பாஜக கூட்டணியில் தொடர முன்னாள் பிரிவினைவாதி விதித்த நிபந்தனை

    • எழுதியவர், மயூரேஷ் குண்ணூர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நாகலாந்தின் கலாசாரம் மற்றும் அடையாளத்தை காப்பாற்றும் முயற்சியில் தேவைப்பட்டால் தன்னுடைய தேர்தல் கூட்டாளியான பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகவும் தயார் என்று சொல்கிறார் நாகாலாந்து ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நிஃப்யூ ரிவோ.

நாகாலாந்து மாநிலத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் நாகாலாந்து ஜனநாயக முன்னேற்றக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளரான நிஃப்யூ, பிபிசிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.

மாநிலத்தில் வசிக்கும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான கிறித்துவ மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து தன்னுடைய கட்சி வெளியேறிவிடும் என்று அவர் கூறினார்.

'பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்வா கொள்கைகள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது' என்று அவர் கூறினார்.

'எங்கள் மக்களை பாதுகாப்பதற்காகவே நான் இருக்கிறேன். மக்களின் மதங்களை, அவர்களின் உணர்வுகளை பாதுகாப்பது எனது கடமை, அதில் எந்தவித சமரமும் செய்துக் கொள்ள முடியாது' என்று அவர் கூறினார்.

'ஆனால் நாகாலாந்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் 15 ஆண்டுகளாக கூட்டணியில் இருப்பதால், அவர்கள் தவறாக நடக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக' கூறும் அவர், 'இதுவரை நாகாலாந்து மக்களுக்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பாரதிய ஜனதா கட்சி நடந்து கொண்டதில்லை' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

'அரசியலமைப்பின் 25 வது பிரிவின்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று கூறிய ரியோ, அரசியலமைப்பின் 371A பிரிவின் கீழ் நாகாலாந்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்திருக்கிறது' என்பதையும் குறிப்பிட்டார்.

உங்கள் கூட்டணி வெற்றியடைந்து, நீங்கள் முதலமைச்சரான பிறகும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி ஏதாவது நடவடிக்கை எடுத்தால், நீங்கள் அவர்களுடனான கூட்டணியில் இருந்து விலகிவிடுவீர்களா என்று கேட்டோம்.

"ஆம், மக்களை ஒடுக்க முயற்சித்தால் நிச்சயம் நாங்கள் போராடுவோம்" என்று அவர் பதிலளித்தார்.

"2014ஆம் ஆண்டில் இருந்து டெல்லி அரசியலில் இருக்கிறார் ரியோ. நாட்டில் நடக்கும் பிரிவினைவாத அரசியல், சிறுபான்மை சமுதாயத்தை தாக்குவது போன்ற சம்பவங்கள் பற்றி கவலைப்படுகிறரா?"

"சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மிகவும் தவறானது என்று நாங்கள் கண்டிக்கிறோம். மிகப்பெரிய நாடான இந்தியாவில் பல வேறுபட்ட சமூக மக்கள் வாழ்கின்றனர். எனவே நாம் அனைவரும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும்" என்கிறார் நிஃப்யூ ரிவோ.

'நாகாலாந்து மாநிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கவும், ஊழலிருந்து மாநிலத்தை விடுவித்து மேம்படுத்தவும் பாடுபடப்போவதாக' உறுதி கூறிய அவர், 'மாநிலத்தின் வளர்ச்சிக்காக தரமான சாலைகள் அமைக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

'பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுடன் இணைந்து, அரசியல் பிரச்சனை உட்பட மாநிலத்தின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவோம்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :