நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த 1963ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவி தனது நான்காம் வயதில் 'துணைவன்' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 1976இல் வெளியான, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்த, 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதன் பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தியிலும் 1970களின் பிற்பாதியிலும், 1980களிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கினார்.

பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதேவி, 2013இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை 1996இல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி, 1997இல் வெளியான 'ஜூடாய்' எனும் இந்தி திரைப்படத்தில் நடித்த பின்னர் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார்.

பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் நடித்து, இந்தி மற்றும் தமிழில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படம் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றது.

2017இல் வெளியான 'மம்' எனும் இந்தி திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்தார். அது அவரது 300வது திரைப்படமாகும்.

ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :