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளன்று அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட்ட அவரது வெண்கல சிலை அவரைப் போல இல்லை என்று எழுந்த சர்ச்சையால் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகவும், சிலையைத் திருத்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் சிற்பி சிவவரபிரசாத் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களையும் கேட்டு மனஅழுத்தத்தில் தவிப்பதாக கூறியுள்ள பிரசாத், அதிமுகவினர் ஜனவரி கடைசி வாரத்தில்தான் சிலை செய்ய தன்னிடம் கேட்டதாகவும், முழுஉருவ சிலை செய்ய ஒரு மாதம் தேவைப்படும் என்றாலும் 20 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் சிலை முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
தங்கப்பூச்சு வேலை முடிக்கவில்லை
''ஒரு முழுஉருவ சிலை செய்ய ஒரு மாதம் கட்டாயம் தேவை. ஜெயலலிதா சிலையில் தங்க நிறப்பூச்சு வேலை இன்னும் முடிக்கப்படவில்லை. சிலையை அவரது பிறந்த நாளன்று நிறுவ வேண்டும் என்பதாலும், வெறும் இருபது நாட்களில் முடித்தாக வேண்டிய இக்கட்டான சூழலில் இருந்தேன். தங்க நிற வண்ணத்தை புருவம், கண் மற்றும் வாய் பகுதியில் பூசி சில வேலைப்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. இதனை முடித்தால் சிலை பூரணமாகிவிடும்,'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சிற்பி பிரசாத்.
முதல்வர் மனைவியைப் பார்த்ததில்லை
ஜெயலலிதா சிலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதா போல இருப்பதாக எழுந்த விமர்சனங்கள் பற்றிக்கேட்டபோது, ''ஒரு சிலையை செய்யும்போது, முதலில் அந்த நபரின் பலவிதமான படங்களைப் பார்த்து, அவரின் வடிவமைப்பை நன்கு கவனித்து மாடல் வடிவம் செய்யப்படவேண்டும். பின்பு வெண்கலம் அல்லது எந்த விதமான உலோகத்தில் சிலை வேண்டுமோ, அதில் செய்யவேண்டும். நான் இதுவரை முதல்வரின் மனைவியின் படத்தையோ, அவரையோ நேரில் சந்தித்ததில்லை. ஜெயலலிதாவின் படங்களைக் கொண்டுதான் சிலையைச் செய்தேன். தற்போது மூக்கு, கண் பகுதிகளில் வடிவத்தைச் சரிசெய்யமுடியும் என்று நம்புகிறேன்,'' என்று தெரிவித்தார்.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் பல அரசியல் தலைவர்களின் சிலைகளைச் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் சமீபத்தில் சென்னை துறைமுகத்தில் நிறுவப்பட்டுள்ள சிங்காரவேலர் மற்றும் பாபு ஜகஜீவன் ராம் ஆகியோரின் சிலைகளை வடிவமைத்ததற்கு சிறந்த பாராட்டைப் பெற்றதாக பிரசாத் தெரிவித்தார்.
மாற்றி அமைக்க தயாராக இருக்கிறேன்
அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், சிலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறியுள்ளது பற்றிக் கேட்டபோது,''தற்போதுவரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் யாரும் சிலையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. கேட்டால், புதிதாகச் சிலை செய்து தரவும் அல்லது தற்போது உள்ள சிலையில் மாற்றங்கள் செய்து தரவும் தயாராக இருக்கிறேன். புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள 15 அடி உயர திருவள்ளுவர் சிலை, காரைக்காலில் நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலை என பல சிலைகளை வடித்துள்ளேன்,''என்றார்.
"விமர்சனங்கள் என்னை காயப்படுத்தியுள்ளன..."
''என் தாத்தா கண்ணப்பா, தந்தை அன்னபூர்ணய்யா ஆகியோரிடம் சிறுவயதில் இருந்து சிற்பக்கலையை கற்றுக்கொண்டேன். என் தம்பி காமதேனு பிரசாத் எனக்கு உதவுகிறார். மிகவும் தொழில் தர்மத்துடன் வேலை செய்கிறேன். இந்த முறை நான் சந்தித்த விமர்சனங்கள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளன. தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்,'' என்றும் கூறுகிறார்.
வழக்கமாக இந்த உயரத்தில் வெண்கல சிலை செய்ய 400 கிலோ வெண்கலம் தேவைப்படும். வடிவமைப்பு கட்டணம் உட்பட மொத்தமாக 7.5 லட்சம் தொகை பெறுவேன். ஆனால், இந்த ஏழு அடி உயரத்தில் வடித்த ஜெயலலிதா சிலையை செய்து முடிக்க ஏழு லட்சம் ரூபாய்தான் பெற்றேன் என்று கூறிய பிரசாத், சிலையில் திருத்தம் செய்ய பணம் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- சிரியா போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா?
- ஸ்ரீதேவி - இந்திய சினிமாவின் 'மயிலு'
- அவமானப்படுத்தப்பட்டாரா ஜஸ்டின் ட்ரூடோ? - கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன?
- ஷொராபுதீன் ஷேக் வழக்கில் மூன்று முறைகேடுகள்: குற்றம் சாட்டும் ஓய்வுபெற்ற நீதிபதி
- 'போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நீதி இல்லை': இலங்கை மீது ஐ.நா அதிருப்தி
- நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்
- கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :